பிரதமர் அலுவலகம்

தேவ்கரில் ரூ.16,800 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


இந்த திட்டங்கள் கட்டமைப்பு வளர்ச்சியை கணிசமாக ஊக்குவிப்பதோடு, இணைப்பு வசதிகளை மேம்படுத்தி, அப்பகுதியில் வாழ்க்கையை எளிதாக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் தேவ்கர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்

பாபா பைத்யநாத் கோவிலுக்கு நேரடி விமான போக்குவரத்து வசதியை வழங்கும் தேவ்கர் எய்ம்ஸில் உள்-நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்களை பிரதமர் அர்ப்பணித்தார்

“மாநிலங்களை வளர்ச்சியடைய செய்வதன் மூலம் நாட்டை வளர்ச்சியடைய செய்வது என்ற கொள்கையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்”

“ பற்றாக்குறையை வாய்ப்புகளாக மாற்றுவதற்காக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம்”

“ சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது, தேசிய சொத்துக்கள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது”

Posted On: 12 JUL 2022 2:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தேவ்கரில் இன்று ரூ.16,800 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை  தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஜார்க்கண்ட் ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மாநில அமைச்சர்கள்  மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பாபா பைத்யநாத்தின் ஆசிகளோடு, ரூ. 16,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டிருப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டங்கள், ஜார்க்கண்டின் அதிநவீன இணைப்பு வசதி, எரிசக்தி, சுகாதாரம், இறை நம்பிக்கை மற்றும் சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.

மாநிலங்களை வளர்ச்சியடைய செய்வதன் மூலம், நாட்டை வளர்ச்சியடைய செய்வது என்ற கொள்கையுடன் நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஜார்க்கண்டை நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப்போக்குவரத்து, நீர்வழிப்போக்குவரத்து என அனைத்து வழிகளிலும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகையை சிந்தனை மற்றும் உணர்வு மிக முக்கியமானதாகும். இந்த வசதிகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

ஜார்க்கண்ட் மாநிலம், இன்று  அதன் இரண்டாவது விமான நிலையத்தை பெற்றிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இது பாபா பைத்யநாத் பக்தர்களுக்கான வசதியை மேலும் எளிமைப்படுத்த உதவிகரமாக இருக்கும். உடான் திட்டத்தின் கீழ் சாமான்ய மக்கள் குறைந்த செலவில் விமான பயணம் மேற்கொள்ள செய்யும் வகையில், அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனை நாடு முழுவதும் தற்போது காண முடிவதாக  பிரதமர் குறிப்பிட்டார். உடான் திட்டத்தின் கீழ் கடந்த 5-6 ஆண்டுகளில் 70 இடங்களில் புதிய விமான நிலையங்கள், ஹெலி்காப்டர் இறங்கு தளங்கள் மற்றும் நீர்வழி விமான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   தற்போது  சாதாரண குடிமக்களும், 400க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் விமான பயணம் மேற்கொள்ளும் வசதியை பெற்றுள்ளனர்.  ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மிக குறைந்த செலவில் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.  தியோகரிலிருந்து இன்று கொல்கத்தாவிற்கு விமான போக்குவரத்து தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், விரைவில் ராஞ்சி, தில்லி மற்றும் பாட்னாவிற்கும் விமானங்கள் இயக்கப்படும் என்றார்.  பொக்காரோ மற்றும் தும்காவிலும், விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இணைப்பு வசதிகளுடன், நாட்டில் ஆன்மீகம் மற்றும் இறை நம்பிக்கை தொடர்பான முக்கிய இடங்களில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதிலும், மத்திய அரசு  கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரசாத் (PRASAD) திட்டத்தின் கீழ் பாபா பைத்யநாத் கோவிலில் பல்வேறு நவீன வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.  திட்டங்களுக்கு முழுமையான அனுகுமுறை வழிகாட்டும்போது, சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளிலும், வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாவதுடன், புதிய வசதிகள், புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எரிசக்தி சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த நாடு மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் உர்ஜா கங்கைத் திட்டம் பழைய நிலைமையை மாற்றியுள்ளதாக அவர் கூறினார். “பற்றாக்குறையை வாய்ப்புகளாக மாற்றுவதற்காக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார். இந்திய எரிவாயு ஆணையத்தின் ஜக்தீஸ்பூர்- ஹால்டியா-  பொக்காரோ  எரிவாயு குழாய்  வழித்தடத்தில், பொக்காரோ- அங்கூல் பிரிவு, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 11 மாவட்டங்களில்  நகர்ப்புற எரிவாயு வினியோக கட்டமைப்பை விரிவுபடுத்தும்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம் மற்றும் அனைவரும் முயற்சிப்போம் என்ற தாரக மந்திரத்தை அரசு பின்பற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதன் மூலம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுயவேலை வாய்ப்புக்கான புதிய வழிகள் கண்டறியப்படுகிறது. வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக கூறிய அவர், ஜார்க்கண்டில் இத்திட்டத்தால் ஏற்பட்ட பலன்களை சுட்டிக்காட்டினார். சுதந்திரம் அடைந்த பிறகும் இதுவரை மின்சார வசதி பெறாத தொலைதூர பகுதிகளில்  மொத்தமுள்ள  18,000 கிராமங்களில்  பெரும்பாலான கிராமங்கள், மின் இணைப்பை பெற்றிருப்பதாக அவர் கூறினார். குழாய் வழி குடிநீர் இணைப்பு, சாலை மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை கடந்த 8 ஆண்டுகளாக ஒரு இயக்கமாக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரிய நகரங்களுக்கு அப்பாலும் நவீன வசதிகள் பரவி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும்போது, தேசிய சொத்துக்கள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.” இதுவே, சரியான வளர்ச்சி என்பதோடு, இந்த வளர்ச்சியை நாம் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேவ்கரில் வளர்ச்சித் திட்டங்கள்

நாடுமுழுவதும் இருந்து வரும் பக்தர்களின் முக்கிய மதவழிபாட்டு தலமான பாபா பைத்யநாத் கோவிலுக்கு நேரடி போக்குவரத்து வசதி வழங்கும் விதமாக, தேவ்கர்  விமான  நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  இந்த விமான நிலையம் சுமார் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான முனையம், ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேவ்கர் எய்ம்ஸ், இப்பகுதி முழுவதிலும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும்.  தேவ்கர் எய்ம்ஸில் புதிய உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்திருப்பதன் மூலம், தேவ்கர் எய்ம்ஸில் வழங்கப்படும் சேவைகள்  மேலும் ஊக்கம் பெறும்.  நாட்டின் அனைத்து பகுதிகளிலும், தலைசிறந்த சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேவ்கர் எய்ம்ஸிற்கு 25 மார்ச், 2018-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

நாடு முழுவதும் உள்ள மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை  ஏற்படுத்துவதுடன்,  இத்தகையை இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது என்ற பிரதமரின் உறுதிப்பாடு, சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் “தேவ்கர், பைத்யநாத் கோவில் மேம்பாடு” திட்டங்கள் மேலும் உத்வேகம் பெறும்.  பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில், தலா 2,000 யாத்ரீகர்கள் தங்கும் வசதி கொண்ட இரண்டு பெரிய யாத்ரீகர் அரங்குகள், ஜல்சார் ஏரிக்கரை மேம்பாட்டுத் திட்டம்,  சிவகங்கை குளம் மேம்பாடு உள்ளிட்டவை அடங்கும். இந்த புதிய வசதிகள், பாபா பைத்யநாத் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் சுற்றுலா அனுபவத்தை மகிழ்ச்சியானதாக்கும்.

ரூ. 10,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில், தேசிய நெடுஞ்சாலை 2-ல் கோர்ஹர்-பர்வாடா பிரிவை 6 வழிசாலையாக்குதல்,  தேசிய நெடுஞ்சாலை  32-ல்  ராஜ்கஞ்ச் –சாஸ் சாலையை மேற்குவங்க எல்லை வரை அகலப்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.  புதியதாக அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில், தேசிய நெடுஞ்சாலை -80ல் மிர்சாசவுகி-ஃபராக்கா பிரிவு, தேசிய நெடுஞ்சாலை 98-ல் ஹரிஹர்கஞ்ச்- முதல் பார்வா வரையிலான பிரிவு, தேசிய நெடுஞ்சாலை 23-ல் பால்மா முதல் கும்ளா வரையிலான பிரிவுகளை  4 வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 75-ல் கச்சேரிசவுக் முதல் பிஸ்கா மோர் வரையிலான பிரிவில் உயர்மட்ட சாலை உள்ளிட்டவை முக்கிய திட்டங்களாகும்.  இந்த திட்டங்கள் இப்பகுதியில் போக்குவரத்து இணைப்பு வசதியை மேம்படுத்துவதுடன், சாமான்ய மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதையும் உறுதி செய்யும்.

இப்பகுதியில் எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ரூ. 3,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்களில், இந்திய எரிவாயு ஆணையத்தின் ஜக்தீஸ்பூர்- ஹால்டியா-  பொக்காரோ  எரிவாயு குழாய்  வழித்தடத்தில், பொக்காரோ- அங்கூல் பிரிவு, பார்ஹியில் இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் புதிய சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஹசாரிபாக் மற்றும் பொக்காரோ சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகள் உள்ளிட்டவை அடங்கும். பர்பத்பூர் எரிவாயு சேகரிப்பு நிலையம், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஜாரியா பிளாக் நிலக்கரி படுகை மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மின்மயமாக்கப்பட்ட கோட்டா – ஹன்ஸ்திகா ரயில்பாதை மற்றும் கார்வா – மஹூரியா இரட்டை ரயில் பாதைகளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த திட்டங்கள் தொழிற்சாலைகள் மற்றும் மின்உற்பத்தி திட்டங்களுக்கான சரக்குகளை எடுத்துச் செல்வதில்  தடையற்ற போக்குவரத்திற்கு உதவிகரமாக இருக்கும். அத்துடன், தும்காவிலிருந்து அசன்சால் வரையிலான ரயில் போக்குவரத்தையும் எளிதாக்கும்.  இது தவிர, ராஞ்சி ரயில்நிலைய புனரமைப்பு, ஜஸிதி புறவழிப்பாதை மற்றும் கோட்டாவில் எல்எச்பி ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை  ஆகிய மூன்று ரயில் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ராஞ்சி ரயில்நிலைய புனரமைப்பு பணியின் மூலம் உணவு வளாகம்  உள்ளிட்ட  பயணியருக்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகள், உயர்வகுப்பு பயணிகள்  தங்கும் அறை, சிற்றுண்டியகம், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பயணியர் காத்திருக்கும் அறை போன்ற வசதிகள் செய்யப்பட இருப்பதன் மூலம், பயணிகள் சுகமான முறையில் எளிதாக பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்படும்.

***************(Release ID: 1840981) Visitor Counter : 172