பிரதமர் அலுவலகம்

‘வனிஜ்ய பவன்’ மற்றும் நிர்யாத் இணையதளத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 23 JUN 2022 12:53PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர்கள் திரு பியூஷ் கோயல் அவர்களே, திரு சோம் பர்காஷ் அவர்களே, திருமதி அனுப்பிரியா பட்டேல் அவர்களே, தொழில்துறை மற்றும் ஏற்றுமதிகளைச் சேர்ந்த நண்பர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

 புதிய இந்தியாவை நோக்கி கடந்த 8 ஆண்டுகளாக நாடு முன்னேறி வரும் பாதையில், குடிமக்களை மையமாகக்கொண்ட ஆளுகையின் ஒரு பகுதியாக இன்று மேலும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் நவீன வணிக கட்டிடம் மற்றும் ஏற்றுமதி தளத்தின் வடிவத்தில் புதிய அன்பளிப்புகளை நாடு பெற்றுள்ளது.  நாட்டின் முதல் தொழில்துறை அமைச்சரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாள், இன்று. அவரது கொள்கைகள், முடிவுகள், உறுதிப்பாடுகள் மற்றும் சாதனைகள், சுதந்திர இந்தியாவிற்கு வழிகாட்டியதில் முக்கியமாக இருந்துள்ளன.

நண்பர்களே,

அரசுடன் தொடர்பு கொள்ளும்போதும், அரசின் வசதிகளை அணுகும்போதும் ஒருவரும் அசௌகரியப்படக் கூடாது என்ற அணுகுதலை எளிதாக்குவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. அடிப்படை வசதிகள், வங்கி மற்றும் அரசின் கொள்கை தயாரிப்பை நாட்டு மக்கள் அணுகச் செய்வதுதான் கடந்த எட்டு ஆண்டுகளில் ஆளுகை மாதிரியின் மிக முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. அரசு திட்டங்களின் பயன்கள்  பாரபட்சமின்றி ஒவ்வொருவரையும் சென்றடையும் போது மட்டும்தான் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது சாத்தியமாகும்.

நண்பர்களே,

இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவின் போது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச புத்தாக்க குறியீட்டு வளர்ச்சியின் அவசியம் குறித்து நான் வலியுறுத்தியிருந்தேன். சர்வதேச  புத்தாக்க குறியீட்டில் இன்று நாம் 46-வது இடத்தில் இருப்பதுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். அடிக்கல் நாட்டு விழாவின்போது, எளிதான வர்த்தகத்தகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து நாம் ஆலோசித்தோம். இன்று இந்தக் கட்டிடம் திறக்கப்படும்போது 32,000க்கும் மேற்பட்ட தேவையற்ற விதிகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சாதிக்கும் அணுகுமுறைக்கு, நமது ஏற்றுமதி சூழலியல் ஓர் சிறந்த உதாரணம். சர்வதேச ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்காக இந்தியாவை விரும்பத்தக்க உற்பத்தி இலக்காக மாற்ற அடிக்கல் நாட்டு விழாவின்போது நாம் உறுதியேற்றிருந்தோம். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த விநியோக சங்கிலியை சீரழித்த சர்வதேச பாதிப்புகளுக்கு இடையேயும் இந்தியாவின் ஏற்றுமதி 670 பில்லியன் டாலராக, அதாவது 50 லட்சம் கோடி ரூபாயாக பதிவானது.

 கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த இதுபோன்ற சாதனைகளால் ஊக்கமளிக்கப்பட்டு நமது ஏற்றுமதியின் இலக்குகளை தற்போது நாம் அதிகரித்திருப்பதுடன், அவற்றை அடைவதற்கான முயற்சிகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம். இது போன்ற புதிய இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியும் மிகவும் அவசியம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி!

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************



(Release ID: 1836797) Visitor Counter : 131