பிரதமர் அலுவலகம்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்



இந்தியா முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது

பிரதமரின் தலைமைக்கு FIDE தலைவர் நன்றி தெரிவித்தார்

"இந்த மரியாதை இந்தியாவின் கௌரவம் மட்டுமல்ல, இந்த புகழ்பெற்ற செஸ் பாரம்பரியத்தின் மரியாதையும் கூட"

‘’இந்த ஆண்டு இந்தியா பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்கும் என நம்புகிறேன்’’

Posted On: 19 JUN 2022 6:50PM by PIB Chennai

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை புதுதில்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின்  தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் ஜோதியை பிரதமரிடம் ஒப்படைத்தார், அவர் அதை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக சென்னை அருகே மகாபலிபுரத்திற்கு வந்து சேரும். ஒவ்வொரு இடத்திலும், மாநிலத்தின் செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் ஜோதியைப் பெறுவார்கள். பிரதமர் மோடியும் கேலோ செஸ் சம்பிரதாய நடவடிக்கையை மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து திருமதி கோனேரு ஹம்பி ஒரு நகர்வை மேற்கொண்டார். மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் திரு நிசித் பிரமானிக், செஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள், தூதர்கள், செஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எப்ஐடிஇ  தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச், புதிய பாரம்பரியமான ஜோதி ஓட்டத்திற்கான முன்முயற்சி எடுத்ததற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார், இது உலகம் முழுவதும் விளையாட்டை பிரபலப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காகவும் எங்களைக் கௌரவித்ததற்காகவும் கூட்டமைப்பு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “இன்று செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கான முதல் ஜோதி ஓட்டம் இந்தியாவில் இருந்து தொடங்குகிறது. முதல் முறையாக, இந்த ஆண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் இந்தியா நடத்த உள்ளது. ஒரு விளையாட்டு, அதன் பிறப்பிடத்திலிருந்து தொடங்கி, உலகம் முழுவதும் அதன் முத்திரையைப் பதித்து, பல நாடுகளுக்கு ஆர்வமாக மாறியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ எனக் கூறினார். “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த விளையாட்டின் ஜோதி இந்தியாவிலிருந்து சதுரங்க வடிவில் உலகம் முழுவதும் சென்றது. இன்று இந்தியாவில் இருந்து சதுரங்கத்தின் முதல் ஒலிம்பியாட் ஜோதியும் வெளிவருகிறது. இன்று, இந்தியா தனது 75வது ஆண்டு சுதந்திர தினமான அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் போது, இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாட்டின் 75 நகரங்களுக்கும் செல்லும் என்று  அவர் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில், செஸ் விளையாட்டில் இந்தியா தனது செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையில்  புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1835336

***************



(Release ID: 1835348) Visitor Counter : 199