பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் அட்கோட்டில், மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
28 MAY 2022 3:59PM by PIB Chennai
பாரத் மாதாகீ ஜே..
பாரத் மாதாகீ ஜே..
குஜராத்தின் புகழ்பெற்ற முதல்வர் ஸ்ரீ பூபேந்திரபாய் படேல் அவர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவர் சி.ஆர்.பாட்டீல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள என் சகாக்களே, பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மன்சுக் மாண்டவியா அவர்களே, மற்றும் மகேந்த்ர முன்ஜப்ரா அவர்களே, மூத்த தலைவர்களான ஸ்ரீ வஜுபாய் வாலா அவர்களே, விஜய் ரூபானி அவர்களே, படேல் சேவா சமாஜின் அனைத்து அறங்காவலர்களே, நன்கொடையாளர்களே, எங்களை ஆசீர்வதிக்க வந்துள்ள புனிதர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அட்கோட்டின் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு திரண்டு வந்துள்ள அன்பு சகோதர, சகோதரிகளே,
குஜராத்தின் அட்கோட்டில், மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருத்துவமனை சௌராஷ்டிரா மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்த மேலும் உதவும். அரசின் முயற்சியுடன், பொதுமக்களுடைய முயற்சியும் சேர்ந்தால், சேவையும், ஆற்றலும் பன்மடங்கு அதிகரிக்கும். இதற்கு இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருப்பதே சிறந்த உதாரணம்.
சகோதர, சகோதரிகளே,
மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசத்துக்கு சேவையாற்ற வந்து, 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குஜராத்தில் இருந்து என்னை அனுப்பி வைத்தீர்கள். ஆனாலும், என் மீதான உங்கள் அன்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இப்போது குஜராத் வந்துள்ள நான், குஜராத்தின் அனைத்து மக்களுக்கும் தலைவணங்க விரும்புகிறேன். மத்தியில் ஆட்சி செய்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக நான் தாய்நாட்டை மறக்கவில்லை.
பல ஆண்டுகளாக ஏழைகளின் முன்னேற்றம், நலன் நல்லாட்சி ஆகியவற்றுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி என்ற மந்திரங்களை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்து வருகிறோம். சர்தார் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் நேர்மையான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இன்று அட்கோட்டில் உள்ள மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்டு, திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பொதுவாக தொழிற்சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தால், மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவை எப்போதும் நிரம்பியிருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், மருத்துவமனையை திறந்து வைத்தால், அப்படி மகிழ்ச்சியடைய முடியாது. மருத்துவமனைகள் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என நினைக்க முடியாது. நான் பதவியேற்றாலும், நல்ல சுகாதார சூழலை உருவாக்கி, மருத்துவமனைகளுக்கு யாரும் வராத நிலைமையை உருவாக்க வேண்டும். நல்ல சுகாதார சூழல் இருந்தால் யாரும் மருத்துவமனைக்கு வரும் நிலைமை ஏற்படாது. அப்படி வந்தாலும் அவர்கள் முன்பை விட நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு திரும்ப வேண்டும். அதுபோன்றதொரு நல்ல பணி இந்த மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. சுகாதாரத்துறையில் வேகமான வளர்ந்து வரும் குஜராத்தில், இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள சாமானியர்களும், ராஜ்கோட்டை சுற்றியுள்ள நான்கு மாவட்ட மக்களும் இங்கு வந்து சிறந்த சிகிச்சையை பெற்று செல்ல முடியும். ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், குஜராத்தின் ஒவ்வொரு குழந்தையும், அதன் எதிர்காலமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன். நீங்கள் அனைவரும் என்மீது அன்பைப் பொழிகின்றீர்கள். இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் என்னை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது எனக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். உங்களுடைய ஆசீர்வாதத்துடன் நான் குஜராத்துக்கும், இந்தியாவுக்கும் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்.
மிக்க நன்றி..
பாரத் மாதாகீ ஜே..
பாரத் மாதாகீ ஜே..
மிக்க நன்றி..
***************
(Release ID: 1829473)
Visitor Counter : 178
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam