பிரதமர் அலுவலகம்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் வெளியிட்டார்


“பிஎம் கேர்ஸ் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பில் உள்ளனர் என்பதன் பிரதிபலிப்பு”

“இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது”

“இந்த கடினமான நேரங்களில் நல்ல நூல்கள் உங்களின் நம்பகமான நண்பர்களாக இருக்கும்”

“இன்று எங்கள் அரசு 8 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், நாட்டின் நம்பிக்கையும், நாட்டு மக்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது”

“கடந்த 8 ஆண்டுகளும் ஏழைகளின் நலன் மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது”

“தற்போது பரம ஏழைகளாக இருப்பவர்கள் பலன்களை பெறுவதில் நம்பிக்கையுடன் உள்ளனர் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% பிரச்சாரத்தை செய்து வருகிறது”



Posted On: 30 MAY 2022 11:35AM by PIB Chennai

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் திரு. மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொண்டார். தற்போதுள்ள சூழலில், அந்த குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. யாருக்காக பிஎம் கேர்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கும் பிரதமர் எடுத்துக் கூறினார். அப்போது, நான் பிரதமராக உங்களுடன் பேசவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுவதாக தெரிவித்தார்.

பிஎம் கேர்ஸ் என்பது, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு. உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கும் பிஎம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும். என பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பெற்றோரை இழந்த, 23 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்தை தவிர, ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல்நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றின் மிக மோசமான வேதனையையும், அதன் தாக்கத்தையும் தைரியமாக எதிர்கொண்ட குழந்தைகளுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, பெற்றோரின் அன்புக்கு ஈடு செய்வதாக எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது என்றும், பிஎம் கேர்ஸ் திட்டம் மூலம் குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற நாடு முயற்சி செய்கிறது என்றும் பிரதமர் கூறினார். தொற்றுநோய் பாதிப்புகளின்போது, சக மனிதர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொண்டதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மற்றவர்கள் எவ்வாறு பணியாற்றினர் என்றும், மருத்துவமனைகளை தயார் செய்வதற்கும்,  வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கும், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கும் பொதுமக்கள் கொடுத்த நிதி பெரிதும் உதவியாக இருந்ததாகவும் பிரதமர் கூறினார். இதன் மூலம் பல உயிர்களையும், பல குடும்பங்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற இயலும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வாழ்க்கையில், விரக்தியின் விளிம்பில் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச்சிறந்த உதாரணம் என்று தெரிவித்த பிரதமர் திரு. மோடி, விரக்தி தோல்வியாக மாற குழந்தைகள் அனுமதித்து விட வேண்டாம் என அறிவுறுத்தினார். பெரியவர்களும், ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். நோயிலிருந்து மீள கேலோ இந்தியா, உடற்தகுதி இந்தியா போன்ற இயக்கங்களில் ஈடுபடவும், யோகாவை மேற்கொள்ளவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இக்கட்டான சூழலில், இந்தியா தனது பலத்தை நம்பியிருப்பதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரை இந்தியா நம்பியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரச்சினைகளுடன் இல்லாமல் தீர்வை தருவதாக இந்தியா வெளிவந்தது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெருந்தொற்றை தடுப்பதற்கான மருந்தையும், தடுப்பூசிகளையும் வழங்கினோம். அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாகவும், உலக நாடுகள் வியந்து பார்க்கும் நாடாகவும் இந்தியா உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று தங்கள் அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், தங்கள் அரசு மீது நாட்டு மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல கோடி ஊழல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பாகுபாடுகள் போன்ற  2014-ம் ஆண்டில் சிக்கியிருந்த தீயசூழல்களில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இந்த நிகழ்வு குழந்தைகளான உங்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம். அனைத்துக் கடினமான நாட்களும் கடந்து போகும் என்று பிரதமர் தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம், ஜன்தன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் திட்டம் போன்ற நலத்திட்டங்களை பற்றி எடுத்து கூறிய பிரதமர் மோடி, அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன்  அரசாங்கம் செல்வதாக குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளை ஏழைகள் நலன் மற்றும் சேவைக்காக அரசு தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினராக, உங்களின் துயரங்களையும், சுமைகளையும் குறைப்பதற்கும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் ஏழைகளின் உரிமைகளை அரசு உறுதி செய்துள்ளதாகவும், இதனால் ஏழைகள் அரசின் நலத்திட்டங்களை பெற்று வருவதாகவும், தொடர்ந்து பெறுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% அதிகாரமளிக்கும் இயக்கத்தை நடத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா, கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றும், தற்போது உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். உலக அளவில் இந்தியாவின் பலம் உயர்ந்துள்ளதாகவும், இதனை இளைஞர் சக்தி முன்னெடுத்துச் செல்வதாகவும் பிரதமர் மகிழ்ச்சியுடன் கூறினார். உங்கள் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்போம் என்றும், அது நிறைவேறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

***************



(Release ID: 1829466) Visitor Counter : 179