பிரதமர் அலுவலகம்

ராஜ்கோட்டின், அட்கோட்டில் உள்ள கே.டி.பி.பன்னோக்கு மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர்


“இந்த மருத்துவமனை, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், அரசு & தனியார் முயற்சியின் ஒருங்கிணைப்புக்கான உதாரணமாகத் திகழ்கிறது“

“கடந்த 8 ஆண்டுகளில், மக்களுக்கு ‘சேவை‘, ‘நல்லாட்சி‘ மற்றும் ‘ஏழைகள் நலன்‘ உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது‘‘

‘‘கடந்த 8 ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த முறைகேடும் நடைபெறவில்லை‘‘

‘‘திட்டப்பணிகள் முழுமை அடைவதற்சான இயக்கங்களை அரசு தொடங்கியுள்ளது‘‘

Posted On: 28 MAY 2022 1:36PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுஸ்ரீ கே.டி.பி. பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை இன்று பார்வையிட்டார்.   ஸ்ரீ படேல் சேவா சமாஜம் இந்த மருத்துவமனையை நிர்வகிக்கிறது.  இங்கு, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டிருப்பதுடன், இப்பகுதி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையையும் வழங்கி வருகிறது.  குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர்கள் திரு.பர்ஷோத்தம் ருபாலா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் மகேந்திர முஞ்சப்பாரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குஜராத் மாநில அமைச்சர்கள் மற்றும் சந்த் சமாஜத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த மருத்துவமனை திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.   இந்த மருத்துவமனை, சவுராஷ்டிரா பகுதியில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.   இந்த மருத்துவமனை, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், அரசு & தனியார் முயற்சியின் ஒருங்கிணைப்புக்கான உதாரணமாகத் திகழ்கிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டிற்காக பணியாற்ற தமக்கு வாய்ப்பளித்தமைக்காக, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.   தாய்நாட்டு சேவையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், குஜராத் மண்ணில் இருப்பது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.  தமக்கு வாய்ப்பளித்தமைக்காக குஜராத் மக்களுக்கும் கலாச்சாரத்திற்கும் தலைவணங்குவதாகவும் அவர் கூறினார்.  இந்த சேவை, நமது கலாச்சாரம், நமது மண்ணின் கலாச்சாரம், மற்றும் பாபு(காந்தியடிகள்) மற்றும் படேலின் கலாச்சாரத்திலேயே ஊறிப்போனது என்றும் அவர் தெரிவித்தார்.    கடந்த 8 ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய  எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.  இந்த காலகட்டத்தில், மக்களுக்குசேவை‘ ,   ‘நல்லாட்சி‘  மற்றும்  ‘ஏழைகள் நலன்‘-க்கு  உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்பது போன்ற தாரக மந்திரங்கள், தேச வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

ஏழைகள், தலித், நலிந்த பிரிவினர், பழங்குடியினர், பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டுமென பூஜ்ய பாபு மற்றும் கசர்தார் படேல், கனவு கண்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  தூய்மை மற்றும் ஆரோக்கியமான இந்தியா, தேசத்தின் மனசாட்சியின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.  சுதேசி தீர்வுகள் மூலம் பொருளாதாரத்தில் வலுப்பெற்ற இந்தியாவாக இருக்க வேண்டுமென பாபு விரும்பியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.   தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதுடன்,  10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், திறந்தவெளி கழிப்பிட பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள், சமையலறை புகையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,   2.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு,  6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதோடு, 50 கோடி பயனாளிகள், ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகளை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   இவை அனைத்தும் வெறும் எண்ணிக்கையல்ல ஆனால், ஏழைகளின் கண்ணியத்தை உறுதி செய்வது மற்றும் தேசப் பணியில் நமது அர்ப்பணிப்புக்கான ஆதாரம் என்றும் அவர் கூறினார். 

தற்போது, போர்  நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க நாம் முயற்சித்து வருகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   திட்டப் பணிகள் முழுமைபெறச் செய்வதற்கான இயக்கங்களை அரசு தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.   மக்கள் அனைவரும், தங்களுக்கு உரிய பயன்களைப் பெறும்போது, பாகுபாடு மற்றும் ஊழலுக்கு வாய்ப்பிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  இதுபோன்ற முயற்சிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

குஜராத்தி மொழியில் பேசிய பிரதமர், பொது சேவையில் படேல் சமுதாயத்தினரின் தலைசிறந்த பணிக்காக பாராட்டு தெரிவித்தார்.   தாம் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், 2001-ம் ஆண்டு தங்களுக்காக பணியாற்ற குஜராத் மக்கள் தமக்கு வாய்ப்பு அளித்தபோது, மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது குஜராத்தில் 30 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.    குஜராத்திலும், நாட்டிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி இருப்பதைக் காண விரும்புகிறேன்.  நாம் விதிமுறைகளை மாற்றியமைத்ததால், தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள், அவர்களது தாய்மொழியிலேயே படிக்கலாம்என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தொழில்துறை பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி, முன்பு வதோதரா முதல் வாபி வரை மட்டுமே தொழிற்சாலைகளைக் காண முடியும், தற்போது, குஜராத் முழுவதும் தொழிற்சாலைகள் மலர்ந்துள்ளன.  நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறு,சிறு, நடுத்தரத் தொழில்களும், குஜராத்திற்கு பெரும் வலிமை அளிப்பவையாக உருவெடுத்துள்ளன.   மருந்துத் தயாரிப்புத் தொழிலும் பரவி வருகிறது.   சவுராஷ்டிராவின் அடையாளமே, அதன் மக்களின் தைரியமான பண்பு தான் என்றும் அவர் கூறினார். 

வறுமையின் கொடுமையை தாம் உணர்ந்திருப்பதாக கூறிய பிரதமர், ,  வீட்டிலிருப்பவர்களுக்கு சவுகரியக் குறைபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, உடல்நலன் சரியில்லை என்றாலும்கூட, சிகிச்சைக்குச் செல்லாமல் குடும்பப் பெண்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருப்பதாக தெரிவித்தார்.  தாய்மார்கள் யாரும் சிகிச்சைபெறாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய, தற்போது தில்லியில் ஒரு மகனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் .  எனவே தான் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டதுஎன்று அவர் குறிப்பிட்டார்.   அதேபோன்று, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதற்காக, மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டிருப்பதுடன்,  அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். 

*****(Release ID: 1828985) Visitor Counter : 160