பிரதமர் அலுவலகம்

ஐதராபாத்தில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு

Posted On: 26 MAY 2022 5:41PM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில அமைச்சர்களே,  இந்திய வணிகவியல் பள்ளியின் நிர்வாக வாரியத் தலைவர், பேராசிரியர்கள், ஆசிரிய பெருமக்களே, எனதருமை இளம் நண்பர்களே.

இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். 2001-ஆம் ஆண்டில் அடல் அவர்கள் இதை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது முதல் இதுவரை சுமார் 50 ஆயிரம் நிர்வாகிகள் இங்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மாணவர்கள் பல்வேறு புதிய நிறுவனங்களைக் கட்டமைத்திருப்பதுடன், ஏராளமான அதிக முதலீட்டு நிறுவனங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும்.

நண்பர்களே,

விடுதலையின் 75-வது ஆண்டு, அதாவது அமிர்த மகோத்சவத்தை நாடு கொண்டாடும் வேளையில் இந்த மாணவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்வது மேலும் ஓர் சிறப்பம்சம். 

இன்று, ஜி-20 நாடுகளின் குழுவில் அதி வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுள் இந்தியாவும் ஒன்று. திறனறி செல்பேசி தரவுகளைப் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. சர்வதேச சில்லறை வணிகக் குறியீட்டிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. புதிய நிறுவனங்கள் சூழலியலில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. உலகில் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது.

கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் திறனை உலகமும், நாம் அனைவரும் கண்டுள்ளோம். நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடரில் சர்வதேச விநியோகச் சங்கிலியில் பெரும் இடையூறு ஏற்பட்டது. இருந்தபோதிலும் வளர்ச்சியின் முக்கிய மையமாக இந்தியா இன்று வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவாக இந்தியாவிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு பதிவாகியுள்ளது. உலகம் தற்போது ‘இந்தியா என்பதன் பொருள் வணிகம்' என்பதை உணர்ந்து வருகிறது. 

நண்பர்களே,
உங்கள் இலக்குகளை நாட்டின் உறுதிப்பாடுகளுடன் இணையுங்கள். ‘நாட்டிற்கான செயல்’, ‘நாட்டிற்கு அதிகாரமளித்தல்' என்ற உறுதியுடன் நீங்கள் எதை செய்தாலும் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****************



(Release ID: 1828948) Visitor Counter : 157