பிரதமர் அலுவலகம்

கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை


நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள்"

‘‘நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியமும் அழைப்பு விடுத்துள்ளன’’

‘‘பெண்களின் முன்னேற்றம் எப்போதும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பலம் அளிக்கிறது’’

‘‘இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், பெண்களின் முழுப் பங்களிப்புக்கு, இன்று நாடு முக்கியத்துவம் அளிக்கிறது’’

‘‘ ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன்கள் பெண்கள் பெயரில் உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 70 சதவீதக் கடன்கள் நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வழங்கப்பட்டுள்ளன’’

Posted On: 08 MAR 2022 6:58PM by PIB Chennai

கட்ச்சில் நடந்த சர்வதேசப்  பெண்கள் தினக்  கருத்தரங்கில் காணொலிக்  காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கூடியிருந்தவர்களுக்கு பெண்கள் தின வாழ்த்துக்களைத்  தெரிவித்தார்.  கட்சில் தேவி ஆஷாபுரா, மாத்ருசக்தி வடிவில் இருப்பதால், பெண்கள் சக்தியின் அடையாளமாக கட்ச் பகுதி உள்ளது எனப்  பிரதமர் கூறினார்.  ‘‘கடுமையான இயற்கைச்  சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர்’’ என அவர் கூறினார்.  குடிநீர் பாதுகாப்பில் கட்ச் பெண்களின் பங்கை அவர் பாராட்டினார்.  இந்த நிகழ்ச்சி எல்லை கிராமத்தில் நடைபெற்றதால், 1971ம் ஆண்டு போரில் இப்பகுதி பெண்களின் பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள்" என பிரதமர் கூறினார். ‘அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன’’  எனவும் அவர் கூறினார்.

பக்தி இயக்கத்திலிருந்து, ஞான தர்ஷன் வரை சமூகத்தில் சீர்திருத்தமும் மாற்றமும் ஏற்பட  வடக்கே  மீராய்பாய் முதல் தெற்கே சாந்த் அக்கா மகாதேவி போன்ற பெண் தெய்வங்கள்,  பெண்கள் குரல் கொடுத்தனர்  எனப்  பிரதமர் கூறினார்.  அதேபோல், கட்ச் மற்றும் குஜராத்தும், சாதி தரோல், கங்கா சாதி, சாதி லோயன், ரம்பை மற்றும் லிர்பை போன்ற பெண் தெய்வங்களைக்  கண்டவை .  பெண்கள், சக்தியாகத்  திகழும் நாட்டின் எண்ணிலடங்கா  தெய்வங்கள், சுதந்திரப்  போராட்டச்  சுடரைத் தொடர்ந்து எரியச் செய்தன எனப்  பிரதமர் கூறினார்.

இந்தப்  பூமியைத்  தாயாகக்  கருதும் நாட்டில், பெண்களின் முன்னேற்றம் எப்போதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வலிமையை கொடுக்கிறது எனப்  பிரதமர் கூறினார்.  ‘‘பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைய, நாடு இன்று முக்கியத்துவம் அளிக்கிறது.  இந்தியாவின் வளர்ச்சிப்  பயணத்தில், பெண்களின் முழுப்  பங்களிப்புக்கு இன்று நாடு முக்கியத்துவம் அளிக்கிறது’’ எனப்  பிரதமர் கூறினார்.  11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டது, 9 கோடி உஜ்வாலா கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டது, 23 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள்  பெண்களுக்கு கவுரவத்தை கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது என அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு அரசு நிதிஉதவி அளிக்கிறது, அப்போதுதான் அவர்கள் முன்னேறி, தங்கள் கனவுகளை நிறைவேற்றிச்  சொந்தமாக தொழில் தொடங்க முடியும் எனப்  பிரதமர் கூறினார்.   ‘‘ ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன்கள் பெண்கள் பெயரில் உள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 70 சதவீத கடன்கள் நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வழங்கப்பட்டுள்ளன’’ என அவர் கூறினார். ‘‘அதேபோல், பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் கட்டிக்  கொடுக்கப்பட்ட 2 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் உள்ளன. இவையெல்லாம், நிதி சம்பந்தமாக முடிவு எடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன ’’ என்று  பிரதமர் கூறினார்.

பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அரசு உயர்த்தியுள்ளது எனப்  பிரதமர் தெரிவித்தார்.  பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் மிக கடுமையாக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.  பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் பிரிவும் உள்ளது.  ஆண்களும், பெண்களும் சமம் என்பதைக்  கருத்தில் கொண்டு, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முயற்சிக்கிறது என்று  பிரதமர் கூறினார்.  பாதுகாப்புப்  படைகளில்  பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சைனிக் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை தொடங்கியுள்ளது எனவும் பிரதமர் கூறனார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான பிரசாரத்தக்கு மக்கள் உதவ வேண்டும் எனப்  பிரதமர் வலியுறுத்தினார். பெண் குழந்தைகளைப்  பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப்  படிக்க வைப்போம் திட்டத்தில் பெண்களின் பங்கை அவர் வலியுறுத்தினார்.  பெண் குழந்தைகளைப்  பள்ளியில் சேர்க்கும் விழாவிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கு வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தைப்  பொறுத்தவரை, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, மிகப் பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது என்றும், பெண்கள் முன்னேற்றத்தில் இது இன்னும் அதிகப்  பங்காற்ற வேண்டும்’’  என்றும் பிரதமர் கூறினார்.  உள்ளூர் பொருட்களின் சக்தி பெண்களின் கையில்தான் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

முடிவில், சுதந்திர போராட்டத்தில் சாந்த் பரம்பராவின் பங்கு குறித்து பிரதமர் பேசினார்.  மேலும்,  கட்ச் பகுதியில் நடைபெறும் ரான் விழாவின் அழகைக் கண்டு களித்து , ஆன்மீக அனுபவத்தையும் பெற வேண்டும் எனக்  கருத்தரங்கில் பங்கேற்றவர்களைப்  பிரதமர் கேட்டுக் கொண்டார்.

***********



(Release ID: 1804144) Visitor Counter : 421