உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியேற்ற விசா, வெளிநாட்டினர் பதிவு கண்காணிப்பு திட்டத்தை (IVFRT) ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 25 FEB 2022 1:01PM by PIB Chennai

குடியேற்ற விசா, வெளிநாட்டினர் பதிவு கண்காணிப்பு திட்டத்தை(ஐவிஎஃப்ஆர்டி) 2021 மார்ச் 31ம் தேதிக்குப்பின்னும், ஐந்து  நிதியாண்டுகளுக்கு ரூ.1,364.88 கோடி செலவில் தொடர்வதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இத்திட்டத்தை தொடர்வது, குடியேற்றம் மற்றும் விசா சேவைகளை நவீனமயமாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் உறுதியை காட்டுகிறது. இந்த திட்டம் மூலம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சட்டரீதியான பயணிகளுக்கு தேவையான வசதிகளை பாதுகாப்பாகவும், ஒருங்கிணைந்து வழங்குவதையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது.  

இத்திட்டம் உலகளாவிய திட்டம். உலகம் முழுவதும் உள்ள 192 இந்திய தூதரகங்கள், இந்தியாவில் உள்ள 108 குடியேற்ற சோதனை மையங்கள்(ICPs ) , 12 வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகங்கள் (FRROs) மற்றும் அதிகாரிகள், 700 வெளிநாட்டினர் பதிவு அதிகாரிகள் (FROs), நாடு முழுவதும் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் / துணை ஆணையர்களை இணைத்து குடியேற்றம், விசா வழங்குதல், வெளிநாட்டினர் பதிவு, இந்தியாவில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது போன்ற செயல்பாடுகளை இத்திட்டம்   ஒருங்கிணைக்க முயல்கிறது.  ஐவிஎஃப்ஆர்டி தொடங்கப்பட்ட பின், விசா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டைகள் வழங்கும் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு 64.59 லட்சமாக அதிகரித்தது. இது கடந்த 2014ம் ஆண்டில் 44.43 லட்சமாக இருந்தது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் 7.7 சதவீதம்.  விசா வழங்குவதற்கான காலம் ஐவிஎஃப்ஆர்டி திட்டம் அமல்படுத்தும்  முன்,  15 முதல் 30 நாட்களாக இருந்தது. தற்போது அதிகபட்சமாக 72 மணி நேரத்துக்குள் இ-விசா வழங்கப்படுகிறது. 95 சதவீத இ-விசாக்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் சர்வதேச போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில்     3.71  கோடியிலிருந்து 7.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் 7.2 சதவீதம் ஆகும்.

                                                                                ************************


(Release ID: 1801175) Visitor Counter : 290