பிரதமர் அலுவலகம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 05 FEB 2022 6:26PM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான நரேந்திர சிங் தோமர் அவர்களே, ஜி. கிஷண் ரெட்டி அவர்களே இக்ரிசாட்டின் தலைமை இயக்குனர், உள்நாட்டையும், வெளிநாட்டையும், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களே இணையத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பவர்களே, இங்கு கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று வசந்த பஞ்சமியின் புனிதவிழா கொண்டாடும் நாளாகும். இன்று நாம் அறிவின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடும் நாள். நீங்கள் அறிவுத்துறையை, விஞ்ஞானத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மையமாக கொண்ட துறையை சேர்ந்தவர்கள் என்பதால் வசந்த பஞ்சமி விழாவில் இந்த நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான பொன்விழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நண்பர்களே,

50 ஆண்டுகள் என்பது மிகவும் நெடிய காலமாகும். இந்த 50 ஆண்டு பயணத்திற்குப் பங்களிப்பு செய்த ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். இந்தப் பணியை முன்னெடுப்பதில் முயற்சிகளை மேற்கொண்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியா தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டினைக் கொண்டாடும் வேளையில் உங்கள் நிறுவனம் 50-வது ஆண்டினைக் கொண்டாடுவது மிகவும் சிறப்புமிக்கதாகும். இந்தியா சுதந்திரத்தின் 100-வது ஆண்டினை கொண்டாடும்போது நீங்கள் 75-வது ஆண்டில் இருப்பீர்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ள இந்தியா, அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ளது. இக்ரிசாட்டுக்கும் அடுத்த 25 ஆண்டுகள் இதே அளவு முக்கியமானதாகும்.

நண்பர்களே,

நீர் மற்றும் நில நிர்வாகம், பயிர்வகையில் மேம்பாடு, பலவகை வேளாண் கருவிகள் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் உங்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் விவசாயிகளை அவர்களின் சந்தைகளோடு ஒருங்கிணைத்தல், பயறுவகைகள் மேம்பாடு, கொண்டைக்கடலை உற்பத்தி ஆகியவற்றில் ஒட்டுமொத்த அணுகுமுறைக்காகவும், உங்களைப் பாராட்டுகிறேன். உங்களின் ஆராய்ச்சியும், தொழில்நுட்பமும் வேளாண்மையை எளிதாக்கவும், நீடித்ததாக்கவும் மாற்ற உதவி செய்துள்ளன.

புவிக்கோளுக்கு ஆதரவான மக்கள் இயக்கம் என்பது பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பருவநிலை பொறுப்புடன்  ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு தனிநபரையும் இணைப்பதாகும். இது வெறும் வார்த்தைகளோடு நிற்காமல், இந்திய அரசின் செயல்களிலும் பிரதிபலிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவோர் குறைந்தபட்ச ஆதார வளங்களுடன் வளர்ச்சியின் கடைசி நிலையில் இருக்கும் மக்கள்தான். எனவே பருவநிலை மாற்றத்திற்கு உலகநாடுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை –லைஃப், புவிக்கோளுக்கு ஆதரவான மக்கள் இயக்கங்கள்- 2070-க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குவது இந்தியாவின் இலக்காகும்.

நண்பர்களே,

பருவநிலை மற்றும் இதர நிலைமைகள் காரணமாக வேளாண்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களைக் கையாள்வதற்கு இந்தியாவின் முயற்சிகள் பற்றி அனைத்து நிபுணர்களும், விஞ்ஞானிகளும்,  தொழில்நுட்ப வல்லுநர்களும் நன்கு அறிவார்கள். இந்தியாவில் 15 வேளாண் பருவ மண்டலங்கள், ஆறு பருவங்கள் இருப்பதை உங்களில் பெரும்பாலானவர்கள் அறிவீர்கள். பருவநிலை மாற்றத்திலிருந்து தனது விவசாயிகளைப் பாதுகாக்க ‘மீண்டும் அடிப்படைக்கு’, ‘எதிர்காலத்திற்குப் பயணம்’ என்ற கலவையில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் நமக்கு மிகவும் தேவையான விவசாயிகளின் மீது எங்களின் கவனம் உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கும், டிஜிட்டல் வேளாண்மைக்கும் முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

நண்பர்களே,

 டிஜிட்டல் வேளாண்மை இந்தியாவின் எதிர்காலமாக உள்ளது என்பதால் திறமைமிக்க இந்திய இளைஞர்கள் இதனைக் கையாள மாபெரும் பங்களிப்பை செய்ய வேண்டும். பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல் மயம், பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை ட்ரோன்கள் மூலம் தெளித்தல் என தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க இந்தியாவின் முயற்சிகள் பெருமளவு அதிகரித்து வருகிறது.

நண்பர்களே,

  அமிர்த காலத்தின் போது, அதிகபட்ச வேளாண் வளர்ச்சியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது. வேளாண்துறையில் உள்ள பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆதரவு அளிக்கப்படுகிறது. மக்கள் தொகையில் பெரும் பகுதியை வறுமையிலிருந்து வெளியேற்றி சிறந்த வாழ்க்கை முறைக்கு அவர்களைக் கொண்டு செல்ல விவசாயம் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. புவியியல் ரீதியாக சிக்கலான பகுதிகளில் விவசாயிகளுக்கு புதிய வழிமுறைகளையும் அமிர்தகாலம் வழங்கும்.

நண்பர்களே,

உங்களைப் போன்ற புதிய கண்டுபிடிப்பு மனநிலை உள்ளவர்கள்  உதவியுடனும், மக்களின் பங்கேற்புடனும், சமூகத்தின் உறுதியுடனும், வேளாண்மைத் தொடர்பான அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ளும் திறன் நம்மிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை நீங்கள் அதிகபட்சமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த எண்ணத்துடன் புகழ்மிக்க கடந்த காலத்தைக் கொண்டுள்ள  இக்ரிசாட்டை முக்கியமான தருணத்தில் நான் வாழ்த்துகிறேன். நாட்டில் உள்ள விவசாயிகளின் கௌரவத்திற்கும், பெருமைக்கும்  பயன்படும் உங்களின் முயற்சிகளுக்காகவும், பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் கூட நான் வாழ்த்துக்களை  தெரி்விக்கிறேன்.

நன்றி!

****


(Release ID: 1795794)



(Release ID: 1796072) Visitor Counter : 168