பிரதமர் அலுவலகம்

பிரதமரின் இத்தாலி பயணம் குறித்த வெளியுறவுத் துறை செயலாளரின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு

Posted On: 30 OCT 2021 2:27PM by PIB Chennai

திரு.அரிந்தம் பக்சி, அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்: தாய்மார்களே, சகோதர்களே, உங்கள் அனைவருக்கும் மாலை வணக்கம். இந்த மாலை நேரத்தில் எங்களுடன் இணைந்த உங்களுக்கு மிக்க நன்றி. இந்தியாவிலிருந்தவாறு எங்களுடன் நேரலையில் இணைந்திருப்பவர்களுக்கும் நமஸ்காரம். அனைவரையும் வரவேற்கிறேன். பிரதமர் திரு.நரேந்திர மோடி ரோம் நகருக்கு வந்துள்ளார். இன்று அவரது பயணத்தின் முதல் நாளாகும். என்ன நடக்கிறது என்பதை எங்களுக்கு தெரிவிக்கவும், நாங்கள் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் திரு.ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா இங்கு எங்களுடன் இருப்பதில் பெருமிதம் அடைகிறோம். இனி அவர் உங்களை சந்திப்பார்.

திரு.ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத் துறை செயலாளர்: நமஸ்காரம் மற்றும் மாலை வணக்கம், ஊடக நண்பர்களான உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் இன்று காலை ரோம் நகருக்கு வந்தடைந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதே அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்களுடன் ஏராளமான இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். இங்கு வந்தடைந்ததும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு.சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு திருமதி.உர்சுலா வோன் டெர் லெயன் ஆகியோரை பிரதமர் சந்தித்தார். இந்தப் பின்னணியில், பிரதமர் நாளை ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீள்வது, நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஜி-20 அமைப்புக்கான எங்களது பிரதிநிதி, எங்களது மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர், நான் என்ன புரிந்துகொண்டு இருக்கிறேன் என்பது குறித்த விளக்கத்தை அவர் உங்களிடம் சுருக்கமாக எடுத்து கூறியிருக்கிறார். எனவே, பிரதமரின் இன்றைய சந்திப்புகள் குறித்து நான் கவனம் செலுத்த இருக்கிறேன். ஐரோப்பிய ஆணையம் மற்றும் கவுன்சிலின் தலைவர்களுடனான சந்திப்புகள் மற்றும் சற்று முன்பு இத்தாலி பிரதமர் மேதகு மரியோ டிராகியுடன் பிரதமர் நடத்திய சந்திப்பு குறித்து விளக்கமளிக்க இருக்கிறேன். இன்றைய விவாதத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களை நீங்கள் பார்ப்பீர்களேயானால் ஜி-20 உச்சி மாநாடு தொடர்பான அம்சங்கள் மற்றும் சுகாதார மீட்சி தொடர்பான அம்சங்கள் குறித்த விவாதமும், கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைவது, உலகளாவிய பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்த அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச நலன் சார்ந்த அம்சங்கள் இரு தலைவர்களுடனான சந்திப்பின்போதும் இடம் பெற்றது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, இந்தாண்டு மே மாதத்திலும் ஜூலை 2020-ல் நடைபெற்ற 15-வது இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் போதும், EUplus27 என்ற பெயரில் நடைபெற்ற இந்தியா – ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சந்திப்பின் போது, இதில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ததை நினைவு கூர்ந்ததாக நான் கருதுகிறேன். ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் மிக முக்கிய பங்குதாரர் அமைப்பு என்பதோடு, இன்றைய சந்திப்புகளின்போது அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மட்டுமின்றி, கடந்த இந்தியா- ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ’2025-க்கான செயல்திட்டம்குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். நான் கூறியபடி, பருவநிலை மாற்றம் தொடர்பான முன்னேற்றங்கள், கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மற்றும் உலக மற்றும் பிராந்திய நலன் சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்த இந்தியாவின் கருத்துகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். எங்களது நாட்டில் தடுப்பூசி உண்மையாக எத்தனை பேருக்கு செலுத்தப்பட்டது, எத்தனை சதவீத மக்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டது ஆகிய தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இந்தியாவின் அபார முன்னேற்றத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும், இத்தாலி பிரதமரும் எங்களது பிரதமருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். மாலையில் பியாசா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமரை வாழ்த்த வந்த இந்திய சமுதாயத்தினர் ஏராளமானோரும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் பிரதமர், இத்தாலியில் உள்ள இந்திய சமுதாயத்தின் பிரதிநிதிகள், இத்தாலிய இந்து சங்கம், கிருஷ்ண பக்த சபையின் இத்தாலிய நிர்வாகிகள், சீக்கிய சமுதாயத்தினர் மற்றும் உலகப் போர்களின் போது இத்தாலியில் பணியாற்றிய இந்திய வீரர்களின் நினைவை போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இந்தியாவின் நண்பர்களை தனித்தனியாக சந்தித்து வருகிறார். மேலும் இந்தியவியலாளர்கள் மற்றும் சமஸ்கிருத அறிஞர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் சமுதாய அமைப்புகளின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

இத்தாலி பிரதமர் பலாசோ சிகிவுடனான சந்திப்பை பொறுத்த வரை, இத்தாலி பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் இல்லத்தில் முதன் முறையாக இரு தலைவர்களும் நேரில் சந்தித்தனர். கடந்த 27-ந் தேதி ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை உட்பட இத்தாலி பிரதமர் டிராகியுடன் பிரதமர் பல முறை பேசியிருக்கிறார். அத்துடன் பிரதமர் டிராகி விடுத்த அழைப்பின் பேரில்  ஆப்கானிஸ்தான் குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் பங்கேற்று பேசியதை நீங்கள் அறிவீர்கள். நவம்பர் 2020-ல் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா-இத்தாலி உச்சி மாநாட்டிற்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்களை அவர்கள் ஆய்வு செய்திருப்பார்கள் என நான் கருதுகிறேன். ஒத்துழைப்புக்கான பிற துறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகம் அளிக்க ஏதுவாக, எரிசக்தி மாற்றத்திற்கான நீடித்த ஒத்துழைப்பு குறித்த கூட்டறிக்கையை இந்தியாவும், இத்தாலியும் வெளியிட்டிருப்பதுடன், பெரிய அளவிலான பசுமை வழித்தடத் திட்டங்கள், நவீன மின் தொகுப்புகள், எரிசக்தி சேமிப்பு வசதி, எரிவாயுவை எடுத்துச் செல்லுதல், ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, கழிவுகளை பணமாக்குதல், பசுமை ஹைட்ரனை தயாரித்து விநியோகித்தல் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஊக்குவிப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த சந்திப்பின் போது ஜவுளித்துறை ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-இத்தாலி இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இருவழி முதலீடுகள், குறிப்பாக தூய்மையான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் இத்தாலி அதிக நிபுணத்துவம் பெற்றிருப்பதால் அது குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, இந்த பேச்சுவார்த்தைகளை மேலும் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து இரு பிரதமர்களும் சில அம்சங்களை ஒப்புக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

ரோம் நகரில் முதல்நாள் நிகழ்ச்சிகள் மிகவும் உற்சாகமாக நடைபெற்றதை நீங்கள் அறிவீர்கள். நாளை பிரதமர் வாடிகன் நகரில் போப்பாண்டவர் பிரான்சிசை சந்திக்க உள்ளார், அதன் பிறகு ஜி-20 மாநாட்டின் அமர்வுகளில் பங்கேற்கும் அவர், அங்கு மேலும் பல இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறார். அது குறித்தும் நாங்கள் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிப்போம்.

திரு.அரிந்தம் பக்சி, அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்: மிக்க நன்றி. சில கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க இருக்கிறோம். வெளியுறவுத் துறை செயலாளர் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் போதிய நேரமில்லை. எனவே நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன். சித்தாந்த்.

சித்தாந்த்: எனது பெயர் சித்தாந்த், வியான் – தொலைக்காட்சியிலிருந்து வந்திருக்கிறேன். இன்று காலை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு குறித்து ஒரு கேள்வி எழுப்புகிறேன், தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் போது,  இந்தியாவின் தடுப்பூசிகள் மற்றும் இந்திய தடுப்பூசி சான்றிதழ்கள் குறித்து எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? அத்துடன் பயங்கரவாதப் பிரச்சனையில் இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்.

மனீஷ் சந்த்; சார், மனீஷ் சந்த், இந்தியா ரைட்ஸ் நெட்ஒர்க். கடந்த உச்சிமாநாட்டில், ஆப்பிரிக்கா பிராந்தியத்தைப் போல, மூன்றாம் நாடுகளில் இந்தியாவும், இத்தாலியும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஆராய்வோம் எனக் கூறப்பட்டது. இப்போது, இந்தோ பசிபிக் ஏற்பட்டுள்ளதை, உங்கள் அரசியல் அரங்கில் நீங்கள் அறிவீர்கள். மூன்றாம் நாடுகளில், ஒத்துழைப்புக்கான  சில உறுதியான திட்டங்கள் குறித்து ஏதாவது விவாதம் உள்ளதா என்பதே எனது கேள்வி.

முதலாவது கேள்வியாளர்; புளூம்பெர்க் நியூஸ். அமைச்சர் அவர்களே, சர்வதேச பயணங்களை எளிதாக்க, கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய பரஸ்பர அங்கீகாரம் பற்றி ஜி20 உறுப்பு நாடுகளுக்கு இந்திய தரப்பிலிருந்து அளிக்கப்படும் கருத்துரு என்ன என்பது பற்றிய விவரத்தைக் கூற முடியுமா? போப்புடன் பிரதமர் நாளை நடத்தவுள்ள சந்திப்பு பற்றி விரிவாக கூற முடியுமா? அதாவது, அவர்கள் எந்தெந்த விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள்? குறிப்பாக, இந்தியாவில் உள்ள கிறித்தவர்கள் பற்றியா? அல்லது வேறு ஏதாவதா…

திரு அரிந்தம் பக்சி, அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்; எங்களுக்கு நேரக் கட்டுப்பாடு உள்ளது. எனவே…

முதலாவது கேள்வியாளர்; சிஓபி26 உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த உங்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை உங்களால் விளக்கமுடியுமா? குறிப்பாக, அமெரிக்காவுடனான கூட்டாண்மை பற்றி, அமெரிக்கா இந்தியாவுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி உதவ உறுதியளித்துள்ளதாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒத்துழைப்பைக் கோரியிருப்பதாகவும் அறிந்தோம். நன்றி.

திரு ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, வெளியுறவு செயலர்; தடுப்பூசி சான்றிதழுடன் தொடங்குவோம். ஏனெனில், சித்தன்ட், புளூம்பெர்க் ஆகியவை என்னிடம் அதுபற்றி கேள்வி கேட்டுள்ளன. தடுப்பூசி சான்றிதழ்கள் விஷயம் பற்றி, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் விவாதித்துள்ளோம். நாடுகள் கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவது அதிகரித்துள்ளதால், எளிதான அணுக்கம், பயணம் ஆகியவை நிச்சயமாக விவாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் பற்றிய பரஸ்பர அங்கீகாரம் குறித்து உரையாடல் நடைபெற்றது. சர்வதேச பயணத்தை எளிதாக்க தேவையான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இருதரப்பும் சேர்ந்து முடிவெடுக்கும். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை பொதுவான விதிமுறைகளை மட்டுமே வழங்க முடியும் என்று நான் கருதுகிறேன். எங்களது கோரிக்கைக்கு சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இசைவு தெரிவித்துள்ளன. இதில் உரிய தீர்வு குறித்த பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஜி 20 கூட்டத்திலும், பரஸ்பர தடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரம் குறித்து எழுப்ப உத்தேசித்துள்ளோம். ஆனால், இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சுமுகமான, சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் விஷயத்துக்கு பல நாடுகள் ஆதரவும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளன. இதுபற்றிய விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பல நாடுகள் இதற்கு உடன்பட்டிருப்பதால், அதுபற்றிய கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. இதுபற்றி பிரதமர் கூறிய கருத்து ஏற்கப்படும் எனக் கருதுகிறோம்.

மூன்றாம் நாடுகளுடன் பணியாற்றுவது பற்றிய மனீஷின் கேள்விக்கு வருவோம். நீங்கள் ஆப்பிரிக்கா, ஆசியான் நாடுகள் பற்றி குறிப்பிட்டீர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை இதுபற்றி பேசப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இந்தோ பசிபிக் குறித்த உத்தி ஆவணத்தை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி அங்கீகரிக்கப்படுள்ளது. பொதுவாக, இந்தோ பசிபிக் அமைப்புடன் இணைந்துள்ள அதிபர் உர்சுலா வோன் டெர் லியென், அதிபர் சார்லஸ் மிச்சல் ஆகியோர் இந்தியாவுடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளனர். இதுபற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என தலைவர்கள் கருதுவதாக நான் எண்ணுகிறேன். இந்த நாடுகள் உயர்மட்ட பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்பலாம் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். நாம் அதுபற்றி விவாதித்து குறிப்புகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். ஐரோப்பிய ஒன்றியத்துடன், இந்தோ பசிபிக் ஒத்துழைப்பை முன்னெடுக்கும் பனிக்குழு ஒன்றையும் உருவாக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், இந்தோ பசிபிக் பற்றிய அறிக்கைகள், உத்தி ஆவணங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்தோ பசிபிக் பற்றி அவர்களுக்கு ஒரு கொள்கை உள்ளது. இந்தோ பசிபிக் பற்றி ஒத்த கருத்துடைய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு வலுத்து வருகிறது என நான் நினைக்கிறேன். தலைவர்களுடனான பிரதமரின் இன்றைய உரையாடல், இந்த விஷயத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போப்புடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பு, பிரதமருக்கு தனி அழைப்பு இருக்கும் என்பதை நான் அறிவேன். போப்பை அவர் தனியாக சந்திப்பார். அதனைத் தொடர்ந்து தூதுக்குழு அளவில் பேச்சுக்கள் நடைபெறும். வாட்டிகன் இதுபற்றி நிகழச்சி நிரல் அளிக்கவில்லை. போப்புடன் விஷயங்கள் பற்றி விவாதிக்கும் போது, பாரம்பரியம் நிகழ்ச்சியில் இருக்காது என நான் நம்புகிறேன். அதற்கு நாம் மதிப்பளிப்போம். பொதுவாக உலக கண்ணோட்டத்துடன் ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றி விரிவான பேச்சு நடைபெறுவது நிச்சயம். கோவிட்-19, சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து நாம் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம், அமைதியைப் பராமரிக்க எவ்வாறு இணைந்து ஒத்துழைப்பு அளிக்கலாம் என்பது போன்ற பொதுவான மற்றும் அனைவருக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி  விவாதங்கள் இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்ட சிஓபி26-ல் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் பற்றி இப்போது பார்ப்போம். பிரதமர் சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளதாக நான் நினைக்கிறேன். பாரிஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதில், நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், வளரும் நாடுகளின் கவலைகளை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இலக்குகள் மாற்றப்பட்டு, தொடர்ந்து இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு வருவதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். பாரிசில் அளித்த உத்தரவாதத்தை இந்தியா நெருங்கி வருவதுடன் மட்டுமல்லாமல், அதைத் தாண்டும் என்றும் பிரதமர் நமது சொந்த உதாரணத்தை எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால், அதே சமயம், குறிப்பாக பருவநிலை நிதி வழங்குதல், பசுமை நிதி மற்றும் பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட தங்களது இலக்குகளை வளரும் நாடுகள் எட்ட நாம் எவ்வாறு ஆதரவு அளிக்கிறோம் என்பதை பற்றிய பொறுப்புடமையும் நமக்கு உள்ளது. உறுதி அளித்ததுடன் நில்லாமல், உறுதியான நடவடிக்கைகள் அந்நாடுகளுக்கு தேவைப்படுகின்றன. வளரும் நாடுகள் அளித்த உறுதிமொழியை எட்ட ஆதரவும், உதவியும் அவசியமாகும். அப்போதுதான், பருவநிலை மாற்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியும். இதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என நான் கருதிகிறேன். இந்தியா மேற்கொண்டுள்ள தணிப்பு மற்றும் பின்பற்றுதல் நடவடிக்கைகள் பற்றி ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்த விவாதங்கள் எப்படி போகும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் அதிக நடவடிக்கைகள் தேவை என்பதை பிரதமர் தெளிவாக விளக்கியுள்ளதாகவே நான் கருதுகிறேன். பல நாடுகள் அளித்த வாக்குறுதிகளை உண்மையான அர்ப்பணிப்புடன் அணுகவில்லை என்பதால், இலக்குகளை நிர்ணயிப்பதுடன் நின்று விடாமல், மேலும் பெரு முயற்சி அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். மற்ற விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக வாழ்க்கை முறை மாற்றத்தை எடுத்துக் கொள்ளலாம்.  இந்தியா எப்போதும் இயற்கையுடன் நல்லிணக்கம் கொண்டுள்ளது. மிகக்குறைந்த அளவு தனிநபர் உமிழ்வு உள்ள நாடுகளில் நாமும் உள்ளோம். ஆனால், அதே சமயம், உலக அடிப்படையில், நாம் எவ்வாறு உண்மையிலேயே நீடித்த வாழ்க்கை முறைகளை மேற்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து, இதை அடையும் வழிமுறைகள் அமையும்  என நாம் நம்புகிறோம். இது பருவநிலை மாற்றத்தில் வெப்பத்தின் தாக்கத்தை தானாகவே குறைக்க வழி செய்யும். எனவே, பருவநிலை மாற்றம் குறித்த நமது குறிகோள்களை எட்ட வாழ்க்கை முறையில் மாற்றம் என்பது முன்நிபந்தனையாக உள்ளது.

பயங்கரவாதம், ஆப்கானிஸ்தான் பற்றிய விவாதங்களில் அந்தப் பிரச்சினை போதுமான அளவில் வெளிப்பட்டது என்று நான் நினைக்கிறேன். காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு தலைப்புகள் இரு பக்க தலைவர்களிடமும் நிறைய நேரம் எடுத்துக்கொண்டன. மேலும் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை பொருத்தவரை, தோல்வி மற்றும் நல்லாட்சியை வழங்க இயலாமை, நிலைமையை சமாளிக்க முடியாமல் போனது ஆகியவற்றை தனித்து பார்க்க முடியாது என்பதையும், சுய பரிசோதனைக்கான தலைப்பாக அது இருப்பதையும், ஆப்கானிஸ்தானில் இருந்து எழும் எந்தவித அச்சுறுத்தல் அல்லது மிரட்டலை சர்வதேச சமூகம் மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பிரதமர் திட்டவட்டமாக கூறினார் என்றே நான் நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களை, அதாவது அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அவற்றின் விளைவுகளை மிக மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலியில் உள்ள எங்கள் பங்குதாரர்களால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வலுவான உணர்வு இருந்தது என்று நான் நினைக்கிறேன். இருவரும் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று உணர்ந்தனர். மனிதாபிமான நிலைமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது உண்மைதான், குறிப்பாகப் பிரதமர் ட்ராகி, ஆப்கானிஸ்தானில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது, ​​தற்போதைய சூழ்நிலையின் விளைவாக ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆதரவைத் திரட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டார். அந்த நாட்டில் ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் என்ற வேறுபாடு இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம் என்று கூறிய பிரதமர், அந்த குறிப்பிடத்தக்க உதவியை நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானுக்கு அந்த மனிதாபிமான உதவி நேரடியாக, தடையின்றி செல்வதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளை பற்றி பேசும் போது, ​​இத்தாலியுடனான உறவு சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறிய பிரதமர், குறிப்பாக முதலீடு, வர்த்தகம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் அதிக முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறினார். பிரதமர் ட்ராகியும் அதை வலுவாக ஆமோதித்தார். மேலும் இந்தியா வருமாறு பிரதமர் அவருக்கு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி சார்லஸ் மைக்கேல் மற்றும் உர்சுலா வான் டி லேயன் ஆகிய இருவரையும் இந்தியாவிற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். கொவிட் காரணமாக மிக குறைவான கருந்த்து பரிமாற்றங்களே நிகழ்ந்தன என்று நான் நினைக்கிறேன். தொடக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம், எங்கள் இராஜதந்திர உறவுகளில் வேகத்தைப் பெற விரும்புகிறோம், அந்த முயற்சியின் பின்னணியில் பிரதமரின் அழைப்பை நீங்கள் பார்க்க வேண்டும்.

அரிந்தம் பக்சி, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்: நன்றி, ஐயா. இன்னும் ஒன்றிரண்டு கேள்விகள். பிரனாய்.

பிரனாய் உபாத்யாய்: நான் ஏபிபி நியூஸில் இருந்து பிரனாய் உபாத்யாய். உலகளாவிய விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தல் என்பது இந்தியாவும் எழுப்பி வரும் ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான சந்திப்பிலும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவருடனான சந்திப்பிலும், இத்தாலியுடனான இருதரப்புச் சந்திப்பிலும், இந்த விடயம் விவாதிக்கப்பட்டதா, மேலும் இந்தியா எந்த வகையில் இதை முன்னெடுத்து கொண்டு செல்ல விரும்புகிறது?

பேச்சாளர் 2: இந்திய-இத்தாலிய சந்திப்பைப் பற்றி, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பின் புதிய எல்லைகள் பற்றி மேலும் ஏதாவது சொல்ல முடியுமா?

அரிந்தம் பக்சி, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்: நன்றி.

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவு செயலாளர்: சரி. முதலில் இதற்கு விரைவாக பதிலளிக்கிறேன். நான் கூறியது போல் இரு பிரதமர்களும் வர்த்தகமும் முதலீடும் மிக முக்கியம் என்று கருதினர். இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்தியாவில் வணிகம் செய்யவும் ஆர்வமுள்ள இத்தாலிய நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் இருப்பதாக இத்தாலி பிரதமர் கூறினார். நேரமின்மையால் அந்த விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்றார். இந்திய மற்றும் இத்தாலிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இந்தியாவில் இத்தாலிய முதலீடுகளை, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி போன்ற துறைகளில் ஈர்க்க ஆர்வமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். இரு, மூன்று சக்கர மின்சார வாகனங்களை மிகச் சிறப்பாகத் தயாரிக்கின்ற சில நிறுவனங்கள் இத்தாலியில் உள்ளன. எனவே, இவற்றில் பலவற்றின் மீது பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே, வர்த்தக முதலீடு, இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான பொருளாதாரப் பரிமாற்றங்கள் ஆகியன இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பில் அதிகளவில் எதிரொலித்தன என்று நான் நினைக்கிறேன்.

 

பிரனாய் அவர்களே, உங்கள் கேள்வி விநியோக சங்கிலிகளைப் பற்றியது. உறுதியான விநியோக சங்கிலிகள் பற்றி நிச்சயமாக பேசப்பட்டது. இந்த கலந்துரையாடல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலிய பிரதமர் ஆகிய இருவருடனும் நடந்தது. இது குறித்து எங்களால் விரிவாக செல்ல முடியவில்லை. ஆனால் இரு தரப்பினரும் இதில் அதிக வேலைகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதும், இரு தரப்பினரும் இதில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் உறுதியாக நிறுவப்பட்ட. மேலும் நாங்கள் உருவாக்க விரும்பும் பாதுகாப்பான விநியோக சங்கிலிகளை நிறுவ எதிர்காலத்தில் இந்த இரண்டு பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவோம் (பதில் இந்தியில் கூறப்பட்டது).

திரு அரிந்தம் பக்சி, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்: ஐயா, அனைவருக்கும் இந்தி பேசத் தெரியாது என்பதால், கடைசிப் பகுதியை மட்டும் மொழிபெயர்க்கிறேன். இத்தாலி பிரதமருடனான உரையாடலில் விநியோக சங்கிலிகள் பற்றி விவாதிக்கப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு, விரிவாக விவாதிக்கப்படாவிட்டாலும் அது குறித்து பேசப்பட்டதாக நமது வெளியுறவுச் செயலாளர் விளக்கினார். ஆனால், நாம் இதில் இணைந்து பணியாற்ற வேண்டும், இதில் அதிக வேலைகளைத் தொடர வேண்டும் மற்றும் பாதுகாப்பான மற்றும் உறுதியான விநியோகச் சங்கிலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவு செயலாளர்: குறிப்பாக இந்தோ பசிபிக் சூழலில்.

திரு அரிந்தம் பக்சி, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்: இத்துடன், சிறப்பு ஊடக சந்திப்பின் முடிவுக்கு நாங்கள் வருகிறோம். எங்களுடன் இங்கே இணைந்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் இங்கு வந்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன், ஐயா. மேலும் நாங்கள் தொடர்ந்து உங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தள சேனல்களுடன் இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவு செயலாளர்: நன்றி.

********



(Release ID: 1767946) Visitor Counter : 244