பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு திருமிகு மெட்டே ஃபிரடெரிக்சன்னுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் மொழிபெயர்ப்பு

Posted On: 09 OCT 2021 1:29PM by PIB Chennai

மாண்புமிகு

டென்மார்க் பிரதமர் அவர்களே,

டென்மார்க்கை சேர்ந்த அனைத்து பிரதிநிதிகளே,

அனைத்து ஊடக நண்பர்களே,

வணக்கம்!

கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு, அரசு தலைவர்களின் வரவேற்புக்கு சாட்சியாக இந்த ஹைதராபாத் மாளிகை விளங்கியது. கடந்த 18-20 மாதங்களாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. டேனிஷ் பிரதமரின் வருகையுடன் இன்று ஒரு புதிய தொடக்கம் உருவாகியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

இது உங்கள் முதல் இந்தியா வருகை என்பது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. உங்களுடன் வந்துள்ள அனைத்து டேனிஷ் பிரதிநிதிகளையும் வணிகத் தலைவர்களையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய சந்திப்பு எங்கள் முதல் நேரடி சந்திப்பாக இருக்கலாம், ஆனால், கொரோனா காலத்தில் கூட இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் வேகம் சீராக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இன்று, எங்கள் காணொலி உச்சிமாநாட்டில், இந்தியா மற்றும் டென்மார்க்கிற்கு இடையே பசுமை மூலோபாய கூட்டாண்மையை நிறுவுவதற்கான வரலாற்று முடிவை நாங்கள் எடுத்தோம். இது நமது இரு நாடுகளின் தொலைநோக்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதையின் பிரதிபலிப்பாகும். கூட்டு முயற்சியால், தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் பசுமை வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும் என்பதற்கு இந்த கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இந்த கூட்டின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தை இன்று நாங்கள் மதிப்பாய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினோம். இந்தச் சூழலில், சர்வதேச சூரியக் கூட்டணியில் டென்மார்க் உறுப்பினராக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் ஒத்துழைப்புக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

நண்பர்களே,

டேனிஷ் நிறுவனங்களுக்கு இந்தியா புதிதல்ல. எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், தளவாடங்கள், உள்கட்டமைப்பு, இயந்திரங்கள், மென்பொருள் போன்ற பல துறைகளில் டேனிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றன. மேக் இன் இந்தியாமற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்ஆகியவற்றின் வெற்றிக்கு அவை குறிப்பிடத்தகுந்த பங்காற்றியுள்ளன. நாம் முன்னேற விரும்பும் அளவிலும் வேகத்திலும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எங்கள் லட்சியத்திலும் டேனிஷ் நிபுணத்துவம் மற்றும் டேனிஷ் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்திய பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், குறிப்பாக உற்பத்தி துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அத்தகைய நிறுவனங்களுக்கு மகத்தான வாய்ப்புகள் வழங்குகின்றன. இன்றைய சந்திப்பில், இது போன்ற சில வாய்ப்புகள் பற்றியும் விவாதித்தோம்.

நண்பர்களே,

எங்கள் ஒத்துழைப்பின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவோம், அதில் புதிய பரிமாணங்களை சேர்ப்போம் என்ற முடிவையும் இன்று நாங்கள் எடுத்தோம். சுகாதாரத் துறையில் ஒரு புதிய கூட்டை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்தியாவில் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, விவசாயம் தொடர்பான தொழில்நுட்பத்தில் ஒத்துழைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் கீழ், உணவு பாதுகாப்பு, குளிர் சங்கிலி, உணவு பதப்படுத்துதல், உரங்கள், மீன்வளம், மீன் வளர்ப்பு போன்ற பல துறைகளின் தொழில்நுட்பங்களில் பணி நடைபெறும். ஸ்மார்ட் வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், 'வேஸ்ட் டு பெஸ்ட்' மற்றும் செயல்திறன் மிக்க விநியோக சங்கிலிகள் போன்ற துறைகளிலும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த ஆழமான மற்றும் பயனுள்ள விவாதங்களை இன்று நாங்கள் நடத்தினோம். பல்வேறு சர்வதேச அரங்குகளில் டென்மார்க்கிலிருந்து நாங்கள் பெற்று வரும் வலுவான ஆதரவுக்கு டென்மார்க்கிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்திலும், ஜனநாயகத்தின் மீது மரியாதை கொண்ட, விதிகளின் மீது நம்பிக்கை கொண்ட எங்கள் இரு நாடுகளும் இதே போன்ற வலுவான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

அடுத்த இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்புக்காகவும், டென்மார்க்கிற்கு என்னை அழைத்ததற்காகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய மிகவும் பயனுள்ள உரையாடலுக்கும் நமது இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் அனைத்து முடிவுகளுக்கும் உங்கள் நேர்மறையான எண்ணங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

குறிப்பு: இது பிரதமரின் இந்தி உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும்.

*****************(Release ID: 1762511) Visitor Counter : 101