பிரதமர் அலுவலகம்

சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்


பிரதமர், ராய்பூரில் உள்ள தேசிய உயிர்வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தார்

வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதுகளை பிரதமர் வழங்குகினார்

"விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களின் வளர்ச்சி விரைவாகிறது"

"அறிவியலும் அரசும் சமூகமும் இணைந்து செயல்படும் போது, முடிவுகள் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் இத்தகைய கூட்டணி புதிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டை வலுப்படுத்தும் "

"பயிர்கள் அடிப்படையிலான வருமானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மதிப்பு கூட்டல் மற்றும் பிற விவசாய வருமானத்திற்கு விவசாயிகளை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன"

"நமது பழங்கால விவசாய மரபுகளுடன், எதிர்காலத்தை நோக்கிச் செல்வது சம அளவில் முக்கியம்"

Posted On: 28 SEP 2021 12:42PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் அந்த இணையக் கலந்தாய்வில், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் உரையாற்றினார்.

ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பாலைச் சேர்ந்த திருமதி. ஜைடூன் பேகமுடன் பேசிய பிரதமர், புதுமையான விவசாய நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளும் பயணம் பற்றியும், மற்ற விவசாயிகளுக்கு அவர் எப்படி பயிற்சி அளித்தார் என்பது குறித்தும், பள்ளத்தாக்கில் உள்ள பெண்களின் கல்விக்காக அவர் எவ்வாறு பணியாற்றுகிறார் என்பது குறித்தும் பேசினார். விளையாட்டுகளில் கூட ஜம்மு - காஷ்மீரின் பெண்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், குறைவான சொத்துக்களைக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தேவைகள் தான் அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், அவர்கள் அனைத்து நன்மைகளையும் நேரடியாகப் பெறுகிறார்கள் என்றும் கூறினார்.

உத்திரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் என்ற கிராமத்தின் விவசாயியும் விதை உற்பத்தியாளருமான திரு. குல்வந்த் சிங்குடன் பிரதமர் உரையாடிய போது, விதவிதமான விதைகளை அவரால் எப்படி உற்பத்தி செய்ய முடிந்தது என்று கேட்டார். பூசாவில் உள்ள வேளாண் நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடனான தொடர்புகளில் இருந்து அவர்கள் எவ்வாறு பயனடைகின்றனர் என்றும், இதுபோன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது விவசாயிகள் மத்தியில் என்ன மனநிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கேட்டறிந்தார். தங்களது பயிர்களைப் பதப்படுத்தி மதிப்புக் கூட்டல் செய்ததற்காக விவசாயிகளைப் பிரதமர் பாராட்டினார். மேலும்,  சந்தை அணுகல், நல்ல தரமான விதைகள், மண் தர அளவீடு அட்டைகள் போன்ற பல முயற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.

கோவாவின் பார்டெஸைச் சேர்ந்த திருமதி.தர்ஷனா பெடென்கரிடம், அவர் பல்வேறு பயிர்களை எப்படி வளர்க்கிறார் என்றும், பல்வேறு கால்நடைகளை எப்படி வளர்க்கிறார் என்றும் பிரதமர் கேட்டறிந்தார். விவசாயியால் விளைவிக்கப்பட்ட தேங்காயின் மதிப்புக் கூட்டல் பற்றி அவர் கேட்டறிந்தார். மேலும் ஒரு பெண் விவசாயி தொழில் முனைவோராக வளர்வது குறித்த தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

மணிப்பூரைச் சேர்ந்த திரு. தோய்பா சிங்குடன் உரையாடிய பிரதமர், ஆயுதப்படையில் சேவை புரிந்த பின்னர், விவசாயத்தில் ஈடுபட்டதற்காக அவரைப் பாராட்டினார். மேலும், அந்த விவசாயியின் பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளான விவசாயம், மீன்வளம் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் பிரதமரின் ஆர்வத்தை ஈர்த்தன. ஜெய் ஜவான்-ஜெய் கிசானின் சிறந்த உதாரணம் அவர் என்று பிரதமர் அவரைப் பாராட்டினார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் திரு..சுரேஷ் ராணாவிடம் அவர் தனது சோளச் சாகுபடியை எவ்வாறு தொடங்கினார் என்பது குறித்து பிரதமர் விசாரித்தார். விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) திறம்படப் பயன்படுத்தியதற்காக உத்தரகாண்ட் விவசாயிகளை பிரதமர் பாராட்டினார், மேலும் விவசாயிகள் கூட்டாக வேலை செய்யும் போது அவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றும் கூறினார். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வளங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில், விவசாயம் தொடர்பான சவால்களைத் தீர்க்க முன்னுரிமை அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார். மேலும் "புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மாறிவரும் பருவநிலைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் அதிக ஊட்டச்சத்துள்ள விதைகள் மீது கவனம் குவிக்கப்பட்டுள்ளது," என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த மிகப்பெரிய வெட்டுக்கிளித் தாக்குதலை பிரதமர் நினைவு கூர்ந்தார். அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும்,  அதனைத் தடுக்கவும் நிறைய முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது, விவசாயிகளை அதிக சேதத்தில் இது இருந்து காப்பாற்றியது என்றார்.

விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாதுகாப்பு வளையம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களின் வளர்ச்சி விரைவானதாக மாறும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், நிலத்தின் பாதுகாப்பிற்காக 11 கோடி மண் வள அளவீட்டு அட்டைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு நீர்ப் பாதுகாப்பை வழங்குவதற்காக நிலுவையில் உள்ள சுமார் 100 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான பிரச்சாரங்கள், பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு புதிய விதைகளை வழங்குவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்வது போன்ற விவசாயிகளுக்கு பலனளிக்ககூடிய  முயற்சிகள் குறித்து பிரதமர் பட்டியலிட்டார். குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிப்பதோடு, கொள்முதல் செயல்முறையும் மேம்படுத்தப்பட்டது, இதனால் அதிகமான விவசாயிகள் பலன் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். குறுவை சாகுபடிப் பருவத்தில் 430 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 85ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது கோதுமைக் கொள்முதல் மையங்கள் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், வங்கிகளிடமிருந்து உதவி பெறுவதை எளிதாக்கியுள்ளோம் என பிரதமர்  கூறினார். விவசாயிகள் இன்று வானிலைத் தகவலை சிறந்த முறையில் பெறுகின்றனர். சமீபத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம், புதிய வகைப் பூச்சிகள், புதிய நோய்கள், தொற்றுநோய்கள் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கால்நடைகள் மற்றும் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த விஷயங்களில் தீவிரமான தொடர்ச்சியான ஆராய்ச்சி அவசியம். அறிவியலும், அரசும், சமூகமும் இணைந்து செயல்படும் போது முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்றும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் இத்தகைய கூட்டணி புதிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டை வலுப்படுத்தும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

பயிர் அடிப்படையிலான வருமான அமைப்பிலிருந்து விவசாயியை வெளியே கொண்டு வந்து மதிப்புக் கூட்டல் மற்றும் பிற விவசாயப் பணிகளுக்கு அவர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தீர்வுகளுடன் சத்தான தானியங்கள்,  சிறுதானியங்களை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றை வளர்க்கலாம் என்பதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார். வரும் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து ஐ.நா வழங்கிய வாய்ப்புகளை பயன்படுத்த மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

நமது பழங்கால விவசாய மரபுகளைக் கைவிடாமல், அதே நேரம் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதும் சம அளவில் மிகவும் முக்கியம் என்று பிரதமர் கூறினார். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய விவசாயக் கருவிகள் எதிர்கால விவசாயத்தின் மையப் புள்ளியாக உள்ளன என்றார். மேலும் "நவீன விவசாய இயந்திரங்களையும், உபகரணங்களையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் தான் இன்று நல்ல முடிவுகளைக் காட்டுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

***



(Release ID: 1758911) Visitor Counter : 343