இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது


ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்றுள்ளது

Posted On: 05 AUG 2021 2:05PM by PIB Chennai

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு.நரேந்திர மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி இன்று வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளது.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரஹம் ரீத் மற்றும் துணை பயிற்சியாளர் பியூஷ் தூபே ஆகியோரிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக பேசி வாழ்த்து தெரிவித்தார்.

ஹாக்கி அணியை வாழ்த்தி குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில், "41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி அசாத்திய திறமையும், விடா முயற்சியையும் வெளிப்படுத்தி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்தியாவில் ஹாக்கிக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது, இது நாட்டில் இளைஞர்கள் ஹாக்கி விளையாட்டைத் தேர்வு செய்யவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும்" என்றார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்று சிறப்பு மிக்கது! இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்பட்டிருக்கும். வெண்கலப் பதக்கத்தை கொண்டு வந்துள்ள நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இதன்மூலம் அவர்கள் ஒட்டுமொத்த தேசத்துக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஊக்கமளித்துவிட்டனர். இந்தியா தனது ஹாக்கி அணியால் பெருமை அடைகிறது" என பதிவிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் டிவிட்டரில், "இந்தியாவுக்கு ஒரு கோடி கைதட்டல்கள்!

வீரர்களே நீங்கள் சாதித்துவிட்டீர்கள், எங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. நமது ஆண்கள் ஹாக்கி அணி தங்கள் இலக்கை அடைய போராடி வெற்றி பெற்று ஒலிம்பிக் புத்தகத்தில் தங்களது பெயரை நிலைநாட்டியுள்ளனர். உங்களால் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742693

----



(Release ID: 1742888) Visitor Counter : 233