பிரதமர் அலுவலகம்

ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு பிரதமர் திரு மோடி பாராட்டு


மேஜர் பிரமிளா சிங் (ஓய்வு) தமது சேமிப்பு தொகையிலிருந்து விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்

உங்களது முன்முயற்சி சமூகத்திற்கு எழுச்சியூட்டும் ஆதாரமாக விளங்கும், என்று பிரதமர் எழுதியுள்ளார்

இந்த எதிர்பாராத நெருக்கடி, விலங்குகளுக்கும் கடினமாக உள்ளது, அவற்றின் தேவைகள் மற்றும் துயரத்தைக் கருதியும் நாம் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும்: பிரதமர்

Posted On: 18 JUL 2021 12:44PM by PIB Chennai

இந்திய ராணுவத்திலிருந்து மேஜராக ஓய்வு பெற்று ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசிக்கும் திருமிகு பிரமிளா சிங்கின் அன்பு மற்றும் சேவையைப் பாராட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் போது தமது தந்தை திரு ஷியாம்வீர் சிங்குடன் இணைந்து ஆதரவற்ற விலங்குகளைப் பராமரித்து, அவற்றின் வேதனையைப் புரிந்து மேஜர் பிரமிளா சிங் உதவ முன்வந்தார். மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும்  தங்களது தனிப்பட்ட வைப்புத் தொகையைக் கொண்டு தெருவில் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மேஜர் பிரமிளாவைப் பாராட்டுகையில், அவரது முயற்சிகள், சமூகத்திற்கு மிகுந்த ஊக்கமளிக்கும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், 'கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத நிலையை மனோபலத்துடன் நாம் எதிர் கொண்டுள்ளோம். மக்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க இயலாதவாறு இந்த வரலாற்று தருணம் அமைந்துள்ளது. இதுபோன்ற நிலை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும் சவாலானதாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆதரவற்ற விலங்குகளின் வலி மற்றும் தேவைகளை உணர்ந்து அவற்றின் நல்வாழ்விற்காக நீங்கள் தனிப்பட்ட அளவில் முழு திறனையும் அளித்து செயல்படுவது பாராட்டுக்குரியது’, என்று எழுதினார்.

அதேவேளையில், இந்த சவாலான நேரத்தில், மனித சமூகத்தை எண்ணி பெருமை கொள்ளும் வகையில் ஏராளமான முன்னுதாரண நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதாக பிரதமர் திரு மோடி கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும் தங்களது முன்முயற்சிகளால் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தம் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொது முடக்கத்தின்போது தாம் தொடங்கிய விலங்குகளின் பராமரிப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக, முன்னதாக மேஜர் பிரமிளா பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆதரவற்ற விலங்குகளின் துயரத்தை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், இது போன்ற விலங்குகளுக்கு உதவ அதிகமானோர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

-----


(Release ID: 1736554) Visitor Counter : 294