பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
16 JUL 2021 7:39PM by PIB Chennai
எனது அமைச்சரவை தோழரும், காந்திநகர் எம்பியுமான திரு அமித் ஷா அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் நிதின் பாய் அவர்களே, ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாள் 21-ம் நூற்றாண்டின் விருப்பம், இளைய இந்தியாவின் ஆற்றல், எழுச்சி ஆகியவற்றின் பெரும் அடையாள சின்னமாக விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நகர்ப்புறப்பகுதி வடிவமைப்பு, நவீன உள்கட்டமைப்பு இணைப்புகள் ஆகியவற்றுடன், புதிய இந்தியாவின் புதிய அடையாளமாக மற்றொரு இணைப்பு சேர்ந்துள்ளது. இந்த திட்டங்களை நான் தில்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறேன். நேரில் வரவேண்டும் என்ற எனது ஆர்வத்தை என்னால் வார்த்தைகளால் கூறமுடியவில்லை. விரைவில் இந்தத் திட்டங்களைப் பார்வையிட நான் நேரில் வருவேன்.
சகோதர, சகோதரிகளே, கான்கிரீட் கட்டுமானமாக மட்டுமல்லாமல் தனது சொந்த குணநலனுடன் கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குவதே நாட்டின் இன்றைய லட்சியமாகும். சிறந்த பொது வெளி என்பது மிகவும் அவசரமான அவசியத் தேவையாகும். இதனைக் கடந்த காலத்தில் நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த கால நகர்ப்புற திட்டமிடுதல் என்பது ஆடம்பரத்துடன் சம்பந்தப்பட்டது. போதிய பொது வெளிகள் இல்லாமல், கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், தரமான பொது வெளிகள் இல்லாமல் நகரங்கள் இருந்தன. ஆனால், நகர்ப்புற வளர்ச்சிக்கான பழைய அணுகுமுறை தற்போது கைவிடப்பட்டுள்ளது.
நண்பர்களே, அகமதாபாத்தில் சபர்மதியின் நிலையை யாராவது மறக்க முடியுமா? இப்போது, ஆற்றங்கரையில் பூங்கா, உடற்பயிற்சி நிலையம், கடல் விமானம் போன்ற சேவைகள் செயல்பட்டு வருகின்றன. உண்மையில், சூழல் முற்றிலும் மாறிவிட்டது. கன்காரியாவிலும் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் உள்ள ஒரு பழைய ஏரி, அனைவரையும் கவரும் மையமாக மாறும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.
நண்பர்களே,
குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் இயற்கை வளர்ச்சியோடு கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் இடம் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு மற்றும் படைப்புத்திறனை ஒருங்கிணைக்கும் விதமாக அறிவியல் நகரம் திட்டம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தும் பொழுதுபோக்கு வசதிகள் இங்குள்ளன. இங்குள்ள கேளிக்கை விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் தளமாக அமைந்துள்ளது. குழந்தைகள் எப்போதும், ரோபோக்கள் மற்றும் பெரிய விலங்கு பொம்மைகள் வேண்டும் என பெற்றோரிடம் அடிக்கடி கேட்பதுண்டு. சில குழந்தைகள் டைனோசரையும், சில குழந்தைகள் சிங்கத்தையும் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். பெற்றோர்கள் இதற்கெல்லாம் எங்கு செல்வார்கள்? அறிவியல் நகரத்தில் இதற்கு இடமுண்டு. இயற்கை பூங்கா குழந்தைகளை வெகுவாகக் கவரும். அறிவியல் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் இன்னும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். நமது நாட்டில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகமாக இது உள்ளது. உலகெங்கிலும் இருக்கும் நீர்வாழ் பல்லுயிர் தன்மையை ஒரே இடத்தில் காணக்கிடைப்பது பரவசமான அனுபவமாகும்.
எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது கவர்ச்சிகரமான அம்சமாக மட்டுமே இல்லாமல் ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அவர்களது மனங்களில் விதைக்கும். மருத்துவம், வேளாண்மை, விண்வெளி, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்ற அனுபவத்தை நமது இளம் நண்பர்கள் பெறமுடியும். ரோபோக்கள் பரிமாறும் உணவு வகைகளை உண்டு களிக்க முடியும். நேற்று நான் இந்தப் படங்களை எனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தேன். இவற்றை வெளிநாடுகளில் மட்டுமே காணமுடியும் என பதிவுகள் வெளிவந்தன. இந்தப்படங்கள் குஜராத்தைச் சேர்ந்தவை என்பதை பலரும் நம்பவில்லை. அறிவியல் நகரத்துக்கு இளைஞர்களும், குழந்தைகளும் அதிக அளவில் வரவேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பள்ளிகள் இந்த அறிவியல் நகரத்துக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
நண்பர்களே, குஜராத்தின் பெருமையைப் பறைசாற்றும் இத்தகைய பல திட்டங்கள் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளன. ரயில் போக்குவரத்து இன்று நவீனத்துவம் பெற்றுள்ளது. காந்திநகர், வத்நகர் ரயில் நிலையங்களை மறுசீரமைத்துள்ளதற்கும், மகேசனா-வரேத்தா, சுரேந்திர நகர்-பிப்பவாவ் ரயில்பாதைகள் மின்மயமாக்கம் செய்யப்பட்டதற்கும் மக்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன. காந்திநகர் –வாரணாசி அதிவிரைவு ரயில் போக்குவரத்து, சோமநாதர், விஸ்வநாதர் தளங்களை இணைக்கும் சேவையாகும்.
சகோதர, சகோதரிகளே, 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் தேவைகளை இருபதாம் நூற்றாண்டு வழிமுறைகளின் மூலம் பூர்த்தி செய்ய முடியாது. இதன் காரணமாக ரயில்வேயில் புதிய சீர்திருத்தம் தேவைப்பட்டது. ரயில்வேயை சேவையாக மட்டுமில்லாமல் சொத்தாகவும் மேம்படுத்தியுள்ளோம். இதன் விளைவுகளை தற்போது காணலாம். முக்கிய ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கூட வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அகலப் பாதையில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தேஜாஸ், வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் பயணிகளுக்கு புதுமையான, அற்புதமான அனுபவத்தை அளித்துள்ளன.
ஒற்றுமை சிலையைப் பார்வையிட செல்பவர்கள் அதன் பயனைப் பெறமுடியும். புதிய பரிமாணத்தில் இந்த ரயில் பயணத்தை உணரமுடியும். ரயில்கள், ரயில் நிலையங்கள், நடைமேடைகள், பாதைகளில் தூய்மையை இப்போது உணரலாம். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பயோ-டாய்லெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. நவீனமயம் மற்றும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலன் ஆகிய இரண்டு தடங்களில் மட்டுமே புதிய இந்தியாவுக்கான வளர்ச்சி வாகனம் முன்னேறிச் செல்ல முடியும் .
நண்பர்களே, காந்திநகரின் புதிய ரயில் நிலையம், நாட்டின் உள்கட்டமைப்பு குறித்த மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. குஜராத் மக்கள் இதனை நன்கு அறிவார்கள். நான் குஜராத்திற்கு தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற போது, பல பரிசோதனைகளை நாங்கள் அங்கு மேற்கொண்டுள்ளோம். மோசமான நிலையில் இருந்த பேருந்து நிலையங்கள் இன்று நவீனமயமாகியுள்ளதைக் காணமுடியும்.
நான் தில்லிக்கு வந்தபோது, ரயில்வே அதிகாரிகளை குஜராத்துக்கு அனுப்பி பேருந்து நிலையங்களைப் பார்த்து வருமாறு கூறினேன். தில்லியிலும், ரயில் நிலையங்களை ஏன் அவ்வாறு உருவாக்க முடியாது என நான் கேட்டேன். ரயில்வே வெறும் பயண ஊடகமாக மட்டும் இல்லாமல், பொருளாதாரத்தின் மையமாக மாறவேண்டும். ரயில் நிலையங்களை, அரசும், தனியாரும் இணைந்து மேம்படுத்தும் திசையில் நாம் நகர்ந்து வருகிறோம். குஜராத்தில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டது போல, விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டது போன்று, ரயில் நிலையங்களையும் இதே முறையில் மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, ரயில்நிலையங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக இருக்க வேண்டும் என்பதற்கு காந்திநகர் நவீன ரயில்நிலையம் நிரூபணமாகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரயில் பாதைக்கு மேலே ஒரு ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. அதே நிலத்தில், அதிக பயனைப் பெறும் வகையில், இது அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு மட்டுமல்லாமல், வர்த்தகத்துக்கும் இது பெரிதும் உதவும்.
மகாத்மா மந்திர், தண்டி குதிர் ஆகியவற்றை இந்த ரயில் நிலையத்திலிருந்து காண்பது பெரும் பிரமிப்பை ஏற்படுத்தும். இது சுற்றுலா மையமாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை. இந்த ரயில் நிலையத்தின் மூலம், மகாத்மா மந்திருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ரயில்வே ஆற்றிவரும் பங்கு அளப்பரியதாகும். வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் மற்றும் வசதியின் புதிய பரிமாணங்களை ரயில்வே கொண்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு பகுதியின் தலைநகரங்களுக்கு முதன்முறையாக ரயில்கள் சென்றடைந்துள்ளன. வாத் நகரும் இன்றைக்கு இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. புதிய நிலையம் உண்மையிலேயே கவர்ச்சிகரமாக இருக்கிறது. வாத் நகர் ரயில் நிலையத்துடன் எனக்கு பல்வேறு நினைவலைகள் உள்ளன. புதிய அகலப் பாதை தடத்தை அமைத்ததன் மூலம் வாத் நகர்-மோதேரா-பதான் பாரம்பரிய பிரிவுக்கு தற்போது சிறப்பான ரயில் சேவை கிடைக்கும்.
சகோதர, சகோதரிகளே, குஜராத்திலும், நாட்டிலும் இத்தகைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு இடையிலும், கொரோனா போன்ற பெருந்தொற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 100 ஆண்டுகளில் கண்டிராத பெருந்தொற்று நம் அனைவரின் வாழ்க்கையையும் பாதித்தது. நமது நண்பர்கள் பலரை கொரோனா தொற்று நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றுள்ளது. ஆனால், நாடு என்ற வகையில் நாம் ஒன்று சேர்ந்து அதை எதிர்த்துப் போராடி வருகிறோம். குஜராத்தும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது.
தொற்றைக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் தடமறிந்து, சிகிச்சையை அளிப்பதுடன், தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரின் முயற்சியால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை நாம் அடைவோம். இதே நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
(Release ID: 1736447)
Visitor Counter : 278
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam