பிரதமர் அலுவலகம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார்நிலை குறித்து பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நமது தேசிய குணநலனில் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிப்பதுடன், நமது இளைஞர்கள் வலுவான மற்றும் துடிப்பான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார்கள்: பிரதமர்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நமது இளைஞர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் துணையாக இருக்கும்: பிரதமர்

தடுப்பூசி முதல் பயிற்சி வசதிகள் வரை நமது விளையாட்டு வீரர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்: பிரதமர்

சர்வதேச அரங்கில் ஒளிரும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் விளையாட்டுகளில் ஈடுபட ஆயிரம் பேருக்கு ஊக்கமளிப்பார்கள்: பிரதமர்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமளித்து, நாடு முழுவதும் அவர்களுடன் துணை நிற்பதை உறுதிபட தெரிவிப்பதற்காக ஜூலை மாதம் காணொலிக் காட்சி வாயிலாக அவர்களை சந்திப்பேன்: பிரதமர்

Posted On: 03 JUN 2021 4:31PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு 50 நாட்கள் உள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்தியாவின் தயார்நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். பெருந்தொற்றுக்கு இடையேயும் வீரர்களுக்கு தடையற்ற பயிற்சி, ஒலிம்பிக் ஒதுக்கீட்டில் வெற்றி பெறுவதற்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது, வீரர்களுக்குத் தடுப்பூசி, அவர்களுக்கு தேவையான ஆதரவு போன்றவற்றை அளிப்பதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தகுதி வாய்ந்த/ வாய்ப்புள்ள வீரர், உதவியாளர், அதிகாரிகள் அனைவருக்கும் வெகுவிரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமளித்து, இந்தியர்கள் அனைவரின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜூலை மாதம் காணொலிக் காட்சி வாயிலாக அவர்களை தாம் சந்திக்க விருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

நமது தேசிய குணநலனில் விளையாட்டு மிக முக்கியப் பங்கு வகிப்பதாகவும், நமது இளைஞர்கள் வலுவான மற்றும் துடிப்பான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நமது இளைஞர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் துணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் ஒளிரும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும், விளையாட்டுகளில் ஈடுபட ஆயிரம் பேருக்கு ஊக்கமளிப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கும் போது அவர்களது மன உறுதியை ஊக்குவிப்பதற்காக வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கான நடவடிக்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். எனவே போட்டிகள் நடைபெறும் போது இந்தியாவிலுள்ள அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் அடிக்கடி காணொலிக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

11 விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 100 வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றிருப்பதாகவும் கூடுதலாக 25 வீரர்கள் தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் இது குறித்த கூடுதல் விவரங்கள் ஜூன் மாத இறுதியில் தெரியவரும் என்றும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 19 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக 26 மாற்றுத்திறனாளி வீரர்கள் தகுதி பெற்றிருப்பதுடன் மேலும் 16 பேர் தகுதி பெற வாய்ப்புள்ளது.

*****************


(Release ID: 1724112) Visitor Counter : 254