பிரதமர் அலுவலகம்

கொவிட் காரணமாக வருமானம் ஈட்டும் நபரை இழந்துள்ள குடும்பங்களுக்கு மேலும் உதவுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது


கொவிட் காரணமாக உயிரிழந்தோரை சார்ந்திருப்பவர்களுக்கு பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்

ஈடிஎல்ஐ திட்டத்தின் கீழ் உள்ள காப்பீட்டு பலன்கள் மேம்படுத்தப்பட்டு, தாரளமயமாக்கப்பட்டுள்ளன

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை களைய இந்த திட்டங்கள் உதவும்: பிரதமர்

Posted On: 29 MAY 2021 7:47PM by PIB Chennai

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பிஎம்-கேர்ஸ் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்துகொவிட் காரணமாக வருமானம் ஈட்டும் நபரை இழந்துள்ள குடும்பங்களுக்கு மேலும் உதவுவதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

கொவிட் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதோடு, காப்பீட்டு பலன்களும் மேம்படுத்தப்பட்டு, தாரளமயமாக்கப்பட்டுள்ளன.

இந்த குடும்பங்களுக்கு ஆதரவாக அரசு நிற்பதாக பிரதமர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை களைய இந்த திட்டங்கள் உதவும் என்றும் பிரதமர் கூறினார்.

* பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம்

பாதிக்கப்பட்ட குடும்பம் கண்ணியத்துடனும், நல்ல வாழ்க்கை தரத்துடனும் வாழ்வதற்கு உதவும் வகையில், தொழில் சார்ந்த இறப்புகளுக்கு வழங்கப்படும் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் ஓய்வூதியப் பலன் கொவிட் இறப்புகளுக்கும் வழங்கப்படும். ஏற்கனவே உள்ள விதிகளின் படி, தொழிலாளியின் சராசரி தினக் கூலியில் 90 சதவீதத்திற்கு சமமான ஓய்வுதியத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறலாம். 2020 மார்ச் 24-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமலுக்கு வரவுள்ள இந்த பலன், 2022 மார்ச் 24 வரை அமலில் இருக்கும்.

* பணியாளர் வருங்கால வைப்பு நிதி - பணியாளர்களின் சேமிப்புடன் இணைந்த காப்பீட்டு திட்டம் (ஈடிஎல்ஐ)

ஈடிஎல்ஐ திட்டத்தின் கீழ் உள்ள காப்பீட்டு பலன்கள் மேம்படுத்தப்பட்டு, தாரளமயமாக்கப்பட்டுள்ளன. இதர பயனாளிகளோடு, கொவிட் காரணமாக உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு குறிப்பாக இது உதவும்.

அதிகபட்ச காப்பீட்டு பலன் ரூ 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு

குறைந்தபட்ச காப்பீட்டு பலனாக ரூ 2.5 லட்சம் மீண்டும் இருக்கும். 2020 பிப்ரவரி 15-ல் இருந்து அடுத்த 3 வருடங்களுக்கு இது அமலில் இருக்கும்.

ஒப்பந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும் விதி தாரளமயமாக்கப்பட்டு, இறப்புக்கு 12 மாதங்களுக்கு முன்பு பணி மாறியோரின் குடும்பங்களுக்கும் பலன் கிடைக்கும்.

திட்டங்கள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிடும்.

------



(Release ID: 1722780) Visitor Counter : 299