சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கொவிட் தொற்றுக்கு உயர்தர சிகிச்சை

Posted On: 19 MAY 2021 9:28AM by PIB Chennai

நாட்டில் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் பற்றாக்குறையைத் தீர்க்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவற்றில் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவமனைகள் முழுவதும் இயங்கத் தொடங்கிவிட்டன. மேலும் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும், எம்பிபிஎஸ் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு நாட்டில் பெருந்தொற்று தொடங்கியது முதல், பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், கொவிட் மேலாண்மையில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், இந்த மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சைக்கென்று பிரத்தியேகமாக 1300க்கும் அதிகமான பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளும், 530 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள மொத்த பிராணவாயு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை முறையே 1900 மற்றும் 900 ஆக அதிகரித்துள்ளது.‌ மருத்துவ உதவிகளின் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில்கொண்டு 2021 ஏப்ரல்- மே மாதங்களில் ரேபரேலி மற்றும் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொலைதூர மாவட்டங்களான ஃபதேபூர், பாராபங்கி, கௌஷம்பி, பிரதாப்கர், சுல்தான்பூர், அம்பேத்கர் நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மஹாராஜ்கஞ்ச், குஷிநகர், டியோரியா, பல்லியா, மாவ், அசம்கர் ஆகியவற்றைச் சேர்ந்த நோயாளிகள் பயனடைகிறார்கள்.

ராய்பூர், ஜோத்பூர், பட்னா, ரிஷிகேஷ், புவனேஸ்வர், போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மியூகோர்மைகாஸிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கும் சிறந்த மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?

                                                                                                         ------



(Release ID: 1719880) Visitor Counter : 237