சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 மேலாண்மைக்கான 23வது அமைச்சர்கள் குழு கூட்டம்: டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை
Posted On:
28 JAN 2021 12:24PM by PIB Chennai
கொவிட்-19 மேலாண்மைக்கான 23வது அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.
மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:
கொவிட் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கடந்த ஓராண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி, முதல் கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 மேலாண்மைக்காக அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி கூட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி வகுத்த, ஒட்டு மொத்த அரசு மற்றும் சமூக அணுகுமுறை காரணமாக, இந்த கொவிட் தொற்றை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 12,000-க்கும் குறைவாகவே புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக குறைந்துள்ளது.
146 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவும், 18 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாகவும், 6 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களாகவும், 21 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. தீவிர கொவிட் பரிசோதனையால், இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 19.5 கோடி கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களில் 0.46 சதவீதம் பேர் மட்டுமே வென்டிலேட்டரில் உள்ளனர். 2.20 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 3.02 சதவீதத்தினர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 165 பேருக்கு, இங்கிலாந்தின் புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையிலும், இந்தியா இதர நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி விநியோகித்து உதவியுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது.
இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
தடுப்பூசிப் பணிகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர், ‘‘கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 112.4 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 20ம் தேதி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 115.6 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது வரை 69,000 திட்ட மேலாளர்கள், 2.5 லட்சம் தடுப்பூசிப் பணியாளர்கள், 4.4 லட்சம் இதர குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, கோ-வின் இணையதளத்தில் 93,76,030 சுகாதாரப் பணியாளர்கள், 53,94,098 முன்களப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692876
******
(Release ID: 1692876)
(Release ID: 1692921)
Visitor Counter : 289
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam