சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ், அனுமதிகள் போன்ற வாகன ஆவணங்களுக்கான காலக்கெடு, 2021ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு

Posted On: 27 DEC 2020 2:55PM by PIB Chennai

கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக, ஒட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்கள், அனுமதிகள் போன்றவற்றுக்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31ஆம் தேதி வரை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.  இது தொடர்பான உத்தரவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள், 1989 தொடர்பான ஆவணங்களை நீட்டிப்பது தொடர்பான உத்தரவுகளை இதற்கு முன் கடந்த மார்ச் 30, ஜூன் 9, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்தது. தகுதிச் சான்றிதழ், அனைத்து வகை அனுமதி, உரிமம், பதிவு அல்லது இது தொடர்பான எந்த ஆவணங்களும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது.

 

‘‘கோவிட்-19 பரவலைத் தடுப்பதைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய ஆவணங்கள் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என  அறிவுறுத்தப்படுகிறது. இதில் 2020, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அல்லது 2021 மார்ச் 31ஆம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து ஆவணங்களும் அடங்கும்’’ என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இது போன்ற ஆவணங்கள் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை செல்லத் தக்கவை எனக் கருதும் படி அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது மக்களுக்கு போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கும், தனி நபர் இடைவெளியைப் பராமரிப்பதற்கும் உதவும்’’ என அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அப்போதுதான்,மக்கள், போக்குவரத்துத் துறையினர் மற்றும் இதர அமைப்பினருக்கு இந்த சிக்கலான கோவிட்  தொற்று நேரத்தில் எந்தவிதமான தொந்தரவும், சிரமும் இருக்காது.

**********************



(Release ID: 1683992) Visitor Counter : 296