பிரதமர் அலுவலகம்

இந்திய வர்த்தக தொழில் சபை கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு பொது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 12 DEC 2020 2:12PM by PIB Chennai

வணக்கம்!

எப்ஐசிசிஐ தலைவர் திருமிகு சங்கீதா ரெட்டி, பொதுச் செயலாளர் திரு திலீப் செனாய், மற்றும் தொழில்துறை நண்பர்களே!

20-20 போட்டியில், பல விஷயங்கள் வேகமாக மாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் 2020-ஆம் ஆண்டு அனைத்தையும் தோற்கடித்து விட்டது. நாடும், உலகமும் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் கொரோனா காலம் பற்றி நினைக்கும்போதுஇந்த ஏற்ற, இறக்கங்களை நாம் ஒருவேளை நம்ப மாட்டோம். நிலைமை எவ்வளவு விரைவில் சீரழிந்ததோ, அதே வேகத்தில் சீரடைந்து வருகிறது. இந்த பெருந்தொற்று கடந்த பிப்ரவரி-மார்ச்சில் தொடங்கியபோது, தெரியாத எதிரிக்கு எதிராக நாம் செயல்பட்டோம். பல துறைகளில், பல பிரச்னைகள் ஏற்பட்டன. இது எவ்வளவு நாள் தொடரும், நிலைமை எப்படி மேம்படும் என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி. ஆனால், தற்போது, இந்த டிசம்பர் மாத நிலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளன. நெருக்கடி நேரத்தில் நாடு கற்ற பாடங்கள், எதிர்காலத்துக்கான நமது தீர்மானத்தை உறுதியாக்கியுள்ளன.

உலகளாவிய பெருந்தொற்றுடன் எப்போதும் ஒரு வரலாறு மற்றும் பாடம் இருக்கும்.  இந்தத தொற்று காலத்தில் மக்களின் உயிரைக் காக்க, இந்தியா அதிக முக்கியத்தும் அளித்து, ஏராளமானோரைக் காப்பாற்றியது.  கடந்த சில மாதங்களாக இந்தியா ஒட்டுமொத்தமாக செயல்பட்ட விதத்தைப் பார்த்து இந்த உலகம் ஆச்சர்யமடைகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா மீது கடந்த 6 ஆண்டுகளாக இருந்த நம்பிக்கை, கடந்த சில மாதங்களில் மேலும் வலுவடைந்தது. அந்நிய முதலீட்டார்கள் இந்தியாவில் சாதனை முதலீடுகளை செய்துள்ளனர், மற்றும் தொடர்ந்து செய்கின்றனர்.

இன்று, தற்சார்பு இந்தியா பிரசாரத்தை வெற்றியடையச் செய்ய, ஒவ்வொரு குடிமகனும் உறுதியுடன் உள்ளார். தனியார் துறையின் திறமையின் மீது, நாடு எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தியாவின் தனியார் துறை, உள்நாட்டு தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்யாமல், உலகளாவிய அடையாளத்தையும் ஏற்படுத்த முடிந்தது.

இந்தியாவில் தரமான பொருட்களை தயாரிக்கவும், உலகளவில் போட்டி போடவும், தற்சார்பு இந்தியா பிரசாரம் வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு துறையிலும், திறமையை ஊக்குவிக்கிறது. நமது சிறு நிறுவனங்களும், எதிர்காலத்தில் வலுவாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அதனால்தான், உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புத்திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது. இது தொழிற்சாலைகளுக்கான திட்டம். உலகளவில் சாம்பியனாகும் திறமை இந்திய தொழில்துறைக்கு உள்ளது.

 

நண்பர்களே,

வாழ்கையாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், நாம் அடிக்கடி ஒரு முரண்பாட்டைப் பார்க்கிறோம்.  நம்பிக்கையுள்ள நபர், அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை.  பாதுகாப்பற்ற உணர்வில் உள்ளவர், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க பயப்படுகிறார்.  இது அரசின் செயல்பாட்டிலும் நடக்கிறது.  மக்களின் நம்பிக்கை மற்றும் அமோக ஆதரவை பெற்ற அரசு, நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும்  இருக்கும். அனைவருக்குமான வளர்ச்சி என்பதை நோக்கி செயல்படுவதில் அரசு உறுதியாக உள்ளது.   மற்றவர்களுக்கான தடைகளை அகற்ற, உறுதியான அரசு எப்போதும் முயற்சிக்கிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் அதிகளவு பங்களிப்பை அளிக்க முயற்சிக்கிறது. உறுதியான தன்னம்பிக்கையுள்ள அரசு, அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தன்னிடம் வைத்திருக்க விரும்புவதில்லை. மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யவும் விடாது.

கடந்த 6 ஆண்டுகளில், 130 கோடி மக்களின் கனவை நனவாக்க, அரசு உறுதியாக உள்ளது என்பதை இந்தியா பார்த்துள்ளது. அனைத்துத் துறைகளில்  உள்ள மக்களையும், அரசு ஊக்குவிக்கிறது. 

ஒரு துறை வளர்ச்சியடையும் போது, அதன் நேரடி தாக்கம், மற்ற துறைகளின் மீதும் உள்ளது. இந்தத் துறைகளுக்கு இடையே தடைகள் ஏற்படுத்தப்பட்டால், என்னவாகும்? எந்த தொழிலும் தனது சொந்த பலத்தால் வளர முடியாது. இது போன்ற தடைகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்து. இது போன்ற தடைகளை அகற்றத்தான் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்களும், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான். வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், இது போன்ற தடைகள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தடைகள் தற்போது அகற்றப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குளிர்பதன கிடங்குகள் நவீனமாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் அதிகளவு பயன் கிடைக்கும். வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத்துக்கு பல துறைகளில் சுவர்கள் தேவையில்லை. ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும் பாலங்கள்தான் தேவை.

நமது சீர்திருத்தங்கள், எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஒன்று உள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான மக்களை, நிதி அமைப்புக்குள் கொண்டு வந்தது.  எல்லா தடைகளையும் அகற்றி, இந்தியாவில், ஆதார் எண் ஒருவருக்கு  எப்படி அரசியல்சாசன பாதுகாப்பை வழங்குகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.  வங்கி கணக்கு இல்லாதவர்களை வங்கிகளுடன் நாம் இணைத்தோம். ஏழை மக்களுக்கு செல்போன் மற்றும் இணைய சேவை மலிவாக கிடைக்கச் செய்தோம். இன்று உலகின் மிகப் பெரிய நேரடி பண பரிமாற்ற முறை நம் நாட்டில் உள்ளது. கொரோனா காலத்தில், வங்கிகள் மூடியிருந்த நிலையிலும், மக்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம், ஒரே க்ளிக்கில்  செலுத்த முடிந்தது. இந்தியாவின் இந்த நடைமுறையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்.

 

நன்றி!

**********************



(Release ID: 1680397) Visitor Counter : 112