பிரதமர் அலுவலகம்

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டக் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 07 DEC 2020 2:12PM by PIB Chennai

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை தோழர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச அமைச்சர்கள் சவுத்ரி உதய் பான்சிங், டாக்டர் ஜி.எஸ். தர்மேஷ் அவர்களே, எனது நாடாளுமன்ற தோழர்கள் பேராசிரியர் எஸ்.பி. சிங் பகேல், திரு ராஜ்குமார் சாஹர், திரு ஹரித்வார் துபே அவர்களே, எனது அருமை ஆக்ரா வாழ் சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். ஆக்ரா மெட்ரோ திட்டப்பணிகள் தொடக்க விழாவையொட்டி உங்களுக்கு வாழ்த்துகள்.! ஆக்ராவுக்கு எப்போதும் தொன்மையான அடையாளம் உண்டு. இப்போது, நவீனப் பரிமாணமும் அதில் சேர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டு வரலாற்றில் செழுமையடைந்த இந்நகரம், 21-ம் நூற்றாண்டிலும் அதற்கு இணையாக நடைபோட தயாராகி வருகிறது.

சகோதர, சகோதரிகளே, ஆக்ராவில் பல்வேறு பொலிவூட்டும் வசதிகளை உருவாக்கும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இப்போது, ரூ.8,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் தொடங்கப்படும் மெட்ரோ திட்டம் ஆக்ராவின் நவீன வசதிகளுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

நண்பர்களே, உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளாக மெட்ரோ கட்டமைப்புப் பணிகள் அதிக அளவிலும் மிகுந்த  வேகத்துடனும் நடைபெற்று வருகின்றன. இது அரசின் அடையாளத்தையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. 2014 வரை, நாட்டில் 215 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை இயக்கத்தில் இருந்தது. 2014-க்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளில், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமான தொலைவிற்கு மெட்ரோ திட்டப் பாதை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 1000 கி.மீ தூரத்திற்கு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்று, மெட்ரோ பணிகள் நாட்டின் 27 நகரங்களில் நிறைவடைந்துள்ளன அல்லது பணிகள் பல்வேறு கட்டத்தில் உள்ளன. உ.பி.யை மட்டும் பார்த்தோமானால், உ.பி.யில் மெட்ரோ திட்டத்தால் இணைக்கப்படும் ஏழாவது நகரமாக ஆக்ரா உள்ளது. மேலும் ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. நாட்டில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இன்று மெட்ரோ ரயில் பெட்டிகளும் மேக் இன் இந்தியாவின் கீழ், நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்தியாவில் சிக்னல் முறையை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, மெட்ரோ கட்டமைப்பில் தன்னிறைவு பெற்றதாக இந்தியா மாறி வருகிறது.

சகோதர, சகோதரிகளே, இன்றைய இந்தியாவின் கனவுகள் ஏராளமானவை. ஆனால், கனவு காண்பது மட்டும் போதாது. அவற்றை துணிச்சலுடன் நனவாக்க வேண்டும். துணிச்சலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் நீங்கள் முன்னேறிச் செல்லும் போது எந்த தடையும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. இன்று, இந்தியாவின் பொதுவான இளைஞர்களும், இந்தியாவின் சிறு நகரங்களும், அதே துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் காட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டில், நாட்டின் மெட்ரோ நகரங்களில் ஏற்பட்ட முன்னேற்றம், தற்போது ஆக்ரா போன்ற சிறு நகரங்களையும் சென்றடைந்துள்ளது. சிறு நகரங்கள் தன்னிறைவு அடையும் வகையில், ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள இத்தகைய நகரங்கள் அனைத்தும் தன்னிறைவுக்கு தேவையானவற்றைப் பெற்றுள்ளன. அவற்றின் நிலமும், விவசாயிகளும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளன. கால்நடை வளர்ப்பிலும் நாட்டின் முன்னோடியாகத் திகழ்கிறது. இங்கு பால் பண்ணை, உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு  தேவையான வளம் உள்ளது. கூடுதலாக, இந்தப் பிராந்தியம் சேவை மற்றும் உற்பத்தி துறைகளிலும் முன்னேறி வருகிறது.

நண்பர்களே, மேற்கு உ.பி.யின் ஆற்றல் நவீன வசதிகள் மற்றும் இணைப்புகளுடன் மேலும் வளர்ந்து வருகிறது. நாட்டின் அதிவேக ரயில் போக்குவரத்து பாதை மீரட்டுக்கும், தில்லிக்கும் இடையே கட்டப்பட்டு வருகிறது. தில்லி-மீரட் இடையிலான 14 வழி விரைவுப் பாதையும் விரைவில் இப்பகுதி மக்களுக்கு சேவை புரியும். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை  இணைக்கும் கங்கா விரைவுப் பாதைக்கு யோகி அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பிராந்திய தொடர்பை இணைக்கும் பல விமான நிலையங்கள் உ.பி.யில் தயாராகி வருகின்றன. இவற்றில் பெரும் பகுதி மேற்கு உ.பி.யில் உள்ளது.

ஜெவாரின் கிரேட்டர் நொய்டாவில் உருவாகி வரும், உலகத் தரம் வாய்ந்த, நவீன பசுமை விமான நிலையம், இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அடையாளத்தையே மாற்றி அமைக்கப் போகிறது.

நண்பர்களே, நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் எப்போதும் முக்கிய பிரச்சினை இருந்து வருகிறது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் போது, அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. அதன் விளைவாக, அந்தத் திட்டங்கள் ஆண்டுக்கணக்காக கிடப்பில் போடப்படுவது உண்டு. மேலும், பணிகளும் மந்த கதியில் நடக்கும். ஆனால், எங்கள் அரசு புதிய பாசனத் திட்டங்களைத் தொடங்கும் போது, தேவையான நிதிக்கான ஏற்பாடுகளையும் கவனத்தில் கொள்கிறது. நாட்டில் நவீன வசதிகள் மற்றும் சாலை இணைப்புகளுக்காக, இப்போது செலவிடப்படும் தொகையைப் போல இதுவரை எப்போதும் செலவிட்டதில்லை. தேசிய உள்கட்டமைப்பு குழாய் இணைப்பு திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிழிக்க நாங்கள் தயாராக உள்ளோம். பெருந்திட்டத்தின் அடிப்படையில் பன்னோக்கு இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் உலகம் முழுவதிலும் இருந்து முதலீடுகளை ஈர்க்கும். அந்நிய முதலீடுகளை எளிதில் ஈர்ப்பதற்குத்  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, சிறப்பான உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளால் நமது சுற்றுலா பெருமளவில் பயனடைந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கின்ற முக்கிய வழிகளை சுற்றுலா கொண்டுள்ளது என நான் எப்போதும் நம்புகிறேன். சுற்றுலா மூலம், குறைந்தபட்ச முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட முடியும். உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு முன்னேற்றப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தாஜ்மஹால் போன்ற பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு இடையே நவீன வசதிகளை உருவாக்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு, மேலும் சிறப்பாக ஈர்ப்பதற்குத் தேவையான, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இ-விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், விடுதி அறைகளுக்கான கட்டண வரியையும் அரசு கணிசமாக குறைத்துள்ளது. சுவதேஷ் தர்சன் மற்றும் பிரசாத் திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுற்றுலா குறியீட்டில் 34-வது இடத்தில் இந்தியா தற்போது உள்ளது. 2013-ல் 65-வது இடத்தில் இருந்த இந்தியா, அரசின் முயற்சிகளால் பெருமளவுக்கு முன்னேறியுள்ளது. மேலும் ஏராளமான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.

கொரோனா நிலைமை மேம்படும் போது, சுற்றுலாத் துறை விரைவில் மீண்டெழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நண்பர்களே, புதிய வசதிகளுக்கும் , நடைமுறைகளுக்கும் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமாகும். கடந்த நூற்றாண்டின் சட்டங்களைக் கொண்டு அடுத்த நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது.  கடந்த நூற்றாண்டில் மிகவும் பயன்பட்ட சட்டங்கள் அடுத்த நூற்றாண்டில் சுமையாக மாறிவிடும். எனவே, சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். முன்பை விட இப்போது மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் சிறப்பாக இருப்பது எப்படி? காரணம் மிகவும் எளிதானது. முன்பு சீர்திருத்தங்கள் பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. சில துறைகள் மற்றும் பிரிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டன. இன்று, ஒட்டு மொத்தமாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரங்கள் மேம்பாடு என்பதை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். வாழ்க்கையை எளிதாக நடத்திச் செல்ல தேவையான, அதிகபட்ச முதலீட்டுடன் கூடிய, நவீன வசதிகளைக் கொண்டதாக நகரங்கள் விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் அது மேற்கொள்ளப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே, மனை வணிகப் பிரிவில் உள்ள நிலையை நாம் அறிவோம். கட்டுமான நிறுவனங்களுக்கும், வீடு வாங்குவோருக்கும் இடையே நம்பிக்கை குறைபாடு இருந்து வந்தது. சில நேர்மையற்ற நபர்கள் தங்கள் செயல்பாடுகளால், நடுத்தர பிரிவினரை துன்புறுத்தி வந்ததால், ஒட்டுமொத்த துறையே புகழ் கெட்டு விட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ரெரா அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் நடுத்தரப் பிரிவினருக்கு துரிதமாக வீடுகள் கிடைத்துள்ளன. நகரங்களில் ஏராளமான வீடுகள் காலியாக இருப்பது மற்றுமொரு பெரிய பிரச்சினையாகும். அதே சமயம், வாடகைக்கு வீடுகள் கிடைக்காமல் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மாதிரி சட்டம் ஒன்று இயற்றப்பட்டு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

 நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற நடுத்தர பிரிவினர் வீடு வாங்குவதற்கு ரூ.28,000 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ், குடிநீர், கழிவு நீர் அகற்றல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே, மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் நாட்டில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய காலத்தை ஒப்பிட்டால் இந்தப் புதிய நம்பிக்கையை நீங்கள் உணரலாம். அன்னையர்கள், சகோதரிகள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள், வணிகர்கள் என அனைவரது நம்பிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுகிறது. இந்த நம்பிக்கை என்னை நெக்குருக வைக்கிறது. 2-3 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத், தெலங்கானா மக்கள் அரசின் முயற்சிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆதரவை அளித்துள்ளனர். உங்களது ஆதரவே எனது உத்வேகத்துக்கு ஊக்கமளிக்கிறது. இந்த உத்வேகத்துடன் முன்னேற்றப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மீண்டும் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தடுப்பூசிக்காக நாம் காத்திருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேசமயம், முன்தடுப்பு நடவடிக்கைகளில் எந்தவித மெத்தனமும் கூடாது. முகக் கவசமும், போதிய இடைவெளியும் மிகவும் முக்கியமானவையாகும். நீங்கள் இதைப் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி!!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

********


(Release ID: 1679945) Visitor Counter : 275