பிரதமர் அலுவலகம்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய நிறைவுரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 04 DEC 2020 2:30PM by PIB Chennai

நமது மூத்த தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த விவாதத்தின் போது தெரிவித்த ஆலோசனைகள், பரிமாறிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என நான் கருதுகிறேன். தடுப்பூசி தொடர்பாக இந்த விவாதத்தின் போது நீங்கள் காட்டிய நம்பிக்கை, கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டின் போராட்டத்தை வலுப்படுத்தும். இங்கு படக்காட்சிகள் மூலம் விரிவாக அளிக்கப்பட்ட விளக்கங்கள், நமது உறுதிப்பாடு, எடுத்த நடவடிக்கைகள், நமது இன்றைய நிலை ஆகியவற்றைத் தெளிவுபடுத்தியது.

நண்பர்களே, இந்த விஷயம் குறித்து அண்மையில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நான் விரிவாக விவாதித்தேன். தடுப்பூசி போடுவது பற்றி மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தன. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குழுவுடன் நான் சில தினங்களுக்கு முன்பு அர்த்தமுள்ள விரிவான ஆலோசனைகளை நடத்தினேன். விஞ்ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பையும் நான் பெற்றேன். இந்த விஷயத்தில் வெற்றி பெறுவோம் என்று இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களது நம்பிக்கையின் அளவு மிகப்பெரிது. இப்போதே, பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பற்றிய பெயர்கள், சந்தையில் உலாவி வருகின்றன. இன்னும், பாதுகாப்பான, விலை குறைவான தடுப்பூசியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் இந்தியாவை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியின் நிலையை, அகமதாபாத், புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களின் ஆய்வகங்களைப் பார்வையிட்ட பின்னர் தெரிந்து கொண்டேன். 

இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஐசிஎம்ஆர், உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உலக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். விரைவில் தடுப்பூசி தயாராகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. 8 தடுப்பூசி ஆராய்ச்சிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையும் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. கொரோனா தடுப்பூசிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிராது என நிபுணர்கள் கருதுகின்றனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என நம்பப்படுகிறது. நிபுணர்களின் அனுமதிக்குப் பின்னர், இந்தியாவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டத் தடுப்பூசி போடும் பணியில் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படி,  மத்திய அரசு செயல்படும். சுகாதாரப் பணியாளர்கள், கொரோனா  நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்து வரும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நண்பர்களே, தடுப்பூசி விநியோகத்திலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும். இதில், இந்தியாவுக்கு நிபுணத்துவம் உள்ளது. மற்ற நாடுகளை விட நாம் சிறப்பான நிலையில் உள்ளோம். உலகிலேயே, மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது. இது முழுமையாகப் பயன்படுத்தப்படும். தடுப்பூசி பற்றிய தகவல்களைத் தரும் Co-WiN என்னும் சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்காக சிறப்பு பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளும் பொறுப்பு தேசிய நிபுணர் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

நண்பர்களே, தடுப்பூசி விலை தொடர்பான கேள்வி இயல்பானதே. இது பற்றி மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேசி வருகிறது. பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி விலை பற்றிய முடிவு எடுக்கப்படும். இதில் மாநில அரசுகளின் முழுப் பங்களிப்பு இருக்கும். இந்தியா எடுத்து வரும் முடிவுகள், அறிவியல் முறைகளைப் பின்பற்றி எடுக்கப்படுவதால், இன்று நல்ல பலன்களை அளித்து வருகிறது. நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. வளர்ந்த நாடுகள், சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பு உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா இந்தப் போராட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களாகிய நமது கட்டுப்பாடும், தைரியமும், வலிமையும், ஈடு இணையற்றதாகும். நம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்துவதுடன், பிறநாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

நண்பர்களே, அச்சம் நிலவிய மார்ச், ஏப்ரல் மாதங்களைக் கடந்து, இன்று நம்பிக்கை நிறைந்த டிசம்பர் மாதத்தில் இருக்கும் மிக நீண்ட பயணத்தை நாம் கடந்துள்ளோம்.. தடுப்பூசி பெறும் நோக்கத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதேபோன்ற மக்கள் பங்களிப்பு எதிர்காலத்திலும் அவசியமாகும். தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, பல வதந்திகளும் பரப்பப்படும். இந்த வதந்திகள் மக்கள் நலனுக்கும், தேச நலனுக்கும் எதிரானவை. எனவே, இத்தகைய வதந்திகளில் இருந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. முகக்கவசம் அணிவது, இடைவெளியைப் பராமரிப்பது ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். எந்தவித மெத்தனமும், நாடு இதுவரை கொரோனா விஷயத்தில் அடைந்த சாதனைகளுக்கு ஊறு விளைவித்துவிடும். இன்றைய கூட்டத்தில் அனைவரும் பேசுவதற்கு முடியாவிட்டாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தம் கருத்துக்களை எழுத்து மூலம் அளிக்கலாம். உங்களது ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த வேண்டுகோளுடன், உங்கள் நேரத்தை இதற்காக ஒதுக்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி!!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***

 


(Release ID: 1678914) Visitor Counter : 263