பிரதமர் அலுவலகம்

17-வது ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 12 NOV 2020 10:34PM by PIB Chennai

ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவரும், வியட்நாம் பிரதமருமான நிகுயென் சுவோன் புக்-ன் அழைப்பை ஏற்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி, 17-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் இன்று கலந்து கொண்டார். ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த உச்சி மாநாடு மெய்நிகர் வடிவில் நடைபெற்றது.

உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையில் ஆசியான் மையப்புள்ளி என சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, இணக்கமான, முன்னேற்றம் மிக்க ஆசியான் என்பது இந்தியாவின் இந்தோ-பசிபிக் நோக்கின் மையமாகும் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பிராந்தியத்தின் அனைவரது பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அது பங்களித்துக் கொண்டிருக்கிறது என்றார். இந்தியாவின், இந்தோ-பசிபிக் முன்முயற்சிக்கும், ஆசியானின் இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்துக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். தடையற்ற, வெளிப்படையான, உள்ளடக்கிய, விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் (ஐபிஓ) பல்வேறு முயற்சிகளுக்கு ஆசியான் நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார்.

கோவிட்-19 பற்றி குறிப்பிட்ட பிரதமர், அதற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மற்றும் சர்வதேச சமுதாயத்துக்கு அளித்துள்ள விரிவான ஆதரவை விளக்கினார். தொற்றை எதிர்த்து போராடுவதற்காக ஆசியான் மேற்கொண்ட முயற்சிகளை அவர் வரவேற்றார். கோவிட்-19 ஆசியான் மீட்பு நிதிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.

ஆசியானுக்கும், இந்தியாவுக்கும் இடையே இயல்பு ரீதியாகவும், டிஜிடல் வடிவிலுமான இணைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். ஆசியான் இணைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு பில்லியன் டாலரை கடனாக இந்தியா வழங்கும் என்று அவர் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீடு விஷயத்தில், பல்வகைப்படுத்துதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்துதல் அவசியம் எனக் கூறினார்.

பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பை ஆசியான் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆசியான் மையத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவை அவர்கள் வரவேற்றனர். 2021-2025ம் ஆண்டுகளில் பின்பற்றப்படவுள்ள  ஆசியான்-இந்தியா புதிய செயல் திட்டத்தை  தலைவர்கள் வரவேற்றனர்.

தென் சீனக்கடல், பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான நலன், கவலைகள்  கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதத்தில் அலசி ஆராயப்பட்டன. சர்வதேச சட்டத்தை, குறிப்பாக  கடல் சட்டம் பற்றிய ஐ.நா மரபைப் பின்பற்றி நடப்பது உள்ளிட்ட விதிகள் அடிப்படையிலான பிராந்திய ஒழுங்கை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் குறிப்பிட்டன. தென் சீனக்கடல் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை பராமரித்து மேம்படுத்துவது, சுதந்திரமான கடல், வான்வழி போக்குவரத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து தலைவர்கள் உறுதி மேற்கொண்டனர்.

 (Release ID: 1672568) Visitor Counter : 240