பிரதமர் அலுவலகம்
உலக அளவிலான மெய்நிகர் முதலீட்டாளர் வட்டமேசை மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
05 NOV 2020 8:02PM by PIB Chennai
வணக்கம், திருவிழாக்கால வாழ்த்துகள்.
உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் உங்கள் ஈடுபாட்டை மேம்படுத்திக் கொள்வதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பரஸ்பரம் உள்ள கண்ணோட்டங்களை நாம் நல்ல முறையில் புரிந்து கொண்டால், உங்கள் திட்டங்களும், எங்கள் தொலைநோக்கு சிந்தனையும் நல்ல முறையில் ஒன்று சேரும் என்று நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்த ஆண்டில், உலக அளவிலான பெருந்தொற்று பாதிப்புக்கு எதிராக தைரியமாக இந்தியா நடவடிக்கைகள் எடுத்ததால், இந்தியாவின் தேசிய குணத்தை உலகம் கண்டுகொண்டது. இந்தியாவின் உண்மையான பலங்களையும் உலகம் அறிந்து கொண்டது. பொறுப்புணர்வு, கருணை என்ற உணர்வு, தேச ஒற்றுமை, புதுமை சிந்தனை படைப்பின் உத்வேகம் ஆகிய பண்புக்குப் பெயர் பெற்றது இந்தியா என்பதும் முன்னிறுத்தப்பட்டது. நோய்த் தொற்றை சமாளிக்கும் திறனை இந்தியா அபாரமாக வெளிப்படுத்தியது. வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவது அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மை என எதிலும் தன் சமாளிக்கும் திறனைக் காட்டியது. எங்களுடைய நடைமுறைகள், கொள்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவு ஆகியவற்றால், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் உருவானது. எங்களுடைய நிர்வாக பலத்தின் காரணமாக சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உணவு தானியங்கள், 420 மில்லியன் பேருக்கு பணம், சுமார் 80 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு ஆகியவை வழங்க முடிந்தது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும், முகக் கவச உறை அணியும் இந்த மக்கள்தான், வைரஸ் தாக்குதலுக்கு எதிராக வலுவாகப் போரிட்டு வருகிறார்கள். எங்களுடைய நீடித்து செயல்படும் கொள்கைகள் காரணமாகத்தான், உலகில் முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.
நண்பர்களே,
பழைய கொள்கைகளில் இருந்து விடுபட்ட புதிய இந்தியாவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்றைக்கு, இந்தியா மாறி வருகிறது, நன்மைக்காக அந்த மாற்றம் நடைபெறுகிறது. நிதிசார்ந்த பொறுப்பின்மையில் இருந்து, விவேகமான நிதிப் பயன்பாடு வரை, உயர் பணவீக்கத்தில் இருந்து குறைவான பணவீக்கம் வரை, கடன்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் விருப்பம் போல கடன் தருவதில் இருந்து தகுதியின் அடிப்படையில் கடன் வழங்குதல் வரை, பற்றாக்குறை கட்டமைப்புகள் என்பதில் இருந்து உபரியான கட்டமைப்பு வசதிகள் என்பது வரை, தவறாகக் கையாளப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி என்பதில் இருந்து முழுமையான சமச்சீரான வளர்ச்சி, இயல்புநிலை கட்டமைப்பு முதல் டிஜிட்டல் கட்டமைப்பு வரை என நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
நண்பர்களே,
இந்தியாவை தற்சார்பாக ஆக்க வேண்டும் என்ற தீராத ஆசை வெறும் தொலைநோக்கு மட்டுமல்ல, நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார உத்தியாக இருக்கிறது. எங்களுடைய தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் தொழில் திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட உத்தியாக இருக்கிறது. உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவது, தொழில்நுட்பத்தில் உள்ள பலத்தின் மூலம் புதுமை படைப்புகளுக்கான உலக அளவிலான மையமாக உருவாக்குவது, எங்களுடைய அபரிமிதமான மனிதவளங்கள் மற்றும் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி உலக மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்ட உத்திகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
நண்பர்களே,
இன்றைக்கு சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகத்திறன் மதிப்பு உள்ள துறைகள் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். இவற்றில் உயர் தகுதியில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. இந்த மூன்று அம்சங்களிலும் சம அளவிலான முக்கியத்துவம் அளித்து, உருவாக்கப்படும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை உங்களுக்கு இந்தியா அளிக்கிறது. ஒரே சந்தையில், பலவாறான சந்தைகளை நீங்கள் பெறும் வகையில் இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. பலவாறான செலவழிக்கும் திறன் மற்றும் பலவாறான விருப்பங்கள் கொண்ட மக்கள் தொகை இருக்கிறது. பலவாறான வானிலைகள், பலவாறான வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கிறது. திறந்த மனதுடன், வெளிப்படையான சந்தைகளுடன், ஜனநாயக முறையிலான, பங்கேற்பு கொண்ட, சட்டத்தைப் பின்பற்றும் நடைமுறையைக் கொண்டதாக இந்தியா உள்ளது.
நண்பர்களே,
நிதி விவகாரங்களில் சிறந்த அறிவு படைத்தவர்கள் சிலரின் மத்தியில் நான் உரையாற்றுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். புதுமை சிந்தனை படைப்பு மற்றும் வளர்ச்சியில் புதிய துறைகளை, நீடித்த தொழில் வாய்ப்புகளாக மாற்றக் கூடியவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அதே சமயத்தில், நம்பிக்கையுடன், சிறந்த முறையில், நீண்டகால நோக்கில் லாபம் கிடைப்பதற்குப் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற உங்களுடைய தேவை குறித்தும் அறிந்திருக்கிறேன்.
நண்பர்களே,
எங்களுடைய அணுகுமுறைகள், பிரச்சினைகளுக்கு நீண்டகால நோக்கில் தீர்வுகள் அளிப்பதாக இருக்கின்றன என்பதை வலியுறுத்திக் கூற நான் விரும்புகிறேன். இதுபோன்ற அணுகுமுறை உங்களுடைய தேவைகளை நல்ல முறையில் பூர்த்தி செய்வதாக இருக்கும். சில உதாரணங்கள் மூலம் நான் அதை விளக்குகிறேன்.
நண்பர்களே,
எங்களுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்க நாங்கள் பலவித முன்முயற்சிகள் எடுத்திருக்கிறோம். ஜி.எஸ்.டி. என்ற நடைமுறையின் மூலம், நாடுமுழுக்க ஒரே மாதிரியான வரி என்ற நடைமுறையை உருவாக்கி இருக்கிறோம். மிகவும் குறைந்தபட்ச கார்ப்பரேட் வரிகள் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். புதிய உற்பத்தித் தொழில்களுக்கு ஊக்கத்தொகை தருவதை அதிகரித்திருக்கிறோம். நேரில் செல்லாமலே வருமான வரி மதிப்பீடு செய்தல், முறையீடு செய்தல் வசதிகளை உருவாக்கி இருக்கிறோம். தொழிலாளர்களின் நலன் மற்றும் முதலாளிகள் தொழில் செய்ய உகந்த சூழ்நிலை உருவாக்குதல் என்ற சமன்நிலைப்பாடு கொண்ட புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாக்கி இருக்கிறோம். குறிப்பிட்ட துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை அளிக்கிறோம். முதலீட்டாளர்களை கைபிடித்து அழைத்துச் செல்வதைப் போன்ற, அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவன ஏற்பாடு செய்திருக்கிறோம்.
நண்பர்களே,
தேசிய கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1.5 டிரில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதற்கான, உயர் லட்சியம் கொண்ட ஒரு திட்டம் எங்களிடம் உள்ளது. பலவாறான போக்குவரத்து வசதி இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான மாஸ்டர் திட்டத்தை உருவாக்கும் பணி இறுதிநிலையில் இருக்கிறது. நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மெட்ரோ ரயில்கள், நீர்வழித் தடங்கள், விமான நிலையங்கள் என பெரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. புதிய - நடுத்தர வகுப்பு குடும்பங்களுக்கு, கட்டுபடியான விலையில் பல மில்லியன் வீடுகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குஜராத்தில் உள்ள கிப்ட் சிட்டி இதற்கு நல்லதொரு உதாரணம். இதுபோன்ற நகரங்களை உருவாக்குவதற்கு, குறித்த பணியை விரைந்து முடிக்கும் அடிப்படையிலான திட்டங்களை வைத்திருக்கிறோம்.
நண்பர்களே,
உற்பத்தி அடிப்படையையும், உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளையும் பலப்படுத்த வேண்டும் என்ற எங்களது அணுகுமுறையைப் போலவே, நிதித் துறையிலும் எங்களுடைய பணிகள் முழுமையானதாக இருக்கிறது. விரிவான வங்கித் துறை சீர்திருத்தங்கள் மூலம் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிதிச் சந்தைகளை பலப்படுத்துவது, சர்வதேச நிதி சேவைகள் மையத்துக்கு ஒன்றுபட்ட அதிகார அமைப்பு, மிகவும் தாராளமான நேரடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்பு, வெளிநாட்டு முதலீட்டுக்கு நன்மை தரக் கூடிய அளவில் வரி விதிப்பு ஆகியவற்றைச் செய்திருக்கிறோம். கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட், ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் போன்ற முதலீட்டுத் துறைகளுக்கு ஏற்ற பொருத்தமான கொள்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன. வங்கிகள் திவால் முறிவு விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன. மானியங்களை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் நடைமுறை, ரூப்பே கார்டுகள் மற்றும் BHIM-UPI போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான பட்டுவாடா முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நண்பர்களே,
புதுமை சிந்தனை மற்றும் டிஜிட்டல் துறை போன்றவற்றில் முயற்சிகள் எடுப்பதுதான் அரசுக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் மையமாக உள்ளது. உலகில் அதிக அளவில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் தனித்துவமான நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இன்னமும் நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். 2019 ஆம் ஆண்டில், தினமும் 2 - 3 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட அளவுக்கு வளர்ச்சி விகிதம் இருந்தது.
நண்பர்களே,
தனியார் நிறுவனங்கள் வளம் பெறுவதற்கு உதவும் வகையில் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. உத்திகளுடன் தனியார்மயமாக்கல் முயற்சி, சொத்துகளை பணமாக்கும் முயற்சி ஆகியவை முன் எப்போதும் பார்த்திராதவை. பொதுத் துறை நிறுவனங்களில் எங்களின் பங்கை 51 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவமான முடிவு எடுத்திருக்கிறோம். நிலக்கரி, விண்வெளி, அணுசக்தி, ரயில்வே, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் கொள்கை முடிவுகள் எடுத்திருக்கிறோம். பொதுத் துறைகளின் விகிதாச்சார அளவிலான பங்கேற்புக்கு, புதிய பொதுத் துறை நிறுவனங்கள் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது.
நண்பர்களே,
இன்றைக்கு இந்தியாவில் ஒவ்வொரு துறையும், உற்பத்தி, கட்டமைப்பு உருவாக்கம், தொழில்நுட்பம், வேளாண்மை, நிதி மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற சமூக துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் சமீபத்தில் நாங்கள் செய்த சீர்திருத்தம் காரணமாக, இந்தியாவில் விவசாயிகளுடன் பங்காளராகச் சேருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் நவீன செயல்படுத்தல் தீர்வுகளுடன், விரைவில் வேளாண் பொருள் எற்றுமதி மையமாக இந்தியா உருவாகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களை இந்தியாவில் உருவாக்குவதற்கு தேசிய கல்விக் கொள்கை அனுமதி அளிக்கிறது. நுண் நுட்பங்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய மிஷன் திட்டம் இருக்கிறது.
நண்பர்களே,
எங்களுடைய எதிர்காலத்தில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் நம்பிக்கை காட்டியிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 5 மாதங்களில் நேரடி வெளிநாட்டு முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வட்டமேசை மாநாட்டில் நீங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருப்பது, இந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
நண்பர்களே,
நம்பகத்தன்மையுடன் லாபம் ஈட்ட நீங்கள் விரும்பினால், அதற்கான இடம் இந்தியா தான். ஜனநாயகத்துடன் தேவை மிகுந்த சூழல் வேண்டுமானால், அதற்கான இடம் இந்தியா தான். நீடித்த செயல்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை நீங்கள் விரும்பினால், அதற்கான இடம் இந்தியா தான். பசுமையான அணுகுமுறையில் வளர்ச்சியைக் காண நீங்கள் விரும்பினால், அதற்கான இடம் இந்தியா தான்.
நண்பர்களே,
உலக அளவில் பொருளாதார மீட்சிக்கு உந்துதல் அளிக்கும் சக்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு இருக்கிறது. இந்தியாவின் எந்தவொரு சாதனையும், உலக வளர்ச்சி மற்றும் நலனில் பல மடங்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். பலமான மற்றும் துடிப்புமிக்க இந்தியா, உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த பங்களிப்பு செய்வதாக இருக்கும். உலக வளர்ச்சி மீட்சிக்கான என்ஜினாக இந்தியாவை உருவாக்கத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். ஊக்கம் தரும் வளர்ச்சிக்கான காலகட்டம் காத்திருக்கிறது. அதில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
மிக்க நன்றி!
*****
(Release ID: 1670560)
Visitor Counter : 253
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam