பிரதமர் அலுவலகம்

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 16 OCT 2020 2:42PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்கள் திரு நரேந்திர சிங் தோமர், திருமதி ஸ்மிருதி இரானி, திரு பருசோத்தம் ரூபலா, திரு கைலாஷ் சவுத்ரி, திருமதி தேபஶ்ரீ சவுத்ரி, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பிரதிநிதிகள், இதர சிறப்பான ஆளுமைகள், எனது சகோதர, சகோதரிகளே, உலக உணவு தினத்தையொட்டி, எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க இடையறாமல் பாடுபடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

நமக்கு அன்னம் அளிக்கும் நமது இந்திய விவசாய சகோதரர்கள், வேளாண் விஞ்ஞானிகள், நமது அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக வலிமையான தூணை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தங்கள் கடினமான உழைப்பால், தானியக் களஞ்சியங்களை நிரப்புவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்க அரசுக்கு உதவுகின்றனர். அவர்களது இடையறாத முயற்சியால், இந்தக் கொரோனா காலத்திலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிராக  இந்தியா வலிமையுடன் போராடி வருகிறது.

நண்பர்களே, உணவு மற்றும் வேளாண் அமைப்புக்கு (எப்ஏஓ) இந்த நாள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இன்று, இந்த அமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியா உள்பட உலகம் முழுவதும், வேளாண் உற்பத்தி, பட்டினி ஒழிப்பு, ஊட்டச்சத்து ஊட்டுதல் ஆகியவற்றில் எப்ஏஓ முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த அமைப்பின் சேவையைப் போற்றும் வகையில், 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் சார்பாக, 75 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உலக உணவுத் திட்டம் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளதும், ஒரு சாதனையாகும்.  இந்த அமைப்புடன், இந்தியாவுக்கு உள்ள தொடர்பும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக உணவுத் திட்டம், டாக்டர் பினய் ரஞ்சன் சென், எப்ஏஓ-வின் தலைமை இயக்குநராக இருந்த போது, உருவாக்கப்பட்டது என்பதை நாம்  அனைவரும் அறிவோம். பஞ்சம், பட்டினிக்கு எதிராக அவர் பணியாற்றி, கொள்கை வகுப்பவராக உயர்ந்தார்.  அவரது வழிகாட்டுதல்கள் இன்றும் உலகுக்கு பொருந்துவதாக உள்ளன. அவர் விதைத்த விதை இன்று நோபல் பரிசு பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளில், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை எப்ஏஓ உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது. மிக இளம் வயதில் கர்ப்பமடைதல், கல்வி இல்லாமை, தகவல்களைத் தெரிந்து கொள்ளாமை, போதிய குடிநீர் கிடைக்காத பற்றாக்குறை, சுகாதாரத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான நமது போராட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டு, நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தப் பிரச்சினைக்கு மூல காரணத்தைக் கண்டுபிடிப்பதில் எனக்கு அனுபவம் ஏற்பட்டது. இதில் பலன் ஏற்படாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிந்ததன் பலனாக, 2014-ம் ஆண்டில் நாட்டுக்கு சேவை புரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் நான் புதிய முயற்சிகளை ஆரம்பித்தேன்.

முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு, பல பரிமாண உத்தியை மேற்கொண்டோம். ஒரு புறம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன் காரணமாக வயிற்றுப் போக்கு  போன்ற நோய்கள் தடுக்கப்பட்டன. இந்திர தனுசு திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது அதிகரிக்கப்பட்டது. பல தொற்று நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தாய், சேய் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இன்று ஒரு ரூபாயில் நமது ஏழை சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து முயற்சிகளின் பயனாக, பெண் குழந்தைகள் பதிவு விகிதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு திருமணத்துக்கு சரியான வயதை நிர்ணயிக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான குழு ஏன் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை என்று கேட்டு எனக்கு நாடு முழுவதிலும் இருந்து பெண் மக்களிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. இந்த அறிக்கையை விரைந்து பெறுவதற்கு அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

நண்பர்களே, ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க மற்றொரு முக்கியப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புரதம், இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்கள் செறிவூட்டப்பட்ட பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  கேழ்வரகு, தினை  போன்ற சிறுதானியங்களை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023-ம் ஆண்டை  சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனைக்கு ஆதரவளித்துள்ள எப்ஏஓ அமைப்புக்கு நான் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க  நாம் கேட்டுக் கொண்ட போது இருந்ததைப் போன்ற உணர்வு,  2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும், சிறு தினை எனப்படும் சிறுதானியங்களை உற்பத்தி செய்யலாம். இது ஊட்டச்சத்து அளிப்பதுடன், சிறு விவசாயிகளுக்கும் வருமானத்தைப்  பெருக்கும்.

நண்பர்களே, இந்தியாவில், போஷன் அபியான் திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், மற்றொரு முக்கிய நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது. இன்று  நெல், கோதுமை போன்ற பயிர்களின் 17 புதிய விதை ரகங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்யப்பட்டுள்ள. இதன் மூலம், ஊட்டச்சத்து மிக்க உணவு தானியங்கள் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த விதைகளை உருவாக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக, அனைத்து வேளாண் பல்கலைக் கழகங்கள், வேளாண் விஞ்ஞானிகளுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் பயிர்களில் இருந்து இந்த வீரிய விதைகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே, கொரோனாவால் கடந்த சில மாதங்களாக, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பல விவாதங்கள் நடந்து வந்தன. நிபுணர்கள் இதுபற்றி தங்கள் கவலைகளை வெளியிட்டனர். கடந்த 7-8 மாதமாக, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள உணவு தானியங்களை 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக அரசு வழங்கியுள்ளது. இது இன்றைய இந்தியாவின் ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும். ஐரோப்பா, அமெரிக்காவின் முழுமையான மக்கள் தொகை அளவுக்கு இந்திய மக்களுக்கு இன்று உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2014-க்கு முன்பு உணவு பாதுகாப்பு சட்டம் 11 மாநிலங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அது நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய விவசாயிகள் உணவு உற்பத்தியில் கடந்த ஆண்டின் சாதனையை முறியடித்திருப்பது உங்களுக்கு தெரியுமா? கோதுமை, நெல், பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதில் அரசு முந்தைய சாதனைகளை முறியடித்திருப்பது உங்களுக்கு தெரியுமா? உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் நாட்டில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்களே, உலக உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில், 3 பெரிய வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் வேளாண் சந்தைகளை உருவாக்க கடந்த ஆறு ஆண்டுகளில், 2500 கோடிக்கும் மேற்பட்ட ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வடிவில், விவசாயிகள் இடுபொருள் செலவைப் போல 1.5 மடங்கு வருமானம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்எஸ்பியும், அரசு கொள்முதலும் நாட்டின் உணவு பாதுகாப்பில் முக்கிய அம்சங்களாகும். மண்டிகளை அடைய வழி இல்லாததால், சிறு விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்று, பல வழிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளின் வீடு தேடி சந்தை வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் முறை முடிவுக்கு வந்துள்ளதால், விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள்.

நண்பர்களே, சிறு விவசாயிகளுக்கு வலு சேர்க்க விவசாயி உற்பத்தி அமைப்புகள் எப்பிஓ-க்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஆயிரம் எப்பிஓ-க்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்க்கரை மற்றும் பால் துறைகளில் கூட்டுறவு இயக்கமும், கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் சுய உதவிக்குழுக்களும் ஏற்படுத்திய மாற்றத்தைப் போல இந்த எப்பிஓ-க்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றப்போகின்றன.

இந்தியாவில் உணவு தானியங்கள் வீணாவது ஒரு பெரிய பிரச்சினையாகும். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் இந்த நிலையை மாற்றும். எப்பிஓ அமைப்புகள் கிராமங்களில் மதிப்பு கூட்டு விநியோக முறைகளை உருவாக்கும். இதற்காக அரசு அண்மையில் ரூ.1 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதியத்தை உருவாக்கியுள்ளது.

மூன்றாவது வேளாண் சட்டம், விலை ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் நிச்சயமற்ற நிலையிலிருந்து விவசாயிகளுக்கு நிம்மதியை அளிக்கும். அத்துடன் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அது ஊக்குவிக்கும். விவசாயிகள் எந்த தனியார் நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தி விதைப்புக்கு முன்பாகவே உற்பத்தி விலையை நிர்ணயித்துக் கொள்ள முடியும். விதைகள், உரம், எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுவனங்கள் வழங்கும். எக்காரணத்தையாவது  முன்னிட்டு, ஒப்பந்தத்தில் இருந்து விவசாயி விரும்பினால், அதற்காக எந்தவித அபராதத்தையும் அவர் செலுத்த வேண்டியதில்லை என்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். அதேசமயம், நிறுவனம் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், அது விவசாயிக்கு அபராதம் செலுத்த வேண்டும். விவசாயியின் நிலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, அவர்களது வருமானம் அதிகரித்தால், அதற்கு இணையாக, ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான பிரச்சாரம்  மேம்படும். இந்தியா மற்றும் எப்ஏஓ கூட்டுறவு நிச்சயம் இந்த பிரச்சாரத்துக்கு உத்வேகம் அளிக்கும்.

நான் எப்ஏஓ அமைப்பின் 75 ஆண்டு சேவைக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிலும், உலகம் முழுவதிலும் உள்ள பரம ஏழைகளின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் அகன்று, முன்னேற்றம் ஏற்பட நீங்கள் பாடுபடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். உலக சமுதாயத்துடன் இணைந்து பாடுபட நாம் உறுதி ஏற்போம். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

*******



(Release ID: 1665835) Visitor Counter : 609