பிரதமர் அலுவலகம்

`தே வெச்வா கரனி' என்ற தலைப்பில் டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர்

பிரவர ஊரக கல்வி சங்கத்தின் பெயர் `லோக்நேட்டே டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பிரவர ஊரக கல்விச் சங்கம்' என மாற்றம்
டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் முயற்சிகளும், பங்களிப்புகளும்அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் தரும்: பிரதமர்

Posted On: 13 OCT 2020 2:44PM by PIB Chennai

`தே வெச்வா கரனி' என்ற தலைப்பில் டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் சுயசரிதை புத்தகத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். பிரவர ஊரக கல்வி சங்கத்தின் பெயரை `லோக்நேட்டே டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பிரவர ஊரக கல்விச் சங்கம்' என பிரதமர் மாற்றினார்.

நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், விக்கே பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றை மகாராஷ்டிராவின் அனைத்துப் பகுதிகளிலும் காண முடியும் என்று கூறினார். டாக்டர் வித்தல்ராவ் விக்கே பாட்டீல் அடியொற்றி செயல்பட்ட பாலாசாகிப் விக்கே பாட்டீல், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்று கூறினார். கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகளின் வாழ்க்கையின் சுமைகளைக் குறைத்தது, அவர்களின் துன்பங்களைக் குறைத்தது ஆகியவற்றில்தான் விக்கே பாட்டீல் வாழ்க்கை முழுக்க கவனம் செலுத்தினார் என்று பிரதமர் தெரிவித்தார்.

சமூகத்தின் மேன்மைக்காக எப்போதும் உழைத்தவர் விக்கே பாட்டீல் என்று பிரதமர் குறிப்பிட்டார். சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், ஏழைகள் மற்றும் கிராமங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எப்போதும் அவர் வலியுறுத்தி வந்தார் என்றும் பிரதமர் கூறினார்பாலாசாகிப் விக்கே பாட்டீலின் இந்த அணுகுமுறைதான் மற்றவர்களிடம் இருந்து அவரை தனித்துவமாக்கிக் காட்டியது என்றார் அவர். பாலாசாகிப் விக்கே பாட்டீலின் சுயசரிதை நம் அனைவருக்கும் முக்கியமானது, கிராமங்கள், ஏழைகளின் மேம்பாட்டுக்கும், அவர்களுடைய கல்விக்கும், மகாராஷ்டிராவில் கூட்டுறவு அமைப்புகளின் வெற்றிக்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள், அளித்த பங்களிப்புகள் ஆகியவை வரக்கூடிய தலைமுறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும் என்று திரு. மோடி கூறினார்.

ஏழைகள், விவசாயிகளின் துன்பங்களை டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் புரிந்து கொண்டிருந்தார். அதனால் விவசாயிகளை திரட்டி, கூட்டுறவு அமைப்புகள் மூலம் அவர்களை ஒன்று சேர்த்தார் என்று பிரதமர் தெரிவித்தார். அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாட்டீல், மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல பகுதிகளில் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

          கிராமப்புற கல்வி குறித்து நாட்டில் அதிகம் பேசப்படாதிருந்த காலத்தில், பிரவர ஊரகக் கல்வி சங்கம் மூலம் கிராமங்களின் இளைஞர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவதற்கு டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பணியாற்றினார். கிராமப்புற இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்து, தொழில் திறன் பயிற்சி அளிக்க இந்தச் சங்கம் மூலம் பாட்டீல் அரும்பணி ஆற்றினார் என்று பிரதமர் கூறினார்.

          கிராமங்களில் விவசாயம் குறித்த கல்வியின் முக்கியத்துவத்தை விக்கே  பாட்டீல் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கு முன்னோடி விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் நிலைக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுவதாக அவர் கூறினார்.

          சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உணவளிக்க போதிய விளைச்சல் இல்லாத நிலையில், பயிர் சாகுபடியை எப்படி அதிகரிக்கலாம் என்ற யோசனைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுத்தது. ஆனால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் கவனம் இருந்ததால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இப்போது முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அதற்காக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, வேம்பு தடவிய யூரியா விநியோகம், நல்ல பயிர்க் காப்பீட்டு வசதிகள் போன்ற திட்டங்களை பிரதமர் நினைவுபடுத்தினார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜ்னா போன்ற திட்டங்கள் காரணமாக, விவசாயிகள், சிறு செலவுகளுக்காக இப்போது யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் போனது என்றும் பிரதமர் கூறினார். சொல்லப்போனால், குளிர்பதன வசதி அளித்தல், சங்கிலித் தொடர்கள், மெகா உணவுப் பூங்காக்கள் மற்றும் வேளாண் - பதப்படுத்தல் கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்த முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

          இயற்கை சூழலுக்கு ஏற்ற நிலையில் நடைபெறும் பாரம்பரிய விவசாயம் குறித்த அறிவைப் பாதுகாக்க வேண்டும் என்று பாலாசாகிப் விக்கே பாட்டீல் வலியுறுத்தியதை அவர் குறிப்பிட்டார்பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதுடன், வேளாண்மையில் புதிய மற்றும் பழைய நடைமுறைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். கரும்பு சாகுபடியில் பழைய மற்றும் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கரும்பில் இருந்து சர்க்கரை எடுப்பதுடன், எத்தனால் தயாரிப்பிலும் கரும்பாலைகள்  ஈடுபடுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

          மகாராஷ்டிராவின் கிராமங்களில் குடிநீர், பாசன நீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எப்போதும் டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் அதிக அக்கறை காட்டினார் என்று பிரதமர் கூறினார். பிரதமரின் கிரிஷி சின்சயி யோஜ்னா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் 26 திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்கள் இப்போது முடிக்கப் பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார். இவற்றில் 9 திட்டங்களின் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இவற்றின் மூலம் சுமார் 5 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

          அதேபோல 2018 ஜூலை மாதம் மகாராஷ்டிராவில் மேலும் 90 பெரிய மற்றும் சிறிய பாசனத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் அடுத்த 2 - 3 ஆண்டுகளில் நிறைவடையும். அவற்றின் மூலம் 4 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். அடல் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டம், மகாராஷ்டிராவில் நிலத்தடி நீர்வளம் குறைவாக உள்ள 13 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

          ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று காலத்தில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

          முத்ரா திட்டத்தின் மூலம் கிராமங்களில் சுயவேலை வாய்ப்பு பெருகியுள்ளது. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் வங்கிகளில் எளிதாகக் கடன் வாங்க முடியும். முன்பு கிசான் கடன் அட்டை மறுக்கப்பட்ட இரண்டரை கோடி பேருக்கு இப்போது இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

          கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு தன்னம்பிக்கை பெருகச் செய்தால், தற்சார்பு என்ற நமது இலக்கை நோக்கிய முயற்சிகள் பலப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். கிராமங்களில் இதுபோன்ற தன்னம்பிக்கையை உருவாக்க பாலாசாகிப் விக்கே பாட்டீல் விரும்பினார் என்றார் பிரதமர்.

*******


(Release ID: 1664020) Visitor Counter : 248