பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
Posted On:
21 SEP 2020 7:05PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கன அமைச்சரவைக் குழு, 2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான அனைத்து கட்டாய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைச் சார்ந்து இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் அதிகரிப்பு உள்ளது.
ஊட்டச்சத்துத் தேவைகள், மாறிவரும் உணவுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியில் தற்சார்பை அடையவும், இந்தப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அரசு ஓரளவுக்கு அதிகமாகவே நிர்ணயித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக அளவிலான ஏற்றம் பயறுக்கு (ஒரு குவிண்டாலுக்கு ரூ.300) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பருப்பு, ராப்சீட் மற்றும் கடுகு ஆகியவற்றுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.225-ம், குங்குமப் பூவுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ112-ம் குறைந்த பட்ச ஆதர விலையில் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லிக்கும், கோதுமைக்கும் முறையே ஒரு குவிண்டாலுக்கு ரூ 75-ம், ரூ 50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்ப் பன்முகத் தன்மையை ஊக்கப்படுத்துவதை இந்த வேறுபட்ட விலைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள்
பயிர்கள்
|
ரபி சந்தைப் பருவம் 2020-21-க்கான
குறைந்த பட்ச ஆதரவு விலை
(ரூ / குவிண்டால்)
|
ரபி சந்தைப் பருவம் 2021-22-க்கான
குறைந்தபட்ச ஆதரவு விலை
(ரூ / குவிண்டால்)
|
உற்பத்திச் செலவு*
(ரூ / குவிண்டால்)
|
குறைந்தபட்ச ஆதரவு விலையில் உயர்வு
(ரூ / குவிண்டால்)
|
செலவை விட அதிகமாகக் கிடைக்கும் வருமானம் (சதவீதத்தில்)
|
கோதுமை
|
1925
|
1975
|
960
|
50
|
106
|
பார்லி
|
1525
|
1600
|
971
|
75
|
65
|
பருப்பு
|
4875
|
5100
|
2866
|
225
|
78
|
பருப்பு (மைசூர்)
|
4800
|
5100
|
2864
|
300
|
78
|
ராப்சீட் மற்றும் கடுகு
|
4425
|
4650
|
2415
|
225
|
93
|
குங்குமப்பூ
|
5215
|
5327
|
3551
|
112
|
50
|
* பணியமர்த்தப்பட்ட வேலையாட்கள், காளை/இயந்திரக்கூலி, குத்தகைச் செலவு, விதைகள், உரங்கள், நீர் பாய்ச்சுதல், தளவாடங்கள் மற்றும் வேளாண் கட்டிடங்களின் தேய்மானம், பணி மூலதனம் மீதான வட்டி, பம்ப் செட்டுகளின் செயல்பாட்டுக்கான டீசல்/மின்சாரம், இதர செலவுகள் மற்றும் குடும்பத் தொழிலாளர்களின் கணக்கிடப்பட்ட மதிப்பு உள்பட செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்து.
2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் உயர்வு, மத்திய பட்ஜெட் 2018-19-இல் அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய உற்பத்திச் செலவின் கணக்கிடப்பட்ட சராசரியை விட குறைந்தபட்சம் 1.5 தடவை அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளது. விவசாயிகளுக்கு தங்களது உற்பத்திச் செலவை விட கோதுமைக்கு (106%) அதிகபட்ச அளவிலும், அதைத் தொடர்ந்து ராப்சீட் மற்றும் கடுகுக்கும் (93%), பருப்பு மற்றும் பயறுக்கும் (78%) வருமானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்லியைப் பொறுத்தவரை உற்பத்திச் செலவை விட 65% அதிகம் கிடைக்கும் என்றும், குங்குமப் பூவுக்கு இது 50 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் ஆகியவற்றின் மூலம் அரசால் ஆதரவு வழங்கப்படுகிறது. தானியங்களைப் பொறுத்தவரை, இந்திய உணவுக்கழகம் மற்றும் இதற்கென உள்ள மாநில முகமைகள் விலை ஆதரவை விவசாயிகளுக்குத் தொடர்ந்து வழங்கும். தானியங்களின் இடையகச் சேமிப்பை அரசு உருவாக்கியுள்ள நிலையில், விலை நிலைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பருப்புகளின் உள்நாட்டுக் கொள்முதலும் நடக்கிறது.
விலை ஆதரவுத் திட்டம், விலை குறைபாடு கட்டணத் திட்டம் மற்றும் சோதனைத் திட்டமான தனியார் கொள்முதல் மற்றும் சேமிப்பாளர் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'பிரதமரின் அன்னதாதா ஆய்சன்ரக்ஷன் அபியான்' (பிஎம்-ஆஷா) என்னும் முதன்மைத் திட்டம் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கொள்முதலுக்கு உதவும்.
கோவிட்-19 சர்வதேசப் பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த நாடு தழுவிய பொதுமுடக்கத்துக்கு இடையிலும், சரியான நேரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் ரபி சந்தைப் பருவம் 2020-21-இல் இது வரை இல்லாத அளவுக்கு சாதனை அளவிலான 39 மில்லியன் டன்கள் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. ரபி சந்தைப் பருவம் 20219-20-ஐ விட 22 சதவீதம் அதிகமான அளவில் சுமார் 43 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 2019-20-இல் 390 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, 2014-15-இல் 280 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டது. 2019-20-இல் 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, 2014-15-இல் 3 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. 2019-20-இல் 18 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, 2014-15-இல் 12 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்பட்டன.
சுகாதாரப் பெருந்தொற்றின் தற்போதைய காலகட்டத்தில், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைய அனைத்து உறுதியான நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்படுகின்றன. அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பின்வருமாறு:
i. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளதோடு, அதிக அளவிலான விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும் வகையில் கொள்முதல் முறை வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
ii. கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை, கோதுமைக்கு 1.5 மடங்கும், பருப்புகள்-எண்ணெய் வித்துகளுக்கு 3 மடங்கும் கோவிட் பெருந்தொற்றின் போது முறையே அதிகரிக்கப்பட்டன.
iii. ரூ 75,000 கோடி செலவில் 390 லட்சம் டன்கள் கோதுமை பெருந்தொற்றின் போது கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட இது 15 சதவீதம் அதிகமாகும்.
iv. பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா என்னும் திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வழங்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ 93,000 கோடி ஆகும்.
v. பிரதமர் கிசான் திட்டத்தின் கிழ் கிட்டத்தட்ட 9 கோடி விவசாயிகள் கோவிட் பெருந்தொற்றின் போது சுமார் ரூ 38,000 கோடி பெற்றனர்.
vi. கடந்த 6 மாதங்களில் 1.25 கோடி புதிய விவசாயக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
vii. கோடைக் காலத்தில் 57 லட்சம் ஹெக்டேர்களில் பயிரிடப்பட்டது. கடந்த வருடத்தை விட இது 16 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும். கரீப் பருவப் பயிரிடுதலும் கடந்த வருடத்தை விட 5 சதவீதம் அதிகமாகும்.
viii. பெருந்தொற்றின் போது மின்-தேசிய வேளாண் சந்தைகளின் எண்ணிக்கை 585-இல் இருந்து 1000 ஆக அதிகரிப்பட்டன. மின்-தேசிய வேளாண் சந்தைகளின் தளம் ரூ 35000 கோடி வர்த்தகத்தைக் கடந்த வருடம் கண்டது.
ix. 10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை ஐந்து வருடங்களில் உருவாக்குவதற்கு ரூ 6850 கோடி செலவிடப்படும்.
x. பசல் பீமா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 4 வருடங்களில், ரூ 77,000 கோடியை விவசாயிகள் பெற்றனர். அவர்கள் செலுத்திய பிரிமியம் தொகை ரூ 17,500 கோடி ஆகும்.
xi. பசல் பீமா காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
xii. விவசாயிகள் ரயில் தொடங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய வேளாண் பொருள் சந்தைப்படுத்துதல் குழுக்களின் (APMC) மண்டி முறைக்கு வெளியிலும் தங்கள் விளைபொருள்களை விற்க விவசாயிகளுக்கு மாற்று வழிகளை எற்படுத்தித் தரவும், வேளாண் தொழிலில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் விளைபொருள்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகிய இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திறன்மிகு வேளாண்-உணவு விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைக்கவும், மதிப்புக் கூட்டல், அறிவியல் பூர்வமான சேமிப்பு, கிடங்குகள் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் துறை முதலீடுகளை அதிகமாக ஈர்க்கவும் அத்தியாவசியப் பொருள்கள் (திருத்தம்) சட்டம், 2020 நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்தின் கிழ், வருடத்துக்கு 3 சதவீத வட்டிக் கழிவுடன் ரூ 1 லட்சம் கோடி கடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும். மேலும், ரூ 2 கோடி வரையிலான கடனுக்கு, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் கீழ் கடன் உத்தரவாதப் பாதுகாப்பு வழங்கப்படும். விவசாயிகள், தொடக்க வேளாண் கடன் நிறுவனங்கள், விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண்-தொழில் முனைவோர் உள்ளிட்ட பலருக்கு சமூக வேளாண் சொத்துகளைக் கட்டமைக்கவும், அறுவடைக்குப் பிந்தைய வேளாண் உள்கட்டமைப்புக்கும் இந்தத் திட்டம் உதவும்.
***
(Release ID: 1657612)
Visitor Counter : 415
Read this release in:
Marathi
,
Odia
,
Malayalam
,
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu