பாதுகாப்பு அமைச்சகம்

‘ஏரோ இந்தியா 21’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ; ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியில் இடம் பிடிப்பதற்கான முன்பதிவு தொடக்கம்

Posted On: 11 SEP 2020 1:21PM by PIB Chennai

13வது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி, கர்நாடகா மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர்  திரு.ராஜ்நாத் சிங், புது தில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்த கண்காட்சியில், இடம் பிடிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சிக்கான Aero India 2021 இணையதளம்,  கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும்,  பார்வையாளர்களுக்கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை  ஆன்லைன் மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்ளநாட்டு தயாரிப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களின் தேவைக்கேற்ப இடங்களை  முன்பதிவு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. இதற்கான கட்டணத்தை ஏரோ இந்தியா இணையளத்தில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். வரும் அக்டோபர் 31ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்தால், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கட்டண தள்ளுபடி சலுகை வழங்கப்படும். கண்காட்சியை பார்வையிட விரும்பம் தொழிலதிபர்கள் மற்றும் பார்வையாளர்களும் இந்த இணையளத்தில் கண்காட்சிக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653267



(Release ID: 1653336) Visitor Counter : 110