நிதி அமைச்சகம்

74வது சுதந்திர தின உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சுயச்சார்பு மிக்க இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்


தேசியக் கட்டமைப்பிற்கான குழாய் பதிக்கும் திட்டம் கொரோனாவின் தாக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர்

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன் “உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்” என்பதும் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்றார் பிரதமர்

Posted On: 15 AUG 2020 3:36PM by PIB Chennai

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் இன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் கொரோனா பெருந்தொற்றினை சமாளிப்பது, சுயச்சார்பு மிக்க இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், நடுத்தர வர்க்க மக்களின் மீது கவனம் செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாற்றினார்.

சுயச்சார்பு மிக்க இந்தியாவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த சிக்கலான நேரத்தில், சக இந்தியர்களுக்கான முழு உதவிக்கும் உறுதி கூறினார்.  “கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு மத்தியில் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சுயச்சார்புமிக்கவர்களாக உருவெடுக்க முடிவு செய்துள்ளனர். சுயச்சார்புமிக்கவர்களாக மாறுவது என்பது கட்டாயமானதாகும். இந்தக் கனவை இந்தியா நனவாக்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளேன். நமது சக இந்தியர்களின் தனித்திறமைகள்,  நம்பிக்கை உணர்வு, திறமை ஆகியவை குறித்தும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒன்றைச் செய்வதற்கு நாம் முடிவெடுத்து விட்டோமெனில், அந்த இலக்கை அடையும் வரையில் நமக்கு ஓய்வு என்பதே இல்லைஎன்றும் அவர் கூறினார்

தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையில் கட்டமைப்புத்துறைக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். தேசியக் கட்டமைப்பிற்கான குழாய் பதிக்கும் திட்டத்தின் உதவியுடன் ஒட்டுமொத்தக் கட்டமைப்பினை விரைந்து மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கென தேசியக் கட்டமைப்புக் குழாய் பதிப்புத் திட்டத்தில் ரூ. 110 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். இதற்கென பல்வேறு துறைகளிலும் 7,000க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து நாட்டை வெளிக்கொண்டு வருவதில் இந்த தேசியக் கட்டமைப்புக்கான குழாய் பதிப்புத்திட்டம் மிக முக்கியமான பங்கினை வகிக்கும். இந்தியாவின் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகளை புரட்சிகரமானதாக உருமாற்றும் ஒரு திட்டமாக இந்த தேசிய கட்டமைப்புக்கான குழாய் பதிப்புத் திட்டம் அமையும். இதன் மூலம் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்பதோடு, நமது விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவர்கள் பயனடைவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்தோடு கூடவே உலகிற்காகவும் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்தையும் நாம் இப்போது எழுப்ப வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை உலகம் முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் விளைவாக, நேரடி அந்நிய முதலீடு அனைத்துவிதமான சாதனைகளையும் முறியடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட இந்தியாவிற்குள் வந்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் ஏழைகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள ஜன் தன் கணக்குகளில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள்? விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைக் குழுக்கள் குறித்த சட்டத்தில் இது போன்ற மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்று யார் தான் நினைத்திருப்பார்கள்? ஒரு நாடு, ஒரே வரி, நொடித்துப் போதல், திவால் ஆதல் ஆகியவற்றுக்கான விதிமுறைகள், வங்கிகள் இணைப்பு ஆகிய இவை அனைத்துமே இன்று நாட்டின் நடைமுறையாக மாறிவிட்டன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டுள்ளன; 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் அட்டைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலவச உணவுப்  பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன; சுமார் 90 ஆயிரம் கோடி வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளன; கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை தரும் வகையில் ஏழைகள் மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

உங்கள் வீட்டுக் கடனுக்கான தவணையைச் செலுத்தும் போது கடனைச் செலுத்தும் காலத்தின் போதே ரூ.6 லட்சம் வரையில் தள்ளுபடி கிடைப்பதும் இதுவே முதன் முறையாகும். முடிக்க முடியாமல் பாதியிலேயே நின்று போயிருந்த ஆயிரக்கணக்கான வீடு கட்டும் திட்டங்களை முடிப்பதற்கென ரூ. 25 ஆயிரம் கோடி அளவிலான ஒரு நிதியும் உருவாக்கப்பட்டது என்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் 40 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அவற்றில் சுமார் 22 கோடி கணக்குகள் பெண்களுக்கு  மட்டுமேயானதாகும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏப்ரல்-மே-ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் இந்தப் பெண்களின் கணக்குகளில் சுமார் ரூ.30ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் பங்கு என்னவென்பதும் தெரியவந்தது. கடந்த மாதத்தில் மட்டும் பீம் செயலி மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி அளவிலான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.



(Release ID: 1646147) Visitor Counter : 192