பிரதமர் அலுவலகம்

தொற்றுப் பரவலின் தற்போதைய நிலவரம், அதை முறியடிப்பதற்கான திட்டம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

நாம் புதிய மந்திரத்தைப் பின்பற்றுவது அவசியம் - தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்ய வேண்டும் - பிரதமர்
தொற்று பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாநிலங்களில் தொற்றை முறியடித்தால், நாடு முழுவதும் இதில் வெற்றி பெறும் - பிரதமர்
இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரும் இலக்கு விரைவில் எட்டப்படும் - பிரதமர்
பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானாவில் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது அவசரத் தேவை என்ற கருத்து கலந்துரையாடலின் போது நிலவியது
கட்டுப்படுத்துதல், தொடர்பைக் கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை இந்தப்போரில் திறன் வாய்ந்த ஆயுதங்களாகும் - பிரதமர்
தில்லி, அண்டை மாநிலங்களில் தொற்றை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக சமாளிக்க உள்துறை அமைச்சர் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அனுபவத்தை பிரதமர் விளக்கினார்
மாநிலங்களில் உள்ள கள நிலவரம் பற்றி முதலமைச்சர்கள் தெரிவித்தனர், சோதனை மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை அதிகரிக்கும் முயற்சிகளை விவரித்தனர்

Posted On: 11 AUG 2020 2:05PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று காணொளிக் காட்சி மூலம், கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதற்கான திட்டம், தற்போதைய நிலவரம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான  கலந்துரையாடலை நடத்தினார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அம்மாநிலத்தின் சார்பில் பங்கேற்றார்.

டீம் இந்தியாவின் கூட்டு முயற்சி

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒவ்வொருவரும் காட்டிய பெரும் ஒத்துழைப்பு மற்றும் இந்தியா முழுமையும் ஒரே குழுவாக  பணியாற்றியது பாராட்டத்தக்கது என பிரதமர் தெரிவித்தார். மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் அழுத்தம் குறித்து அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 10 மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த 10 மாநிலங்களில் தொற்று முறியடிக்கப்படுமானால், தொற்றுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் வெற்றி பெற்று விடும் என்று அவர் கூறினார்.

 

சோதனைகள் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு

நாட்டில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து, தற்போது சுமார் 7 லட்சத்தை எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர், இந்த நடவடிக்கை, நோய்த்தொற்றை முன்னதாகவே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவியுள்ளது என்றார். நாட்டின் சராசாரி இறப்பு விகிதம், மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு. அது தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது என்றும், இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வரும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சோதனை வசதிகளை அதிகரிப்பது அவசர அவசியம் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நோயைக் கட்டுப்படுத்துதல், தொடர்பைக் கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை இந்தப் போரில் திறன் வாய்ந்த ஆயுதங்களாகும் என அவர் கூறினார். மக்கள் விழிப்புணர்வு பெற்று, இத்தகைய முயற்சிகளுக்கு உதவி வருகின்றனர். இதன் பலனாக, வீட்டுக்குள் தனிமைப்படுத்துதலை நம்மால் வெற்றிகரமாக திறம்பட செய்ய முடிந்துள்ளதுஆரோக்கிய சேது செயலியின் பயன் குறித்து குறிப்பிட்ட அவர், நோய் பாதிப்பை 72 மணி நேரத்துக்குள் கண்டறிய முடிந்தால், தொற்று பரவும் வேகத்தை பெருமளவில் குறைக்கமுடியும் என நிபுணர்கள் கூறுவதாக  குறிப்பிட்டார். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, 72 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது ஒரு மந்திரத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், அதே ஆர்வத்துடன், கைகளைக் கழுவுதல், இரு நபர்களுக்கு இடையே போதிய இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசங்களை அணிதல் போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட உத்தி

தில்லி, அண்டை மாநிலங்களில் தொற்றை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக சமாளிக்க உள்துறை அமைச்சர் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அனுபவத்தை பிரதமர் விளக்கினார் இந்த உத்தியின் முக்கிய தூண்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பிரித்தல், சோதனைகளில் குறிப்பாக, உயர் அபாயப் பிரிவினரிடம் கவனம் செலுத்துதல் ஆகியவையாகும் என அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளின் பலன் கண் கூடாகத் தெரிந்தது என்றும், மருத்துவமனைகளில் சிறந்த மேலாண்மை, தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகளை அதிகரித்தல் ஆகியவையும் பேருதவியாக இருந்தன என்பது நிரூபணமானதாகவும் தெரிவித்தார்

முதலமைச்சர்கள் உரை

முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் நிலவும் கள நிலவரம் பற்றி தெரிவித்தனர். தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வெற்றிகரமான மேலாண்மைக்கு பிரதமரின் தலைமை தான் காரணம் எனப் பாராட்டு தெரிவித்த அவர்கள், அவரது நிலையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். சோதனைகள் நடத்தப்பட்டு வருவது, சோதனைகளை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், தொலைதூர மருத்துவத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்பை அதிகரித்தல் ஆகியவை குறித்து அவர்கள் உரையாற்றினர்கண்காணிப்பைப் பலப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மேலும்  வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள்நாட்டில் ஒருங்கிணைந்த மருத்துவ உள்கட்டமைப்பை அமைக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.

உலக சுகாதார அமைப்பின் பாராட்டு

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகச் செயலர், நாட்டில் கோவிட் பாதிப்பு குறித்து விளக்கினார். நாட்டின் சராசரி தொற்று விகிதத்தை விட சில மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்சோதனை வளர்ச்சிகளை அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை உள்ளூர் சமுதாயத்தினரின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், உள்துறை இணையமைச்சர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

*****


(Release ID: 1645065) Visitor Counter : 272