பிரதமர் அலுவலகம்
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் உரையாற்றினார் பிரதமர்.
21-ஆம் நூற்றாண்டில் உள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கிறது தேசிய கல்விக் கொள்கை 2020 – பிரதமர்
மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டது தேசிய கல்விக் கொள்கை; வேலைதேடுவோராக அல்லாமல் வேலையை உருவாக்குவோராக உருவாக்குவதில் கவனம் - பிரதமர்
Posted On:
01 AUG 2020 8:21PM by PIB Chennai
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்- 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (01 ஆகஸ்ட், 2020) உரையாற்றினார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் மாபெரும் இறுதிச்சுற்றின் போது பேசிய பிரதமர், “நாடு எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு பல்வேறு தீர்வுகளைக் காண மாணவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதோடு, தரவுகள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் எதிர்கால உயர்தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்களில் இந்தியாவின் விருப்பங்களை வலுப்படுத்துகிறது,” என்றார். அதிவேகமான 21-ஆம் நூற்றாண்டில், தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க, இந்தியா தன்னைத்தானே அதிவேகமாக மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், புத்தாக்கம், ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்திறன் ஆகியவற்றுக்காக தேவையான சூழலை கட்டமைக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் கல்வியை அதிக நவீனமாக மாற்றுவதும், திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுமே நோக்கம் என்று அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பிரதமர், 21-ஆம் நூற்றாண்டில் உள்ள இளைஞர்களின் சிந்தனைகள், தேவை, எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை மனதில் கொண்டு கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது வெறும் கொள்கை ஆவணம் இல்லை என்றும், 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் விருப்பங்களின் வெளிப்பாடு என்றும் அவர் கூறினார். மேலும் அவர், “தங்களுக்கு விருப்பமில்லாத பாடங்களின் அடிப்படையிலேயே திறன் முடிவு செய்யப்படுவதாக இன்றும் கூட பல்வேறு குழந்தைகள் கருதுகின்றனர். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் கட்டாயத்தால், மற்றவர்கள் தேர்வு செய்த பாடங்களை படிக்க வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, சிறப்பான கல்வியைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு பயனில்லாததையே படிக்கின்றனர்,” என்று தெரிவித்தார். இந்த நிலைப்பாடுகளை மாற்றும் வகையில், இந்தியாவின் கல்வி முறையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டுவர புதிய கல்விக் கொள்கை விரும்புவதாகவும், கல்வியின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அனுபவங்களைப் பயனுள்ளதாகவும், விரிவானதாகவும், ஒருவரின் சுயமான விருப்பங்களுக்கு வழிகாட்டும் வகையிலும் மாற்ற கற்றல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தேசிய கல்விக்கொள்கை கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், “இந்தப் போட்டி, நீங்கள் தீர்வுகாண விரும்பும் முதல் பிரச்சினையோ, கடைசி பிரச்சினையோ இல்லை,” என்றார். கற்பது, கேள்வி எழுப்புவது, தீர்வுகாண்பது ஆகிய மூன்று விதமான பணிகளில் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்தார். ஒருவர் கற்றுக்கொள்ளும் போது, அவர் கேள்வி எழுப்பும் திறனைப் பெறுகிறார். இந்த உணர்வையே இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். மேலும் அவர், பள்ளிகளைத் தாண்டிச் செல்லாத வகையில் உள்ள புத்தகப்பையின் சுமையிலிருந்து கவனத்தை மாற்றி, வாழ்க்கைக்கு உதவும் வகையில் கற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதிலும், வெறும் மனப்பாடம் செய்வதிலிருந்து சிந்தனையை வளர்ப்பதிலும் கல்விக்கொள்கை கவனம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல்துறைக் கல்விக்கு முக்கியத்துவம்
புதிய கல்விக்கொள்கையில் மிகவும் விரும்பத்தக்க சிறப்பம்சங்களில் ஒன்றாக, பல்துறை கல்வியின் மீதான முக்கியத்துவம் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒரே அளவு என்பது அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது என்ற நிலையில், பல்துறை கல்வி மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. பல்துறை கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சமூகம் விரும்புவதை விட, மாணவர் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார்.
கல்வி கிடைக்கச் செய்வது
கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பாபா சாகேப் அம்பேத்கர் கூறியுள்ளதை குறிப்பிட்ட பிரதமர், அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற அவரது யோசனைக்கு இந்த கல்விக் கொள்கை அர்ப்பணிக்கப்படுவதாக தெரிவித்தார். அனைவருக்கும் தொடக்கக்கல்வி முதலே கல்வி கிடைக்கச் செய்வதே தேசிய கல்விக் கொள்கை. 2035-ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்வோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்துவதே கொள்கையின் நோக்கம் என்று பிரதமர் கூறினார். மேலும் அவர், வேலை தேடுவோரை விட, வேலையை உருவாக்குவோரை உருவாக்குவதை இந்தக் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது என்று கூறினார். இதற்காக நமது மனநிலை மற்றும் அணுகுமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம்
இந்திய மொழிகளை வளர்க்கவும், மேலும் மேம்படச் செய்யவும் புதிய கல்விக் கொள்கை உதவும் என்று பிரதமர் தெரிவித்தார். கல்வியின் தொடக்கத்திலேயே தங்களது தாய்மொழியில் கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், இந்தியாவின் வளமையான மொழிகளை உலகுக்கு புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யும் என்றும் கூறினார்.
உலகளாவிய இணைப்புக்கு முக்கியத்துவம்
உள்ளூர் அளவில் கவனம் செலுத்தும் அதே வேளையில், உலகளாவிய இணைப்புக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதில் கொள்கை கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார். உலகின் முன்னணிக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தங்களது வளாகங்களை திறக்க ஊக்குவிக்கிறது. இது இந்திய இளைஞர்களுக்கு உலகத்தரமான கல்வியையும், வாய்ப்புகளையும் பெறச் செய்வதுடன் உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ளவும் உதவும். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கச் செய்து, உலகளாவிய கல்விக்கான மையமாக இந்தியாவை மாற்ற உதவும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
***
(Release ID: 1643022)
Visitor Counter : 268
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam