பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்து ஜுகுநாத் இணைந்து புதிய உச்சநீதிமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்

Posted On: 30 JUL 2020 1:14PM by PIB Chennai

மொரிஷியஸில் புதிய உச்சநீதிமன்றக் கட்டிடத்தை, பிரதமர் திரு.நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்து ஜுகுநாத்தும் இணைந்து, காணொளி மாநாடு மூலம் இன்று துவக்கி வைத்தனர். கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு துவக்கி வைக்கப்படும் இந்த உச்ச நீதிமன்றக் கட்டிடம் போர்ட் லூயி தலைநகரத்தில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புத் திட்டத்தின் முதலாவது கட்டிடம் ஆகும். இந்த சிறப்பு மிக்கத் திட்டம், இந்திய அரசு அளித்த 28.12 மில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து இந்தியாவின் அடிப்படைத் தத்துவம் மனிதர்களை மையமாக கொண்ட அணுகுமுறையே என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவிற்கும், மொரீசியசுக்கும் இடையேயான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துதற்கான, மக்களுக்குப் பயன்படும் வகையிலான கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

 

நவீன வடிவமைப்புடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, புதிய உச்ச நீதிமன்றக் கட்டிடம் மொரிஷியஸ் நீதிமன்றத்துக்கு உகந்த இருக்கையாகவும் இந்தியாவுக்கும், மொரீஷியசுக்கும் இடையேயான, பகிர்ந்து கொள்ளக்கூடிய மதிப்புகளைக் கொண்டதாகவும், ஒத்துழைப்பின் சின்னமாகவும் விளங்கும் என்று பிரதமர் கூறினார். இந்த கட்டமைப்புத் திட்டம் உரிய காலத்துக்குள் முடிக்கப்பட்டு விட்டது என்றும், முதலில் போடப்பட்டிருந்த செலவின மதிப்பீடுகளை விட குறைந்த செலவிலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இணைந்து வளர்ச்சி காண்பதற்கான இந்தியாவின் அணுகுமுறையின் மையப்பகுதியில், மொரிஷியசுடனான வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, எந்தவித நிபந்தனைகளும் அற்றது என்றும், இதில் எந்தவிதமான அரசியல் தாக்கங்களோ, பொருளியல் ரீதியான தாக்கங்களோ இல்லை என்றும் பிரதமர் கூறினார். நம்முடன் வளர்ச்சிக்கான பாதையில் இணையக் கூடியவர்களுக்கு மரியாதை அளிப்பது என்பதே வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் அடிப்படைக் கொள்கை என்றும், வளர்ச்சிக்கான பாடங்களைப் பகிர்ந்துகொள்வது என்பது மைய உந்துசக்தி என்றும் அவர் கூறினார். மரியாதை, பன்முகத்தன்மை, வருங்காலத்தைப் பற்றிய அக்கறை, தொடர்ச்சியான வளர்ச்சி ஆகிய அடிப்படை மதிப்புகளுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, தனித்து விளங்குகிறது என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

 

மொரிஷியஸ் நாட்டு மக்களின் சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் திரு.மோடி இனி வரும் ஆண்டுகளில் இந்திய மொரிஷியஸ் இணைப்பு மேலும் அதிக அளவில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மொரீஷியஸ் பிரதமர் ஜுகுநாத் பேசுகையில் இந்தத் திட்டத்திற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு ஆழ்ந்த பாராட்டுதல்களை தெரிவித்தார். இத்திட்டத்திற்கான ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய நட்புறவையும், ஒத்துழைப்பையும் பிரதிபலிப்பதாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய உதவியுடன் உச்சநீதிமன்றக் கட்டிடத்தை கட்டியது, மொரீஷியஸ் நாட்டின் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கான ஒரு புதிய மைல்கல் என்றும் அவர் கூறினார். இதனால் மொரீஷியஸ் நாட்டின் நீதித்துறை மேலும் திறனுள்ள வகையில் அனைவரையும் உள்ளடக்கிய முறையில், அனைவரும் அணுகக்கூடிய வகையில் செயல்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும், வளர்ச்சியும் கிடைக்க வேண்டும் (‘SAGAR – Security and Growth for All in the Region’) என்ற இந்தியாவின் தொலைநோக்குத் திட்டத்தைட்டி இந்துமாக்கடல் பகுதியில் மொரிசியசும், இந்தியாவும் சிறந்த இணையாக இருக்கும் என்பதை இந்த உச்சநீதிமன்ற புதிய கட்டிடம் நிரூபிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வருங்காலத்தை உத்தேசித்த இணைந்த செயல்பாடுகள் வலுப்பட வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள நிலையான உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

 

***



(Release ID: 1642511) Visitor Counter : 224