சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொவிட்-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3.42 லட்சம் மட்டுமே

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6.35 லட்சம், தொடர்ந்து அதிகரிப்பு

1 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு வென்டிலேட்டர்களும், 2 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு அவசர சிகிச்சையும், 3 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகளும் தேவைப்படுகின்றன

Posted On: 17 JUL 2020 2:34PM by PIB Chennai

இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3,42,756 மட்டுமே.  6.35  லட்சத்திற்கும் அதிகமானோர் (63.33 விழுக்காடு) குணமடைந்துள்ளனர்.

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். நம் நாட்டில் பத்து லட்சம் பேருக்கு 727.4 கொவிட்-19 நோயாளிகளே உள்ளனர். இந்த விகிதமானது, உலகளவில் சில ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது 4 முதல் 8 மடங்கு குறைவாகும்.

நமது நாட்டில் 10 லட்சம் பேருக்கு, கொவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 18.6 மட்டுமே. இது உலகளவில் மிகக் குறைவான விகிதமாகும்.

வீடு வீடாக சென்று தொற்று குறித்து கணக்கெடுப்பது, தடத்தைக் கண்டறிவது, பரவல் மண்டலங்களைக் கண்காணிப்பது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்றை பரிசோதிப்பது உள்ளிட்ட - அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால்- கொவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்களை உரிய காலத்திற்குள் கண்டறிய முடிகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடிகிறது.

கொவிட்-19 நோயாளிகளை பல்வேறு வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கும் முறையை இந்தியா கடைபிடிக்கிறது. அதாவது தொற்று அறிகுறி இல்லாத 80 சதவீதத்தினர் மற்றும் மிதமான தொற்று பாதிப்புடையவர்கள், மருத்துவக் கண்காணிப்பில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நெறிமுறைப்படி, அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நடுத்தர பாதிப்பு மற்றும் மோசமான பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே கொவிட் மருத்துவமனைகளிலோ, கொவிட் மருத்துவ மையங்களிலோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுமை குறைவதுடன், ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதால் இறப்பு விகிதமும் குறைகிறது. இதனால் 1.94 சதவீத நோயாளிகள் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்பதும், 0.35 சதவீதத்தினருக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவியும் மற்றும் 2.81 சத நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகளும் தேவைப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை உறுதி செய்வதற்கான மருத்துவ உள்கட்டமைப்பு நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, கொவிட்-19-க்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனை உள்கட்டமைப்பு இன்று வலுவாக உள்ளது. இதனால் 1383 கொவிட்டுக்கான பிரத்யேக மருத்துவமனைகள், 3107 கொவிட் சுகாதார நிலையங்கள் மற்றும் 10,382 கொவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சேர்த்து, 46,673 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் 21,848 வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. என்95 முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ உபகரணங்களும் போதுமான அளவில் உள்ளன. மத்திய அரசு, 235.58 லட்சம் என்95 முககவசங்கள் மற்றும் 124.26 லட்சம் பிபிஇ கிட்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு  வழங்கியுள்ளது.

 

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

 

***



(Release ID: 1639349) Visitor Counter : 175