பிரதமர் அலுவலகம்

உலக இளைஞர் தொழில் திறன்கள் தினத்தை ஒட்டி பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 15 JUL 2020 12:04PM by PIB Chennai

வணக்கம்!

எனது இளவயது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

உலக இளைஞர் தொழில் திறன்கள் தினத்தை ஒட்டி, அனைத்து இளவயதினருக்கும் என் வாழ்த்துக்கள்!

இந்த நாள் உங்கள் திறன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். இளைஞர்களின் மகத்தான சக்தி அல்லது 21வது நூற்றாண்டு தலைமுறையினரின் மகத்தான சக்தி என்பது அவர்களுடைய தொழில் திறன்களும், திறன்களைப் பெறுவதற்கான திறமையும் தான்.

நண்பர்களே,

இந்த கொரோனா நெருக்கடியானது வேலையின் இயல்பையும், உலக கலாச்சாரத்தையும் மாற்றிவிட்டது. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய புதிய தொழில்நுட்பமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பணி கலாச்சாரம் மற்றும் வேலையின் புதிய இயல்பைப் பார்க்கும்போது, நமது இளைஞர்கள் புதிய தொழில் திறன்களை அதிக அளவில் கற்று வருகின்றனர்.

நல்லது நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் தொழில்களும், சந்தைகளும் வேகமாக மாறிவரும் நிலையில், தங்களுடைய தேவையைத் தக்கவைத்துக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிவதில்லையே என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இந்தக் கொரோனா நெருக்கடி நேரத்தில், இந்தக் கேள்வி மிகவும் இன்னும் முக்கியமானதாக உள்ளது.

நண்பர்களே,

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரு பதிலை அளிப்பது வழக்கம். தேவைப்படும் நபராக இருப்பதற்கான மந்திரம் என்னவென்றால் - தொழில்திறன், மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் என்பது தான். தொழில்திறன் என்பது நீங்கள் புதிய ஒரு நுட்பத்தைக் கற்றுக் கொள்வதாகும். உதாரணமாக, மரக் கட்டைகளைக் கொண்டு நாற்காலி செய்வதற்கு நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். அது உங்களுடைய திறன். அந்த மரக்கட்டையின் மதிப்பை இப்போது நீங்கள் உயர்த்தி இருக்கிறீர்கள்; மதிப்புக் கூட்டுதல் செய்திருக்கிறீர்கள். ஆனால், இந்த மதிப்பை தொடர்ந்து பராமரிப்பதற்கு, தினமும் புதிதாக எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது புதிய ஸ்டைல் அல்லது புதிய வடிவமைப்பு என்பவை போன்ற அம்சங்களைச் சேர்க்க வேண்டும். ஒரே விஷயத்தைச் செய்வதில் புதிய நுட்பங்களை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புதிதாக சிலவற்றைக் கற்பது என்பது தான் மறுதிறனாக்கல் எனப்படுகிறது. அந்தத் திறனை இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வது கூடுதல் திறனாக்கல் எனப்படுகிறது. அதுபோல, சிறிய மரச் சாமான் தயாரிப்பதில் தொடங்கி, நீங்கள் அலுவலகத்துக்கான பொருள்கள் அனைத்தையும் உருவாக்கத் தொடங்கினால், அது கூடுதல் திறனாக்கல் ஆகிறது.

அறிந்து வைத்திருத்தல், புரிந்து கொள்தல், - தொழில்திறன், மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் என்ற இந்த மந்திரத்தைப் பின்பற்றுவது உங்கள் அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானது.

சொல்லப் போனால், தொழில்திறன் பற்றி நான் பேசும் போது, எனக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் கூறும் நபர் எப்போதும் நினைவுக்கு வருவார். அவர் அவ்வளவாக கல்வி கற்றவர் கிடையாது. ஆனால் அவருடைய கையெழுத்து அருமையாக இருக்கும். காலப்போக்கில், தன் கையெழுத்தில் புதிய ஸ்டைல்களை அவர் சேர்த்துக் கொண்டார். அதாவது தன்னைத் தானே மறு திறனாக்கல் செய்து மெருகூட்டிக் கொண்டார். இந்தத் திறன்களுக்காக மக்கள் அவரை நாடத் தொடங்கினர். விசேஷங்களுக்கு அழைப்பிதழ் அட்டைகளை எழுத்தித் தருமாறு அவரை மக்கள் கேட்டுக் கொள்வார்கள். பிறகு அவர் மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் செய்தார். வேறு சில மொழிகளையும் கற்றுக் கொண்டு, மற்ற பல மொழிகளிலும் அவர் எழுதத் தொடங்கினார். அந்த வகையில், காலப்போக்கில் அவருடைய தொழில் வளர்ச்சி அடைந்தது. தங்களது வேலைகளை செய்து கொள்வதற்காக, மக்கள் அடிக்கடி அவரை நாடி வரத் தொடங்கினர். பொழுது போக்காக தொடங்கிய ஒரு திறன், வாழ்வாதாரம் மற்றும் மரியாதையை பெற்றுத் தரும் விஷயமாக மாறிவிட்டது.

நண்பர்களே,

பிறருக்கு நாம் பரிசாக அளிப்பது தான் திறன். அனுபவத்துடன் சேர்ந்து திறன் வளர்கிறது. அதற்கு கால வரம்பு கிடையாது; காலம் போகப் போக அது செம்மை பெறும். தொழில் திறன் என்பது தனித்துவமானது; மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக அது உள்ளது. யாரும் கொள்ளையடித்துவிட முடியாத பொக்கிஷம் அது. மேலும், தொழில்திறன் என்பது தற்சார்பை அளிக்கக் கூடியது; வேலை கிடைக்கும் வாய்ப்பை அது உருவாக்குவதுடன் மட்டுமின்றி, சுயவேலை செய்ய வைப்பதாகவும் இருக்கிறது. திறனின் இந்த சக்தி ஒருவரை மகத்தான உயரங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

நண்பர்களே,

தனது திறனை மேம்படுத்திக் கொள்வதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் ஒருபோதும் வீணாக்காதவர்கள் என்பது தான் வெற்றிகரமானவர்களின் உண்மையான குணமாக உள்ளது. மேலும், புதிய வாய்ப்புகளை அவர் தேடிக் கொண்டிருப்பார். திறன்களை நாடுவதில் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லாவிட்டால், புதிதாக எதையும் கற்க விருப்பம் இல்லாவிட்டால், அது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அது தடங்கலைப் போல இருக்கும். ஒரு வகையில், தனது ஆளுமையை ஒரு சுமையாக அவர் ஆக்கிக் கொள்கிறார். அது நமக்கு மட்டுமின்றி, நமது உறவினர்களுக்கும் சுமையாக மாறிப் போகிறது. அதேசமயத்தில், திறன்களை நாடுவதில் ஆர்வம் இருந்தால் புதிய பலமும், வாழ்வதற்கு புத்துணர்வான ஆர்வமும் ஏற்படும். வாழ்க்கைக்குத் தேவையான உணவை சம்பாதிப்பதாக மட்டும் திறன்கள் இருப்பதில்லை. வாழ்வதற்கு நமக்கு நம்பிக்கையும் ஆர்வமும் தேவை. இதில் உங்களை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக திறன் இருக்கிறது. அது நமக்கு புதிய உத்வேகத்தைக் கொண்டு வருகிறது. புதிய ஆர்வக் கிளர்ச்சியை அது உருவாக்குகிறது! இதில் வயது வித்தியாசம் கிடையாது. நீங்கள் இளையவராக அல்லது முதியவராக இருந்தாலும், புதிய தொழில் திறன்களை நீங்கள் கற்றுக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் உள்ள ஆர்வம் ஒருபோதும் குறையாது.

நண்பர்களே,

தொழில்திறன்களின் சக்தியை ஒவ்வொருவரும் அனுபவித்திருக்க வேண்டும். இன்றைக்கு, நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது.  என்னுடைய இளவயதில் மலைவாழ் பகுதியில் தன்னார்வலராக நான் வேலை பார்த்து வந்த காலம் அது. சில நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருமுறை, ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் நாங்கள் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் காலையில் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. எல்லோரும் நிறைய முயற்சி செய்து பார்த்தோம். தள்ளிவிட்டுப் பார்த்தார்கள். ஆனால் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. காலை 7 அல்லது 8 மணிக்கு ஒரு மெக்கானிக்கை அழைத்தார்கள். அவர் வந்து 2 நிமிடங்களில் அதைச் சரி செய்துவிட்டார். எவ்வளவு கட்டணம் என்று கேட்டோம்; 20 ரூபாய் என்றார். அந்தக் காலத்தில் 20 ரூபாயின் மதிப்பு அதிகம். ஆனால் எங்களிடம் இருந்த ஒருவர் கூறினார், ``சகோதரரே இது வெறும் 2 நிமிட வேலை, நீங்கள் 20 ரூபாய் கேட்கிறீர்களே'' என்றார். அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு இன்றைக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. என மனதில் ஒரு தாக்கத்தை அது ஏற்படுத்திவிட்டது. கல்வி கற்காத அந்த மெக்கானிக், ``சார் நான் 2 நிமிடங்களுக்காக 20 ரூபாய் கேட்கவில்லை, 20 வருடங்களாக நான் சேர்த்து வைத்திருக்கும் திறனுக்காகக் கேட்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்களுக்கு தான் 20 ரூபாய் கேட்கிறேன்'' என்று பதில் அளித்தார். இதுதான் தொழில் திறனின் பலம் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய வேலையில் மட்டுமின்றி, உங்கள் திறமையிலும் அது தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்துகிறது.

மேலும் நண்பர்களே,

இன்னொரு விஷயத்தையும் இங்கே புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அறிவு மற்றும் தொழில்திறன் என்பதில் சிலர் எப்போதும் குழப்பிக் கொள்கிறார்கள். அல்லது குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் ஒரு சிறிய உதாரணத்தைக் கூறுவது உண்டு. நீங்கள் புத்தகங்கள் படிக்கலாம், ஒரு சைக்கிளை எப்படி ஓட்டுவது என யூடியூப் மூலம் பார்க்கலாம்; சைக்கிளில் எப்படி அமர்வது எனப் பார்க்கலாம்; சைக்கிள் எப்படி செயல்படுகிறது; அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி செயல்படுகிறது, ஹேண்டில்பாரை எப்படிப் பிடிப்பது, எப்படி பிரேக் போடுவது என்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் அறிவு சார்ந்த விஷயங்கள். ஆனால் இந்த அறிவை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் சைக்கிளை ஓட்டிவிடுவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. உண்மையில், சைக்கிள் ஓட்டுவதற்கு உங்களுக்கு அதற்கான திறன் தேவை. படிப்படியாக நீங்கள் சைக்கிள் ஓட்டி கற்றுக் கொள்கிறீர்கள். பிறகு மகிழ்ச்சியாக சைக்கிள் ஓட்டுகிறீர்கள். பிறகு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. இந்தக் கலையைக் கற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் ஒரு திறன் அல்லது திறமையை பெற்றுக் கொள்கிறீர்கள். அடுத்த முறை சைக்கிள் ஓட்டும் போது அதில் மனதை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

சமூகம் தொடங்கி நிர்வாகம் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இப்போது, அறிவு மற்றும் தொழில் திறன்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், தொழில் திறன்மிக்க இந்தியா லட்சிய நோக்குத் திட்டம் இந்த எண்ணத்துடன் தொடங்கப்பட்டது. இளைஞர்கள் அறிவுடன் தொழில்திறன்களை கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் இதன் இலக்கு. இதற்காக நூற்றுக்கணக்கான பிரதமரின் கௌஷல் விகாஸ் கேந்திரங்கள் நாடு முழுக்க உருவாக்கப்பட்டன. ஐ.டி.ஐ.களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான இடங்கள் அதிகரிக்கப் பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், 5 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

வேகமாக உலகம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பல துறைகளில் தொழில் திறன் பெற்ற லட்சக்கணக்கானவர்கள் தேவைப்படுகிறார்கள். சுகாதாரச் சேவைத் துறையில் நிறைய தேவை இருக்கிறது. இதை உணர்ந்து உலகம் முழுக்க உருவாகும் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டங்களை தொழில் திறன் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளில் என்ன மாதிரியான தேவைகள் இருக்கின்றன என்பது பற்றி இந்திய இளைஞர்கள் சரியான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். சுகாதாரத் துறையில் புதிய வாய்ப்புகள் எந்த நாடுகளில் உருவாகின்றன என்பது பற்றியும், குறிப்பிட்ட ஒரு சேவைத் துறையில் என்ன மாதிரியான தேவைகள் உருவாகின்றன என்பது பற்றியும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவை குறித்த விஷயங்கள் இந்திய இளைஞர்களுக்கு மிக வேகமாக கிடைக்கும்.

இப்போது வணிகக் கப்பல் துறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கப்பல் அலுவலர்களுக்கு இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் தேவையாக உள்ளது. நம்மிடம் 7500 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடலோரப் பகுதிகள் உள்ளன. கடல் மற்றும் கடலோரப் பகுதி சூழ்நிலைகள் பற்றி நம் இளைஞர்களில் பெரும் பகுதியினர் நன்கு அறிந்துள்ளனர். இந்தத் துறையில் தொழில் திறனை மேம்படுத்த நாம் முயற்சி மேற்கொண்டால், உலகிற்கு லட்சக்கணக்கான கப்பல் அலுவலர்களை உருவாக்க முடியும், நமது நாட்டின் கடலோரப் பகுதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

தேவையை அறிந்து பயிற்சி கொடுப்பதால், இதுபோன்ற தகவல்களை அளிக்கும் பணி எளிதாகிறது. இதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் தொழில்திறனை இணை சேர்த்தல் பணி நான்கைந்து தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தொழில் திறன் பெற்ற மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய வேலைகளைத் தேர்வு செய்து கொடுப்பதில் இந்த முனையம் முக்கியப் பங்காற்றும். இதன் மூலம், நிறுவனங்கள் ஒரே கிளிக் மூலம், தங்களுக்கு ஏற்ற தொழில்திறன் உள்ள தொழிலாளர்களைக் கண்டறிய முடியும். சமீபத்தில் நகரங்களில் இருந்து தங்கள் கிராமங்களுக்குச் சென்றுள்ள தொழிலாளர்கள், இதனால் பெரிதும் பயன் பெறுவார்கள். சிறப்புத் தொழில் திறன்களுடன் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றவர்கள், கிராமங்களுக்கு எப்படிப் புத்துயிரூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். சிலர் பள்ளிக்கூடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள்; சிலர் புதிய வடிவமைப்புகளில் வீடுகள் கட்டுகிறார்கள். பெரியதோ அல்லது சிறியதோ எப்படி இருந்தாலும் ஒவ்வொரு தொழில் திறனும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் அபாரமாக பலம் சேர்ப்பவையாக இருக்கும்.

உலக இளைஞர் தொழில் திறன்கள் தினத்தை ஒட்டி நான் மீண்டும் இந்த நாட்டு இளைஞர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உலகம் நோய்த் தொற்றின் பிடியில் சிக்கியுள்ளது. எனவே, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வது என் கடமையாக உள்ளது. நான் மட்டுமல்ல, நீங்களும் அதை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அது என்ன? முதலில், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, `இரண்டு கெஜ தூரம்' அல்லது தனி நபர் இடைவெளியை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முகக்கவச உறை அணிய மறக்காதீர்கள். பொது இடத்தில் எச்சில் துப்பும் பழக்கத்தைக் கைவிடுமாறு மக்களிடம் விளக்குங்கள். நாம் இன்றைக்கு இங்கே கூடியிருப்பதன் மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு கல்வி கற்றவர்களாக இருந்தாலும், எத்தனை ப்பட்டங்கள் பெற்றவர்களாக இருந்தாலும், உங்கள் தொழில் திறனும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். புதிய தொழில் திறன்களைக் கற்பதற்கு ஒருவர் எப்போதும் தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கத் தொடங்குவீர்கள். வாழ்வில் புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். ஒரு தொழில் திறனால் உங்கள் கைகள், உங்கள் விரல்கள், உங்கள் இருதயம் மற்றும் மனதை நீங்கள் பலப்படுத்தி மேன்மைப்படுத்திக் கொள்வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். நீங்கள் முன்னேறிச் சென்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருப்பீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.

மிக்க நன்றி!

உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

                                                                                                      *****


(Release ID: 1638998) Visitor Counter : 378