பிரதமர் அலுவலகம்

லே பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவப் படைகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 03 JUL 2020 5:50PM by PIB Chennai

பாரத மாதாவிற்கே வெற்றி!

பாரத மாதாவிற்கே வெற்றி!

நண்பர்களே,

இந்திய அன்னையின் மானத்தைக் காக்கும் உங்கள் துணிவு, தீரம், அர்ப்பணிப்பு ஈடிணையற்றதாகும். உங்களின் உணர்வு உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாகும். நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு கவசமாக மிக மோசமான நிலைமைகளிலும் உயரமான பகுதிகளில் நீங்கள் ஆற்றும் பணியை எவராலும் வெல்ல முடியாது!

உங்களின் துணிவு நீங்கள் பணிபுரியும் இந்த இடத்தை விட பல மடங்கு உயரமானது. அன்றாடம் நீங்கள் நடைபயிலும் சமவெளியை விட வலிமையானது உங்கள் உறுதி. உங்களைச் சுற்றியுள்ள பாறைகளை விட வலிமையானவை உங்கள் கைகள். உங்களைச் சுற்றியுள்ள மலைகளை விட வலிமையானவை உங்களின் மனத்திண்மை. உங்கள் மத்தியில் இருக்கும்போது என்னால் அதை உணர முடிகிறது. என் கண்களாலேயே அதைக் காணவும் முடிகிறது.

நண்பர்களே,

நமது நாட்டைப் பாதுகாக்கும் கடமை உங்கள் கைகளில்தான், உங்களின் வலுவான மனத்திண்மையில்தான் உள்ளது. உங்களின் தன்னம்பிக்கை என்பது ஊசலாட்டமற்றதும் கூட. நான் மட்டுமல்ல; நாடு முழுவதுமே சலனமற்ற நம்பிக்கையை உங்களின் மீது வைத்துள்ளது. அதனால் நாடும் நிம்மதியோடு இருக்கிறது. நாட்டின் எல்லையில் நீங்கள் இருப்பதுதான் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் இரவு பகலாக நாட்டிற்காக உழைக்க உத்வேகம் தருகிறது. சுயச்சார்பு மிக்க இந்தியாவிற்கான பற்றுறுதி உங்களாலும், உங்களின் தியாகத்தாலும், முயற்சிகளாலும் மேலும் வலிமை பெறுகிறது. இப்போது நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்களது தீரத்தின் மூலம் உலகம் முழுவதற்குமே இந்தியாவின் வலிமையை எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.

இப்போது எனக்கு முன்னால் பெண் படைவீரர்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். போர்க்களத்தில், நாட்டின் எல்லைப் பகுதியில் இத்தகையதொரு காட்சியே உத்வேகம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
 

நண்பர்களே,

நமது தேசிய கவியான ராம்தாரி சிங் தினகர் அவர்கள் எழுதியிருந்தார்:

இந்தப் போரில் பூமித்தாய் பூரித்துப் போயிருக்கிறாள்!

எழுதுகோலே அவனது புகழை இன்றே எழுது!

எழுதுகோலே அவனது புகழை இன்றே எழுது!


எனவே எனது இந்த வார்த்தைகளால் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். கால்வான் பள்ளத்தாக்கில் உயிரைத் தியாகம் செய்த துணிவு மிக்க வீரர்களுக்கு எனது அஞ்சலியை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் வந்த வீரர்கள் தங்கள் வீரத்தை நமக்கு எடுத்துக் காட்டினார்கள். அவர்களது வீரத்தை இந்த நாடு இன்னமும் போற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இன்று ஒவ்வொரு இந்தியரும் உங்கள் முன்னால் மண்டியிட்டபடி, நாட்டின் தீரமிக்க படைவீரர்களுக்கு வணக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். உங்கள் துணிவிற்காக, தீரத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொண்டிருக்கின்றனர்.

நண்பர்களே,

சிந்து நதியின் வாழ்த்துகளைப் பெற்றதன் விளைவாக இந்த பூமி புனிதமானதாக மாறியிருக்கிறது. இந்த நாட்டின் தீரமிக்க புதல்வர்களின் துணிவையும் தீரத்தையும் குறித்த எண்ணற்ற கதைகள் இதனோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. லே லடாக்கில் இருந்து கார்கில் மற்றும் சியாச்சென் வரை, ரெசாங் லாவின் பனிமூடிய சிகரங்களிலிருந்து கால்வான் பள்ளத்தாக்கில் ஓடி வரும் தெள்ளிய ஓடை வரை இங்கிருக்கும் ஒவ்வொரு மலையுச்சியும், ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு கூழாங்கல்லும் இந்திய நாட்டு வீரர்களின் வலிமைக்கான சாட்சியங்களாக நிற்கின்றன. 14வது படைப்பிரிவின் தீரம் குறித்த கதைகள் நம் ஒவ்வொருவருக்குமே தெரிந்திருக்கும். வெல்லற்கரிய உங்களின் துணிவை உலகமே கண்டது. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் உங்களின் தீரமிக்க செயல்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. அதே போன்று பாரத மாதாவின் எதிரிகளும் உங்களின் மனஎழுச்சியை, கோபத்தை நன்றாகவே கண்ணுற்றனர்.

நண்பர்களே,

இந்தியாவின் சிகரமாகத் திகழும் லடாக் பகுதி முழுவதுமே 130 கோடி இந்தியர்களின் மரியாதைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தப் பூமி இந்தியாவிற்காக எப்போதும் தியாகம் செய்யத் தயாராக உள்ள தேசப்பற்று மிக்கவர்களின் பூமி. குஷோக் பகுலா ரின்பொன்சே போன்ற மகத்தான தேசப்பற்று மிக்கவர்களை உருவாக்கிய மண் இது. எதிரியின் அழிவுமிக்க திட்டங்களுக்கு எதிராக உள்ளூர் மக்களை அணிதிரட்டியவர் ரின்போன்சே. பிரிவினையை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு சதித்திட்டமுமே ரின்போன்சேவின் தலைமையில் லடாக் பகுதியின் தேசப்பற்று மிக்க மக்களால் முறியடிக்கப்பட்டன. அவரது இடைவிடாத முயற்சிகளின் விளைவாக நமது நாடும் இந்திய ராணுவமும் லடாக் ஸ்கவுட் என்ற காலாட்படைப் பிரிவை உருவாக உத்வேகம் பெற்றன. ராணுவத்தினராக இருந்தாலும் சரி, சராசரி குடிமகனாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மட்டத்திலும் லடாக் பகுதி மக்கள் இன்று நாட்டை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பை செய்து வருகின்றனர்.

நண்பர்களே,

ஒரு பழமொழி உண்டு. தனது ஆயுதங்களின் வலிமையைக் கொண்டே துணிவு மிக்கதொரு வீரன் தனது தாய்நாட்டை பாதுகாக்கிறான். இந்த மண் தீரம் மிக்கவர்கள் நிரம்பிய மண். அதைப் பாதுகாப்பதற்கான நமது ஆதரவு, வலிமை, பற்றுறுதி ஆகியவை இமயமலையைப் போன்று மிக உயர்ந்தவை ஆகும். இந்தத் திறமையையும் பற்றுறுதியையும் இந்த தருணத்தில் உங்கள் கண்களில் காண்கிறேன். உங்கள் முகத்திலேயே அவை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு படையெடுப்பாளர்களின் தாக்குதல்களையும் கொடுமைகளையும் விரட்டியடித்த அதே பூமியைச் சேர்ந்த வீரர்கள்தான் நீங்கள். இதுதான் நமது அடையாளம். நாம் அனைவருமே குழலூதும் கண்ணனை வணங்கும் மக்கள்தான். ஒரு கொள்கையாக எதிரிகளை கொன்றழிக்கும் சுதர்சன சக்கரத்தை வைத்திருக்கும் கிருஷ்ணரை வணங்குபவர்களும் நாம்தான். இத்தகையதொரு உத்வேகத்துடன்தான் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் இந்தியா மேலும் வலிமை பெற்றதொரு நாடாக உருப்பெறுகிறது.

நண்பர்களே,

அமைதியும் நட்புறவுமே ஒரு நாட்டின், உலகத்தின், மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை ஆகும் என ஒவ்வொருவருமே நம்புகின்றனர். எனினும் பலவீனர்களால் அமைதியை நிலைநாட்ட இயலாது என்பதையும் நாம் அறிவோம். பலவீனமானவர்களால் அமைதிக்கான முயற்சியை மேற்கொள்ள இயலாது. துணிவு என்பதே அமைதிக்கான முன் நிபந்தனை ஆகும். நீர், நிலம், ஆகாயம், விண்வெளி என அனைத்து மட்டங்களிலும் இன்று இந்தியா தனது வலிமையை வளர்த்துக் கொண்டு வருகிறது எனில் மனித இனத்தின் நலன்தான் அதன் இலக்காக உள்ளது. இந்தியா இன்று நவீனமான ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. இந்திய ராணுவத்திற்கான அனைத்து வகையான நவீன தொழில்நுட்பங்களையும் பெற்று வருகிறது. அதன் பின்னால் உள்ள சிந்தனை இதுதான். எவ்வளவு விரைவாக இந்தியா நவீன கட்டமைப்பை வளர்த்தெடுக்கிறதோ அதன் பின்னால் உள்ள செய்தியும் அதுவே ஆகும்.

அது உலகப் போராக இருந்தாலும் சரி, அல்லது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியாக இருந்தாலும் சரி, நமது வீரர்களின்  தீரத்தை உலகம் கண்டிருக்கிறது. அதைப் போன்றே தேவைப்படும்போதெல்லாம் உலக அமைதிக்கான அதன் முயற்சிகளும் இருந்து வந்துள்ளன. மனித இனத்தைப் பாதுகாப்பதற்காகவே நாம் எப்போதும் பாடுபட்டு வந்திருக்கிறோம். இந்தியாவின் இந்த இலக்கை, பாரம்பரியத்தை, அதன் மகத்தான கலாச்சாரத்தை  நிலைநாட்டும் தலைவர்களாக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.

நண்பர்களே,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மறை தந்த வள்ளுவப் பெருந்தகை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

அதாவது ஒரு படைக்கான அரண் என்பது வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைபோக்கு, தெளிவு ஆகியவையே ஆகும். இந்திய ராணுவம் எப்போதுமே இந்தப் பாதையைத்தான் பின்பற்றி வந்துள்ளது.

நண்பர்களே,

காலனி ஆதிக்கத்தை விரித்துக் கொண்டே போகும் காலம் முடிவடைந்து விட்டது. இது பரிணாமத்திற்கான யுகமாகும். மாற்றங்கள் மிக வேகமாக நடைபெற்று வரும் இக்காலத்தில் பரிணாமம் மட்டுமே இப்போது பொருத்தமானதாக இருக்கும். இதுவே மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பும் ஆகும். மேம்பாடுதான் எதிர்காலத்திற்கான அடிப்படையும் கூட. இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் நாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே போவது என்பது மனித இனத்திற்கு மிகப்பெரும் துன்பங்களை தந்துள்ளது. மனிதத் தன்மையை முற்றிலுமாக அழித்துக் கட்டவும் அது முயற்சி செய்தது. எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே உலக அமைதிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது.

நண்பர்களே,

இத்தகைய சக்திகள் உலகத்திலிருந்தே துடைத்தெறியப்பட்டுள்ளன; அல்லது பின்வாங்கிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. உலகம் எப்போதுமே இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இன்று உலகம் முழுவதுமே எல்லையை விரிவுபடுத்தும் கொள்கைக்கும் எதிரான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று உலகமானது வளர்ச்சியில்தான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேம்பாட்டிற்கான போட்டியை அது இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டும் இருக்கிறது.

நண்பர்களே,

நாட்டின் பாதுகாப்பு குறித்த ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம் நான் எப்போதுமே இரண்டு அன்னையர்களை முதலில் நினைத்துப் பார்ப்பது வழக்கம். முதலாவது நமது இந்தியத் தாய். இரண்டாவது உங்களைப் போன்ற வலிமை மிக்க வீரர்களைப் பெற்றெடுத்து நாட்டிற்குத் தந்த துணிச்சல் மிக்க தாய்மார்கள். இதன் அடிப்படையில்தான் உங்கள் பெருமைக்கும், உங்கள் குடும்பங்களின் பெருமைக்கும், நமது இந்தியத் தாயின் பாதுகாப்பிற்கும் உச்சகட்ட முன்னுரிமையை நாடு வழங்கி வருகிறது.

உங்களுக்குத் தேவைப்படுகின்ற கருவிகள் அல்லது ராணுவத்திற்குத் தேவையான நவீன ஆயுதங்கள் ஆகியவற்றின் மீது நாங்கள் எண்ணற்ற கவனத்தை செலுத்தி வருகிறோம். நாட்டின் எல்லைப்புற கட்டமைப்பிற்கான செலவும் கூட கிட்டத்தட்ட மூன்று மடங்காக ஆகியிருக்கிறது. இதுவும் கூட எல்லைப் பகுதியின் மேம்பாட்டிற்கும், எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை துரிதமாகக் கட்டுவதற்கும் வகை செய்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள  மிகப்பெரும் வசதி என்பது மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே சரக்குகள் உங்களை வந்தடையும் என்பதே ஆகும்.

நண்பர்களே,

மிக நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த ராணுவப் படைகளுக்கு இடையில் சிறப்பான ஒருங்கிணைப்பிற்காக, பாதுகாப்புத் துறைக்கான தலைவர் பதவியை உருவாக்குவதாக இருந்தாலும் சரி அல்லது தேசிய போர் நினைவுச் சின்னத்தை உருவாக்குவதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் என்பதற்கான முடிவாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் குடும்பங்களுக்கு கல்வி வசதியை செய்து கொடுப்பதற்கான சரியான ஏற்பாடுகள் போன்ற தொடர்ச்சியான பணிகளாக இருந்தாலும் சரி, இவை அனைத்திலுமே இன்று ஒவ்வொரு மட்டத்திலும் நாட்டின் ராணுவப் படைகள், வீரர்களை நமது நாடு வலுப்படுத்திக் கொண்டே வருகிறது.

நண்பர்களே,

புத்தர் பெருமான் கூறியிருந்தார்: துணிவு என்பது பற்றுறுதி, ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். துணிவு என்பது கருணையும் ஆகும். உண்மைக்காக துணிவோடும் உறுதியோடும் நிற்க நமக்குக் கற்றுக் கொடுப்பதும் துணிவே ஆகும். சரியானதை சொல்வதற்கும் செய்வதற்கும் நமக்கு வலிமை அளிப்பதும் துணிவே ஆகும்.

நண்பர்களே,

கால்வான் பள்ளத்தாக்கில் நமது துணிவுமிக்க நாட்டின் புத்திரர்கள் வெல்லற்கரியதொரு துணிவை வெளிப்படுத்தினார்கள். இது நமது மகத்தான வலிமையை வெளிப்படுத்துவதாகவும் விளங்கியது. உங்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது. உங்களோடு கூடவே, நமது இந்திய-திபெத் எல்லைப் படைப் பிரிவினர், எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவினர், எல்லைப்புற சாலைப் படைப் பிரிவினர் மற்றும் இதர அமைப்புகள், பொறியியல் கலைஞர்கள், மிகவும் கடுமையான சூழலிலும் வேலை செய்து வரும் இதர தொழிலாளர்கள் ஆகியோர் குறித்தும் நாடு பெருமை கொள்கிறது. நீங்கள் அனைவருமே மகத்தான வேலையைச் செய்து வருகின்றீர்கள். நம் தாய் நாட்டைப் பாதுகாக்கவும் அதற்குச் சேவை செய்யவும் நீங்கள் அனைவருமே ஒன்றுபட்டு உங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்று நமது நாடு ஒரே நேரத்தில் பலவகையான பேரழிவுகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. அதுவும் கூட உங்களின் கடுமையான உழைப்பின் மூலமாக, உங்களிடமிருந்து பெற்ற உத்வேகத்தைக் கொண்டுதான் எங்களால் இதைச் செய்ய முடிந்துள்ளது. நம் நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும், மிகவும் கடினமான எந்தவொரு சவாலையும் தொடர்ந்து வெற்றி கொள்ளும் வகையில் நாம் ஒன்றுபட்டு நிற்போம். நாட்டின் எல்லைப் பகுதிகளில் நீங்கள் அனைவரும் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் கனவு காணும் இந்தியாவை ஒன்றிணைந்து உருவாக்குவோம். உங்களின் கனவுகள் நிரம்பிய இந்தியாவை நாம் உருவாக்குவோம். நாட்டின் 130 கோடி மக்களும் உங்களின் பின்னால் நிற்கிறார்கள் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தவே நான் இங்கே வந்தேன். வலுவான, சுயச்சார்பு மிக்க ஒரு இந்தியாவை நாம் உருவாக்குவோம். நிச்சயமாக உருவாக்குவோம். உங்களிடமிருந்து உத்வேகம் பெற்ற பிறகு, சுயச் சார்புமிக்க இந்தியா குறித்த எனது பற்றுறுதி மேலும் வலிமை பெற்றுள்ளது.

எனது மனதின் அடியாழத்திலிருந்து மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. என்னோடு இணைந்து உரக்க குரலெழுப்புங்கள்:

பாரத மாதாவிற்கே வெற்றி!

பாரத மாதாவிற்கே வெற்றி!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!!

நன்றி!
 (Release ID: 1636772) Visitor Counter : 348