நிதி அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு ரூ 62,361 கோடியை வருமான வரித்துறை திரும்ப செலுத்தியது

Posted On: 03 JUL 2020 12:42PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவ, நிலுவையிலுள்ள வரி திரும்ப செலுத்துதல்களை வழங்கிட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம் வெளியிடப்பட்ட அரசின் முடிவைத் தொடர்ந்து, ஏப்ரல் 8 முதல் ஜூன் 30, 2020 வரை ஒரு நிமிடத்திற்கு 76 கோப்புகள் என்னும் விகிதத்தில் வரி திரும்ப செலுத்துதல்களை வருமானவரித்துறை வழங்கியது. வெறும் 56 வார நாட்களை கொண்ட இந்தக்காலத்தில், 20.44 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளுக்கு ரூ 62,361 கோடிக்கும் அதிகமான திரும்ப செலுத்துதல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியது.

 

வரி செலுத்துவோருக்கு உதவிகரமாக இருப்பதோடு மட்டுமிலாமல், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பணப்புழக்கத்தை வழங்கும் வசதியாகவும் இருக்கும் வருமான வரித்துறையின் இந்த அம்சத்தை வரி செலுத்துவோர் அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 19,07,853 வழக்குகளில் ரூ 23,453.57 கோடி மதிப்பிலான வருமான வரி திரும்ப செலுத்துதல்கள் வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 1,36,744 வழக்குகளில் ரூ 38,908.37 கோடி மதிப்பிலான பெரு நிறுவன வரி திரும்ப செலுத்துதல்கள், வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிக அளவு மற்றும் எண்ணிக்கையிலான திரும்ப செலுத்துதல்கள் முழுவதும் மின்னணு வசதி மூலமாக வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளன. இது போன்ற வரி திரும்ப செலுத்துதல்கள் வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதற்கு மாறாக, எந்த ஒரு வரி செலுத்துவோரும் திரும்ப செலுத்துதலுக்கான கோரிக்கையோடு துறையை அணுக வேண்டியதில்லை. தங்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக திரும்ப செலுத்துதல்களை அவர்கள் பெறுகிறார்கள்.

 

திரும்ப செலுத்துதல் நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட, துறையில் இருந்து தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு வரி செலுத்துவோர் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கோண்டது. தங்களது நிலுவைத்தொகை கோரிக்கை, வங்கி கணக்கு எண், திரும்ப செலுத்துதல் வழங்கப்படுவதற்கு முந்தைய குறைபாடு/பொருந்தாத்தன்மை சமரசம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உறுதி செய்ய வரி செலுத்துவோரை வருமான வரித் துறையின் மின்னஞ்சல்கள் கேட்டுக்கொள்ளும். இத்தகைய அனைத்து வழக்குகளிலும், வரி செலுத்துவோரின் விரைவான பதில்கள் அவர்களின் திரும்ப செலுத்துதல்களை விரைந்து செயல்படுத்த வருமான வரித்துறைக்கு உதவும்.

 

*****



(Release ID: 1636138) Visitor Counter : 176