உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பி.எம். எஃப்.எம்.இ திட்டம் ரூ.35,000 கோடி முதலீட்டை உருவாக்கும் & தொழில்திறன் மற்றும் ஓரளவு தொழில்திறனுடன் கூடிய 9 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்: ஹர்சிம்ரத் கௌர் பாதல்

Posted On: 29 JUN 2020 1:33PM by PIB Chennai

உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கௌர் பாதல் இன்று (29 ஜுன் 2020) சுய-சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் சிறு தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தை (PM FME) தொடங்கி வைத்தார்.  இந்தத் திட்டமானது மொத்த முதலீடாக ரூ.35,000 கோடியை உருவாக்கும் என்றும் தொழில்திறன் மற்றும் ஓரளவு தொழில்திறன் தேவைப்படும் 9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  தகவல் பெறுதல், பயிற்சி, வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் முறைப்படுத்துதல் மூலம் 8 லட்சம் தொழிற்சாலைகள் பலன் அடையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூரின் உணவு பதப்படுத்துதல் தொழில் அலகுகளின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், ஊரகத் தொழில்முனைவோர்களால் கிராமங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உள்ளூர் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்யும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இத்தகைய உள்ளூர் தொழில் அலகுகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் பங்களிப்பையும் பிரதமர் 12.05.2020 அன்று தேசத்துக்கு ஆற்றிய உரையில் வலியுறுத்தி இருந்தார்.

உணவு பதப்படுத்துதல் தொழில் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்துப் பேசிய திருமதி பாதல், அமைப்பு சாராத உணவு பதப்படுத்துதல் தொழில்பிரிவு எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சனைகள் அவற்றின் செயல்திறனைக் குறைப்பதோடு வளர்ச்சியையும் தடுக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.  நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் நிலைமை, பயிற்சி, நிறுவனக் கடன் கிடைத்தல் ஆகியவற்றில் போதாமை, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரக்கட்டுப்பாடு குறித்த அடிப்படை விழிப்புணர்வு இல்லாமை; பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் திறன்கள் போன்றவற்றின் போதாமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தச் சவால்கள் உள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  இந்தச் சவால்களின் காரணமாக, அமைப்பு சாராத உணவு பதப்படுத்துதல் தொழில்பிரிவுக்கு அளப்பரிய உற்பத்தி வாய்ப்புகள் இருந்தாலும்கூட அதன் பங்களிப்பு அதிலும் குறிப்பாக மதிப்பு கூட்டலிலும் உற்பத்தி அளவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது செயல்பட்டு வரும் சிறு அளவிலான உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நிதிஉதவி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உதவி அளித்து அவற்றின் தரநிலையை அதிகரிக்கும் நோக்கத்தோடு உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகமானது (MoFPI)  இந்தியா முழுமைக்கும் பொருந்தும் வகையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் சிறு தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தை 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்துக்கு நடைமுறைப்படுத்த உள்ளது.  இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடி ஆகும்.  இந்தத் திட்டத்தின் கீழ் செலவை மத்திய மாநில அரசுகள் 60: 40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும்.

வடகிழக்கு மற்றும் இமாலயா மாநிலங்களைப் பொறுத்து 90:10 என்ற விகிதத்திலும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு 60: 40 என்ற விகிதத்திலும் சட்டமன்றம் இல்லாத இதர யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவிகிதம் என்ற அளவிலும் செலவு பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்தத் திட்டமானது ஒரு மாவட்டத்துக்கு ஒரு உற்பத்திப் பொருள் என்ற அணுகுமுறையைக் கடைபிடிக்கிறது.  உள்ளீட்டுப் பொருட்களை கொள்முதல் செய்தல், பொதுச்சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்திப் பொருட்களைப் சந்தைப்படுத்துதல் ஆகிய அம்சங்களில் பெரிய அளவிலான பலன் அடைவதற்காக இந்த அணுகுமுறை கைக்கொள்ளப்படுகிறது.  தற்போதைய தொழில்பிரிவுகளின் தொகுப்பிடங்கள், கச்சாப் பொருட்கள் கிடைக்கும் நிலைமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மாநில அரசுகள் ஒரு மாவட்டத்துக்கான உணவு உற்பத்திப் பொருளை அடையாளம் காண வேண்டும்.  ஓடிஓபி உற்பத்திப் பொருள் என்பது விரைவில் அழுகக் கூடிய பொருளாகவோ அல்லது பருப்பு போன்ற உணவுப் பொருளாகவோ அல்லது அந்த மாவட்டத்தில் அதிகம் தயாரிக்கப்படும் உணவுப் பொருளாகவோ அல்லது உணவு சார்ந்த இணை தொழில்பிரிவின் உற்பத்திப் பொருளாகவோ இருக்கலாம்.

பொது உள்கட்டமைப்பு வசதி, பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவு ஆகியன ஓடிஓபி உற்பத்திப் பொருட்களுக்காக வழங்கப்படும்.  மேலும் இந்தத் திட்டமானது வீணாகும் பொருளில் இருந்து தயாரிக்கப்படுபவை, சிறிய அளவிலான வன விளைபொருட்கள் மற்றும் ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் அகியவற்றில் கவனம் செலுத்தும்.

தற்போது இயங்கி வரும் தனிநபர் சிறுஅளவு உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் தங்களது தரநிலையை மேம்படுத்த நினைத்தால், தகுதி வாய்ந்த திட்டத்துக்கான செலவில் கடன் இணைப்பு மூலதன மான்யம் 35 விழுக்காடு என்ற விகிதத்தில் என்பதைப் பெறலாம்.  ஒரு தொழிற்சாலைக்கு ரூ.10 லட்சம் என்ற அதிகபட்ச வரம்பு உண்டு. தொழில் மூலதனத்துக்கும் சிறிய உபகரணங்கள் வாங்குவதற்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆரம்பக்கட்ட மூலதனதாக ரூ.40,000 வழங்கப்படும். எஃப்பிஓ-க்ள் / எஸ்ஹெச்ஜி-க்கள் / உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு மதிப்புக்கூட்டல் சங்கிலித் தொடரில் மூலதன முதலீட்டுக்காக கடன் இணைப்பு மானியம் 35% வரை கிடைக்கும். பொது பதப்படுத்துதல் வசதி, ஆய்வுக்கூடம், சேமிப்புக் கிடங்கு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, பேக்கேஜிங் மற்றும் இன்குபேடிங் மையம் உள்ளிட்ட பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடன் இணைப்பு மானியம் 35% என்ற அளவில் உதவி தரப்படுகிறது. இது எஃப்பிஓ-க்ள் / எஸ்ஹெச்ஜி-க்கள் / கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது அரசுக்குச் சொந்தமான ஏஜென்சிகள் அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாக தொழில் தொகுப்பிடங்களில் நுண்கடன் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்காகத் தரப்படும்.  சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றுக்கான உதவி என்பது நுண்உற்பத்தி தொழில் அலகுகளின் மற்றும் குழுக்களின் பிராண்டுகளை மேம்படுத்த மாநில அரசு அல்லது பிராந்திய அளவில் 50% மானியத்துடன் வழங்கப்படும்.  இந்த உதவியானது தொழில் தொகுப்பிடங்களில் எண்ணற்ற நுண்உற்பத்திப் பிரிவுகளுக்கு பலன் அளிக்கும்.

****



(Release ID: 1635125) Visitor Counter : 292