பிரதமர் அலுவலகம்
உ.பி. வேலைவாய்ப்பு இயக்கத் தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் காணொளி மூலம் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்
Posted On:
26 JUN 2020 4:12PM by PIB Chennai
நண்பர்களே,
வணக்கம்! உங்கள் அனைவருடனும் பேசுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நாம் அனைவரும் சொந்த வாழ்க்கையில் ஏற்றங்களையும், இறக்கங்களையும் கண்டிருக்கிறோம். அதைப் போல் சமூக வாழ்க்கையில், நமது கிராமங்களில், நகரங்களில் வெவ்வேறு வகையான சவால்களையும் சந்தித்திருக்கிறோம். நேற்றைக்குப் பாருங்கள்! சில இடங்களில் இடி மின்னல் தாக்கியுள்ளது. பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதனால், பலர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், உலகெங்கும் மனித குலத்திற்கு இப்படி (கொரோனா தொற்று) மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாருமே நினைக்கவில்லை. இதில் மற்றவர்களுக்கு உதவ முயன்றாலும் இயலாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பாதிப்புக்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
குழந்தையோ முதியவரோ, பெண்களோ ஆண்களோ, நாடோ ஏன் உலகமோ, ஒவ்வொரு தனிநபரும் ஏதாவது பாதிப்புக்கு ஆளாகிறார். இந்த நோயிலிருந்து எப்போது விடிவுகாலம் வரப் போகிறது என்று யாருக்குமே தெரியாத நிலை உள்ளது. ஆனால், விலகியிருப்போம் (Do Gaz Doori) அல்லது தனி நபர் விலகல், முகத்தை மூடிக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் இத்தகைய தீர்வுகளைத்தான் சார்ந்திருக்கவேண்டும்.
நண்பர்களே,
இன்று நீங்கள் எல்லோரும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, உங்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. உங்களின் விழிகள் காட்டும் செய்கை, உங்களது அன்பு எல்லாம் தெரிகிறது. இந்தத் திட்டத்தில் பிரபலமும், துடிப்பும் மிக்க மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இருக்கிறார். மாநில அமைச்சர்கள், மூத்த அலுவலர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் வந்துள்ள நமது நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொழிலாளர் சக்தியை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். தொழிலாளர் சக்தியை ஒன்று திரட்டும் வகையில், “பிரதம மந்திரி ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு இயக்கம்” (Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyan) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இன்றைய தினம், இதே தொழிலாளர்கள் சக்தி தான் “தற்சார்பு உத்தரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கத்துக்கு” (Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan) தூண்டுகோலாக அமைந்துள்ளது. அதாவது, யோகி தலைமையிலான அரசு மத்திய அரசின் திட்டத்தை எண்ணிக்கை அடிப்படையிலும், திறனின் அடிப்படையிலும் விரிவுபடுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கு உ.பி. அரசு பல்வேறு புதிய திட்டங்களைச் சேர்த்ததுடன் நிற்கவில்லை. பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. அத்துடன், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துள்ளது. இரட்டைக் குதிரை (Double Engine) என்று நான் அடிக்கடி சொல்வேனே அதற்கு “தற்சார்பு உத்தரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கம்” (Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan) ஒரு மிகச் சிறந்த உதாரணம் ஆகும். முதலமைச்சர் யோகியும், அவரது குழுவினரும் கடுமையாக உழைப்பதன் மூலம் சாதிப்பதற்கான வாய்ப்பாக இந்தப் பேரிடரை மாற்றியுள்ளனர். மற்ற மாநிலங்களும் இதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பினருமே இதன் மூலம் உத்வேகம் பெறுவர்.
பிற மாநிலங்களும் இதைப் போன்ற திட்டங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். நான் உத்தரப் பிரதேசத்தைச் சேரந்த நாடாளுமன்ற உறுப்பினர். உத்தரப் பிரதேசம் இத்தகைய ஒரு பணியைச் செய்கிறது என்றால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். காரணம், இங்குள்ள மக்களுக்குத் தொண்டு புரிவதற்கு நானும் கடமைப்பட்டவன்.
நண்பர்களே,
இக்கட்டான தருணங்களில் துணிவையும், அறிவையும் காட்டுபவரே வெற்றி பெறுவார். இன்றைய தினம், உலகத்தில் பெரிய பிரச்சினையாக கொரோனா தொற்று ஆகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேச அரசு துணிவையும் அறிவையும் காட்டி, சூழ்நிலையைச் சமாளிக்கிறது. இது பாராட்டத் தக்கது.
அதற்காகவே, உத்தரப்பிரதேசத்தின் 24 கோடி மக்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் செய்த செயல் உலகத்துக்கே சரியான முன்னுதாரணமாகத் திகழ்கிறது. உத்தரப் பிரதேசத்தின் புள்ளி விவரங்கள் உலகின் மிகச் சிறந்த வல்லுநர்களையும் வியப்படையச் செய்யும். உத்தரப் பிரதேச மாநில மருத்துவர்களோ, மருத்துவத் துணைப் பணியாளர்களோ, தூய்மைப் பணியாளர்களோ, காவல் துறையினரோ, ஆஷா (ASHA) தன்னார்வத் தொண்டர்களோ, அங்கன்வாடி ஊழியர்களோ, வங்கி, அஞ்சலகப் பணியாளர்களோ, போக்குவரத்துத் துறையினரோ, சக நண்பர்களோ ஒவ்வொருவருமே முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செலுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் யோகியும் அவரது குழுவினர் அனைவரும் அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரிய வகையில் பணியாற்றுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மிகவும் இக்கட்டான நிலையில் நீங்கள் கையாண்ட வழிமுறைகளை உத்தரப்பிரதேதச மாநிலத்தின் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குடும்பமும் காலம் காலமாக நினைவில் பெருமையோடு போற்றும்.
நண்பர்களே,
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முயற்சிகளும், சாதனைகளும் மிகப் பெரியவை. அதற்குக் காரணம், அது ஒரு மாநிலம் என்பதால் அல்ல, உலகின் பல நாடுகளை விடவும் அளவில் பெரிதாக இருக்கிறது என்பதால் தான். இந்தச் சாதனையை உ.பி. மக்களே தற்போது உணரத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் முழுமையான புள்ளி விவரங்கள் வந்தவுடன், நீங்களே இதை விட வியப்படைவீர்கள்!
நண்பர்களே,
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளைப் பார்ப்போம். இவை 200, 250 நாடுகளுக்கு வல்லரசுகளாகத் திகழ்ந்தவை. இன்றும் உலகை ஆள்பவை. இந்த நான்கு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 24 கோடி! ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமே 24 கோடி. நான்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோரின் மக்கள் தொகைக்கு உ.பி. மாநில மக்கள் தொகை சமம். ஆனால், அந்த நான்கு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரின் உயிரைப் பறித்துள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 600 பேர் மட்டுமே இறந்துவிட்டனர். இருப்பினும் ஒருவர் இறந்தால் கூட அது மிகப் பெரிய சோகமான சம்பவம் என்றே நான் கருதுகிறேன்.
ஆனால், அதே சமயம் நான்கு ஐரோப்பிய நாடுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, பல மடங்கு அதிகம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இத்தனைக்கும் அந்த ஐரோப்பிய நாடுகள் வளர்ந்த நாடுகள் ஆகும். அவர்களுக்குப் போதிய வளஆதாரங்கள் உள்ளன. அரசாங்கங்களும் தங்களது முழு முயற்சிகளை எடுக்கின்றன. இருந்தாலும் மக்களின் உயிர்களைக் காப்பதில் உத்தரப்பிரதேசம் அடைந்த வெற்றியை அந்த நாடுகளால் நினைக்கவும் முடியவில்லை!
நண்பர்களே,
அமெரிக்காவில் உள்ள நிலைமையையும் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள்! அங்கே வளங்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களுக்கும் பற்றாக்குறையே இல்லை! இருந்தாலும் அமெரிக்கா கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி என்பதையும் உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 24 கோடி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு 24 ஆயிரம் பேர் இந்தத் தொற்று நோயால் இறந்துவிட்டனர். உ.பி. மாநிலத்தில் 600 பேரைத்தான் இழந்திருக்கிறோம்.
யோகியின் அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல் போயிருந்தால், அமெரிக்காவைப் போல் இந்த மாநிலத்திலும் பேரழிவு நேர்ந்திருந்தால் 85 ஆயிரம் பேர் இறந்திருப்பர்! ஆனால், அரசின் கடுமையான பணியால் 85 ஆயிரம் பேர் இறக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இன்றைக்கு, நமது குடிமக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது. அது பெரிய அளவில் திருப்தி அளிக்கக் கூடியதுதான். நம் நாட்டின் நம்பிக்கையை அது உயர்த்துகிறது! இல்லையென்றால், பிரக்யாராஜ் என்ற அலாகாபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் பிரதமராக இருக்கும் சமயத்திலேயே கும்ப மேளாவின் போது நெரிசல் ஏற்பட்டு ஆயிரக் கணக்கானோர் உயிரிழக்க நேர்ந்தது என்று பேசும் நிலை வந்திருக்கும். அப்போது அரசுப் பொறுப்பில் இருந்தவர்கள் சாவு எண்ணிக்கையைக் குறைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருப்பார்கள்! தற்போது, உத்தரப் பிரதேச மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது உண்மையில் ஆறுதல் தரக்கூடிய தகவல்.
நண்பர்களே,
ஒரு விஷயத்தை மனத்தில் கொள்ள வேண்டும். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 30, 35 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்திற்கு வந்து குடியேறும் நிலையில் இவையெல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் தங்கிவிட்ட தொழிலாளர்களை உத்தரப் பிரதேச அரசு ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special trains) மூலம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு குடியேறுவோர் மூலம் தொற்று பரவுவதற்கான பெரிய ஆபத்தும் உள்ளது. ஆனால், மாநில அரசு இதை நுட்பமாகக் கையாண்ட முறை மாநிலத்தைப் பெரிய இடர்ப்பாட்டிலிருந்து காப்பாற்றியுள்ளது.
நண்பர்களே,
2017ஆம் ஆண்டுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசு நடத்தப்பட்ட விதம் குறித்து நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. முந்தைய அரசுகள் குறைவான மருத்துவமனைகள், குறைவான படுக்கைகள் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இந்தச் சவாலை எதிர்கொள்ளாமல் போயிருக்கும். ஆனால், முதலமைச்சராக யோகி வந்த பின் அப்படி செய்யவில்லை. அவரும் அவரது அரசும் நிலைமையை அக்கறையோடு கவனிக்கின்றனர். உலகின் பல நாடுகளில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை அவர் கவனத்தில் கொள்கிறார். அதனால், அவரும் அவரது அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
தனி ஒதுக்கல் மையங்களோ (Quarantine Centres) தனிமைப்படுத்தல் வசதிகளோ (isolation facilities) அவற்றையெல்லாம் முழுமையான கவனத்துடன் கையாள்கிறார்கள். யோகி, தனது தந்தையின் மரணம் நேர்ந்த போதும் மக்களோடு இருந்து பணியாற்றியுள்ளார். அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்குக்கும் செல்லாமல் கொரோனா பாதிப்பிலிருந்து மாநில மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளார். வெளி மாநிலங்களிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்குத் திரும்பிய தொழிலாளர்களுக்காக குறுகிய காலத்தில் 60 ஆயிரம் கிராமக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் கிராமப்புறங்களில் தனியொதுக்கல் மையங்களை அமைப்பதில் பெரிய அளவில் துணை புரிந்தன. மாநிலத்தின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக இரண்டரை மாதங்களிலேயே ஒரு லட்சம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
பொதுமுடக்கக் காலத்தில் யோகி அரசு ஏழைகள் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டுள்ளது. இது போல் முன்னெப்போதும் நடந்ததில்லை. “பிரதம மந்திரி ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு இயக்க” (Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyan) திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரேஷன் மூலம் குறுகிய காலத்தில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 15 கோடி ஏழை மக்கள் உணவின்றி தவிக்கக் கூடாது என்று செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், யாரும் பட்டினியோடு உறங்கச் செல்லவில்லை.
இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு, 42 லட்சம் டன்கள் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் இந்த உணவுப் பண்டங்களை அளிக்க ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ஜன் தன் வங்கிக் கணக்கு மூலம் மொத்தம் ரூ. 5000 கோடி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 கோடியே 25 லட்சம் ஏழைப்பெண்கள் பயன் பெற்றுள்ளனர். இது போல் பெரிய அளவுக்கு ஏழைகளுக்கு வேறு எந்த அரசாவது செய்திருக்கிறதா என்று தெரியவில்லை.
நண்பர்களே,
இத்தகைய நிலையிலும், தற்சார்புப் பாதையோ, ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு இயக்கமோ (Garib Kalyan Rojgar Abhiyan) உத்தரப்பிரதேச அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது. ஏழைகள் நலன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருவாயைப் பெருக்கும் வகையில் கிராமங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக வீடுகள் கட்டும் வேலை, சமுதாயக் கழிப்பிடங்களைக் கட்டுதல், கிணறுகள், குளங்களை வெட்டுதல், சாலைகளை அமைத்தல், இணையதளத்துக்கான வடம் பதித்தல் என 25 வகையான பணிகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இன்றைக்கு, தற்சார்பு இந்தியா இயக்கம் (Atmanirbhar Bharat Abhiyan) உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உ.பி. அரசு ஒரு கோடியே 25 லட்சம் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முயன்று வருகிறது. இதில், 60 லட்சம் தொழிலாளர்கள் கிராம மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 40 லட்சம் பேர் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவை தவிர, முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்காக ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்துடன், ஆயிரக் கணக்கான கைவினைஞர்களுக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதன் படி வேலைவாய்ப்பு பெற்றவர்களையும், பலன்பெற்றவர்களையும் மீண்டும் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், முதலமைச்சர் யோகியுடன் நான் தொடர்பில் தொடர்ந்து இருந்து வருகிறேன். வேலைவாய்ப்புகளை வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக மாநிலத்தில பணியாளர்களைக் கண்டறிவதிலும், 30 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் திறன்களைக் கண்டறிவதிலும் அவர்களின் திறன்கள் குறித்த தரவுகளைத் தயாரிப்பதற்காகவும் உத்தரப்பிரதேச அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகச் செயல்படுகிறது என்பதை அறிவேன். உத்தரப்பிரதேச மாநிலத்தின் “ஒரு கிராமம், ஓர் உற்பத்திப் பொருள்” என்ற திட்டம் உள்ளூர் உற்பத்திப் பொருள்களை ஏற்கெனவே மேம்படுத்தி, நல்ல சந்தையை அமைத்து வருகிறது.
தற்போது, உள்ளூர்ப் பொருள்களை நாடு முழுவதும் பிரபலமாக்கி, சந்தைப்படுத்துவதற்காக தற்சார்பு இந்தியா இயக்கம் (Atmanirbhar Bharat Abhiyan) மூலம் தொழிலகங்களின் தொகுப்பு மையங்கள் (Clusters Of Industries) அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உத்தரப்பிரதேசம் நல்ல பலன்களைப் பெறும். ஆடைகள், பட்டுத்துணிகள், தோல் பொருள்கள், செப்புப் பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களுக்கு புதிய சந்தைகள் உருவாகும்.
நண்பர்களே,
தற்சார்பு இந்தியா இயக்கம் (Atmanirbhar Bharat Abhiyan) மூலம் உத்தரப்பிரதேச விவசாயிகள் மிகுந்த பலன்களைப் பெற இருக்கிறார்கள். விவசாயிகளுக்கும், சிறு வர்த்தகர்களுக்கும் மூன்று பெரிய சீர்திருத்தங்கள் பல காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மூன்று சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இதன்படி, விவசாயிகள் தங்களு விளைபொருள்களை உள்ளூர் மண்டிகளுக்கு வெளியே விற்க அனுமதிக்கப்படுவர். அதனால், நல்ல விலை எங்கே கிடைக்கிறதோ அங்கே விவசாயி தனது பொருளை விற்க வழியேற்படுகிறது. விதைக்கும் போதே தனது உற்பத்திப் பொருளுக்கான விலையை விவசாயி தன் விருப்பப்படி நிர்ணயம் செய்து கொள்ளவும் வழியமையும்.
இதன் மூலம் தற்போது உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயி, வறுவல் உற்பத்தி ஆலைகளுடன் (Chips-Making Industry) உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளலாம். மாம்பழ விவசாயிகள் பழச்சாறு நிறுவனங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடலாம். தக்காளி உற்பத்தி செய்வோர் ஜாம் போன்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் உடன்பாடு கொள்ளலாம். இந்த உடன்பாட்டை அவர்கள் விதைக்கும் போதே ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாய உற்பத்திப் பொருளுக்கு விலை சரிகிறதே என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நண்பர்களே,
இவை தவிர, கால்நடை வளர்ப்போருக்காக சில புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கால்நடை, பால்பண்ணை நிறுவனங்களுக்காக இரு தினங்களுக்கு முன்பு, ரூ. 15,000 கோடி அளவுக்கு சிறப்புக் கட்டுமான நிதி (Special Infrastructure Fund) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் படி, பால் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தொடர்பு ஏற்படுத்தப்படும். அதற்காக பால் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சில வசதிகளும் அமைத்துத் தரப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் வரும் காலங்களில் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதற்காக, புத்த மதத்தினருக்காக குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உயர்த்தப்பட்டுள்ளது. பூர்வாஞ்சலில் இதனால் விமானப் போக்குவரத்து வலுப்பெறும். உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பவுத்த பக்தர்கள் உத்தரப் பிரதேசத்திற்கு எளிதில் வந்து செல்ல முடியும். இதனால், ஏராளமான உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இது குறைந்த முதலீட்டில் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
நண்பர்களே,
உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு முக்கியமான பகுதியாகும். இங்கே பாஜக அரசு அமைந்த பிறகு, ஏழைகளுக்கும், கிராமங்களுக்கும் அதிகாரமளித்தல், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் மாநிலத்தின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முக்கியமான திட்டத்திலும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம் வேகமாக முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மூன்றே ஆண்டுகளில் 30 லட்சம் ஏழைகளுக்குத் தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மூன்றாண்டு கடும் நடவடிக்கை காரணமாக, உத்தரப் பிரதேசம் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. மூன்றே ஆண்டுகளில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் உரிய வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. சிசு மரணங்கள் 30 சதவீதம் மூன்றே ஆண்டில் குறைந்துவிட்டது.
நண்பர்களே,
கிழக்கு பூர்வாஞ்சல் பகுதியில் பல ஆண்டுகளாக மூளைக்காய்ச்சல் பெரிய அளவில் தலைவிரித்தாடியது. ஏராளமான குழந்தைகளும் இறந்து போயின. தற்போது, உ.பி. அரசின் நடவடிக்கைகளால் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மரண விகிதமும் 90 சதவீதம் குறைந்துவிட்டது. இத்துடன், பாராட்டுக்குரிய வகையில் பல இடங்களில் மருத்துவக் கல்லூரிகளை அரசு திறந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் போதிய வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்சாரம், சாலை வசதிகள், தண்ணீர் ஆகிய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள், விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளையும் அரசு முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றையெல்லாம் விட முக்கியமாக இந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. சட்டப்படியான ஆட்சி நடைபெறுகிறது. அதன் காரணமாகத்தான் உலக அளவிலான முதலீட்டாளர்கள் உத்தரப்பிரதேசத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் உத்தரப்பிரதேசத்தின் நலனுக்காவே என்று அமைந்துள்ளது. இப்போது கூட, பிற மாநிலங்கள் கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வருகையில், உத்தரப்பிரதேசம் தனது மேம்பாட்டுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சினையால் ஏற்பாடும் அத்தனையையும் வாய்ப்புகளாக உத்தரப்பிரதேசம் பயன்படுத்தி வருகிறது.
இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை அடுத்து, உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கொரோனாவுடனான் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலைக்குச் செல்லுங்கள். ஆனால், ஆறடி தொலைவைக் காப்போம் (Do Gaj Doori) என்ற நடைமுறையைக் கடைப்பிடியுங்கள். முகக்கவசம் அணிந்து வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவி தூய்மையைக் கடைபிடியுங்கள். உயிரைக் காப்பது, பிழைப்பை நடத்துவது ஆகிய இரண்டு வகை போர்களிலும் உத்தரப் பிரதேசம் வெற்றி பெறும். இந்தியாவும் வெற்றி பெறும்.
நன்றி, வணக்கம்!
*****
(Release ID: 1635023)
Visitor Counter : 270
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam