பிரதமர் அலுவலகம்

அருட்தந்தை டாக்டர் ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டனின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் பிரதம மந்திரியின் உரை

Posted On: 27 JUN 2020 11:58AM by PIB Chennai

மாண்புமிகு அருட்தந்தை டாக்டர் ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டன் அவர்களே, அருட்தந்தையர்களே மற்றும் மார் தோமா தேவாலயத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

இந்த மாண்புறு மனிதர்களிடையே உரையாற்றுவதில் நான் பெருமை அடைகிறேன்.  நாம் இங்கே அருட்தந்தை  டாக்டர். ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டனின் 90ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விசேஷமாக ஒன்று கூடியுள்ளோம்.  அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் நீண்ட ஆயுளுடனும் சிறப்பான ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.  நமது சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக தனது வாழ்வையே டாக்டர் ஜோசப் மார் தோமா அர்ப்பணித்துள்ளார்.  குறிப்பாக அவர் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆவர்முடன் ஈடுபட்டுள்ளார்.

நண்பர்களே,

கிறிஸ்துபிரானின் நற்தூதரான செயின்ட் தாமஸின் உன்னதமான குறிக்கோள்களோடு நெருங்கிய தொடர்புடையதாக மார் தோமா தேவாலயம் உள்ளது.  பல்வேறு ஆதார மையங்களில் இருந்து வருகின்ற ஆன்மீகக் கருத்துகளுக்கு இடம் அளிக்கும் வகையில் எப்போதும் திறந்த மனதுடனேயே இந்தியா இருந்து வருகிறது.  செயின்ட் தாமஸின் பங்களிப்பும் அவரைத் தொடர்ந்து இந்திய கிறித்துவ சமுதாயத்தினர் ஆற்றிய பங்களிப்பும் மிகுந்த மதிப்புடையவை.

செயின்ட் தாமஸ் என்றாலே நமக்கு அவரது பணிவுதான் நினைவுக்கு வரும்.  ”நற்குணமான பணிவு என்பது நன்மை தரும் பணிகளில் எப்போதும் பலனையே தரும்” என்று அவர் எப்போதும் கூறுவார், இந்தப் பணிவு என்ற மெய்க்கருத்துடன் மார் தோமா தேவாலயம் நமது சக இந்தியர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த பணியாற்றி வருகிறது.  சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் அவர்கள் சேவை ஆற்றி வருகின்றனர்.  செயின்ட் தாமஸ் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.  மார் தோமா தேவாலயம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியுள்ளது.  தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டமைக்கும் பணியில் தேவாலயம் முன்னின்று பணியாற்றியுள்ளது.

நெருக்கடி கால நிலையை எதிர்த்து இந்த தேவாலயம் போராடி உள்ளது.  மார் தோமா தேவாலயமானது இந்திய மதிப்புகளை அஸ்திவாரமாகக் கொண்டு செயல்படுவது என்பது பெருமை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.  தேவாலயத்தின் பங்களிப்பு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  மார் தோமா தேவாலயத்தின் முன்னாள் மெட்ரோபாலிட்டன் பிலிப்போஸ் மார் கிறிஸோஸ்டோம் அவர்களுக்கு 2018இல் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டு உள்ளது.  அவர் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்.

நண்பர்களே,

சர்வதேச நோய்த்தொற்றுப் பரவலுக்கு எதிராக உலகம் தீவிரமாக போரிட்டுக் கொண்டு இருக்கிறது.  மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உடல்ரீதியான நோயாக மட்டுமே கோவிட்-19 இருந்து விடவில்லை. மேலும் அது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் குறித்த நமது கவனத்தையும் ஈர்க்கிறது.  சர்வதேச நோய்த்தொற்றுப் பரவலானது மனித குலம் என்ற முழுமைக்கும் குணமாதல் தேவைப்படுகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.  நமது புவிக்கோளத்தில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் அதிகரிக்க சாத்தியமான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்.

நண்பர்களே,

நமது கொரோனாப் போராளிகளின் ஆற்றலால் இந்தியா கோவிட்-19க்கு எதிராக வலுவாகப் போராடி வருகிறது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மிக மிகத் தீவிரமாக இருக்கும் என்று சிலர் கணித்து கூறியிருந்தனர்.  ஆனால் ஊரடங்கு காரணமாகவும் அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டம் போன்றவற்றால் பல நாடுகளோடு ஒப்பிட இந்தியாவில் பாதிப்பு குறைவான நிலையிலேயே இருக்கிறது.  இந்தியாவில் நோயில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

கோவிட் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணமாகவோ ஏற்படும் எந்த ஒரு உயிரிழப்பும் துரதிருஷ்டவசமானதுதான்.  கோவிட் காரணமாக ஏற்படும் மரணங்கள் பத்து லட்சம் நபர்களுக்கு 12 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இதே கணக்கீட்டின்படி பார்த்தால் இத்தாலியில் இறப்பு விகிதம் பத்து லட்சம் நபர்களுக்கு 574 என உள்ளது.  அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் இந்த எண்ணிக்கை இந்தியாவைவிட அதிகமாகவே உள்ளது.  85 கோடி மக்கள் வசிக்கின்ற லட்சக்கணக்கான கிராமங்கள் இன்னும் கொரோனா வைரஸ் தீண்டலுக்கு ஆளாகமலேயே உள்ளன.

நண்பர்களே,

மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டங்கள் இதுவரை நல்ல முடிவுகளையே வழங்கி வந்துள்ளன.  அதற்காக நாம் நமது பாதுகாப்பை கைவிட்டுவிட முடியுமா?  முடியாது.  கைவிட்டுவிடவும் கூடாது.  உண்மையில் முன்பிருந்ததை விட இப்போதுதான் கூடுதலான கவனத்துடன் நாம் இருக்க வேண்டும்.  முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது (இரண்டு யார்டு தூரம்), மக்கள் நெருக்கடியாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் தவிர்த்தல், அடிக்கடி கை கழுவுதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம் ஆகும்.

அதே சமயம் நாம் பொருளாதார வளர்ச்சியையும் 130 கோடி இந்தியர்களுடைய வாழ்க்கையின் வளத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.  வர்த்தகமும், தொழிலும் நடைபெற்றாக வேண்டும்.  விவசாயம் செழிக்க வேண்டும்.  கடந்த சில வாரங்களில் இந்திய அரசாங்கம் பொருளாதாரத்தோடு தொடர்புடைய குறுகியகால மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளது.  கடலில் இருந்து விண்வெளி வரை, விளைநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் வரை மக்கள் நலனுக்கேற்ற வளர்ச்சிக்கு உகந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆத்ம நிர்பார் பாரத் என்ற சுய-சார்பு இந்தியாவுக்கான அழைப்பு பொருளாதார வலிமையை உறுதிப்படுத்துவதோடு ஒவ்வொரு இந்தியருக்கும் வளமையையும் வழங்கும்.  ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அமைச்சரவை பிரதம மந்திரியின் மத்சய சம்ப்பட திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.  இந்தத் திட்டம் நமது மீன்வளத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  20,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்தத் திட்டம் மீன்வளத் துறைக்கு உந்துதல் அளிக்கும்.  ஏற்றுமதி மூலம் வருவாயை அதிகரிப்பதும் 55 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்புகளை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். சிறப்பான தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதி மற்றும் மதிப்புக் கூட்டு சங்கிலித் தொடரை வலுவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.  கேரளாவில் இருக்கும் எனது மீனவ சமுதாய சகோதரிகளும் சகோதரர்களும் இந்தத் திட்டத்தால் பலன் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

விண்வெளித் துறையில் வரலாற்று பெருமை மிகுந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  விண்வெளி ஆராய்ச்சித் திட்ட சொத்துகளும் செயல்பாடுகளும் சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை இத்தகைய சீர்திருத்தங்கள் உறுதி செய்யும். தரவுகள் மற்றும் தொழில்நுட்பம் கிடைப்பது மேம்படுத்தப்படும்.  கேரளாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள பல்வேறு இளைஞர்களை நான் பார்க்கிறேன்.  சீர்திருத்தங்களால் இந்த இளைஞர்கள் பலன் பெறுவார்கள்.

நண்பர்களே,

நமது அரசாங்கம் எப்போதும் கூர்ந்து உணரும் நுட்பத்தாலும் இந்தியாவை ஒரு வளர்ச்சி இயந்திரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையாலும வழி நடத்தப்படுகிறது.  தில்லியில் உள்ள அரசு அதிகாரிகளிடம் மட்டுமே கேட்டு நாங்கள் முடிவு எடுப்பதில்லை.  களத்தில் உள்ள மக்களின் பின்னூட்டத்தைத் தெரிந்து கொண்ட பிறகே முடிவு எடுக்கிறோம்.  இந்த மனப்பான்மை தான் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது.  8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போது புகையில்லாத சமையலறையைப் பயன்படுத்துகின்றன.  வீடற்றவர்களுக்கு இருப்பிடம் வழங்குவதற்காக 1.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தரமான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.  ஏழைகளுக்காக, அவர்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்கேயே உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம்.  மத்திய தர வர்க்கத்தினருக்கு எளிதாக வாழ்தல் என்பதை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.  விவசாயிகளுக்காக, குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) அதிகரித்துள்ளோம்.  அவர்களுக்குச் சரியான விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.  இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயத்துறையை விடுவிக்கிறோம்.

பெண்களைப் பொறுத்த வரையில், பல்வேறு திட்டங்கள் மூலமாக அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.  அவர்களுக்கு பேறுகால விடுப்பை நீட்டிப்பது என்பது அவர்களது பதவி உயர்வைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுகிறது.  இந்திய அரசு நம்பிக்கை, பாலினம், சாதி, மதம் அல்லது மொழி அடிப்படையில் யாரையும் பாகுபடுத்தி பார்ப்பதில்லை.  130 கோடி இந்தியர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்.  எங்களுக்கான வழிகாட்டியாக இருப்பது “இந்திய அரசியல் சாசனமே” ஆகும்.

நண்பர்களே,

எல்லோரும் சேர்ந்து இருத்தல் என்பது குறித்து புனித பைபிள் விரிவாகப் பேசுகிறது. இப்போது அதிகாரப்படிநிலையை ஒன்றிணைக்கவும்  நமது நாட்டின் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்து பணியாற்றவும் வேண்டிய நேரம் ஆகும்.  நமது செயல்பாடுகள் எவ்வாறு நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கும்?  என சிந்தித்துப் பாருங்கள்.   நாங்கள் உள்ளூரிலேயே தயாரிப்போம். உள்ளூர் பொருள்களையே வாங்குவோம் என்று இந்தியா இன்று கூறுகிறது . இது பலரின் வீடுகளில் வளமை விளக்கை ஏற்றி வைக்கும்.  நமது தேசத்தை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.  தனக்கென உள்ள மதிப்புகளின் அடிப்படையில் மார் தோமா தேவாலயம் இந்தச் சூழலுக்கு ஏற்ப பணியாற்ற கட்டாயமாக முன்வரும்.  வரும் காலகட்டங்களில் இந்தியாவின் துரிதமான வளர்ச்சியில் இந்த தேவாலயம் முக்கிய பங்காற்றும். 

மீண்டும் ஒரு முறை நான் மாண்புமிகு அருட்தந்தை டாக்டர் ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி! மிக்க நன்றி.


(Release ID: 1634769) Visitor Counter : 291