பிரதமர் அலுவலகம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 21 JUN 2020 7:48AM by PIB Chennai

வணக்கம்!

6-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சர்வதேச யோகா தினம் என்பது ஒற்றுமையின் தினம். உலகளாவிய சகோதரத்துவம் என்ற செய்தியை இந்த நாள் அளிக்கிறது. மனிதசமூகத்தை ஒன்றாக கருதும் நாள். நம்மை ஒருங்கிணைக்கும் ஒன்றுதான் யோகா. இடைவெளியை குறைப்பது யோகா.

உலகம் முழுவதும் நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் “எனது வாழ்க்கை – எனது யோகா” என்ற வீடியோ போட்டியில் மக்கள் கலந்து கொண்டிருப்பது, யோகா மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது! மேலும் இது எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என்பதையும் காட்டுகிறது!

நண்பர்களே,

“வீட்டிலேயே யோகா, குடும்பத்தினருடன் யோகா” என்பதே இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருத்துருவாக உள்ளது. மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்த்து, இன்று நமது வீடுகளில் நமது குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து யோகா பயிற்சிகளை செய்து வருகிறோம். குழந்தைகள் வளரும்போது, இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் யோகா முறையுடன் இணைந்து, ஒட்டுமொத்த வீட்டுக்கும் சக்தி கிடைக்கிறது. எனவே, இந்த ஆண்டு யோகா தினம், உணர்வுப்பூர்வமான யோகா தினமாகவும் திகழ்கிறது; நமது குடும்ப பந்தத்தை அதிகரிக்கும் தினமாகவும் உள்ளது.

 

நண்பர்களே,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, யோகாவின் முக்கியத்துவத்தை உலகம் அதிக அளவில் இன்று உணர்ந்துள்ளது. நமது நோய் எதிர்ப்புச்சக்தி வலுவாக இருந்தால், இந்த நோயை நம்மால் மிகவும் சிறப்பான முறையில் வீழ்த்த முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு வகையான ஆசனங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி முறைகள், நமது உடலின் சக்தியை அதிகரிப்பதுடன், நமது வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்துகின்றன.

ஆனால், கோவிட்-19 வைரஸ், குறிப்பாக நமது மூச்சுக்குழாய் அமைப்பையே தாக்குகிறது. நமது மூச்சுவிடும் அமைப்பை வலுப்படுத்த அதிக அளவில் உதவும் ஒரு வழிமுறை என்பது பிராணாயாமம். அதாவது, மூச்சுப் பயிற்சி. பொதுவாக, மாற்று மூக்குத்துவாரம் வழியாக மூச்சுவிடும் முறையிலான பிராணாயாம பயிற்சி ('Anulom Vilom Pranayam') மிகவும் பிரபலமானது. இது மிகவும் பலனளிக்கக் கூடியதும் கூட. எனினும், பல்வேறு வகையான பிராணாயாமங்கள் உள்ளன. இதில், சீதலி, கபாலபதி, பாரமாரி, பத்ரிகா மற்றும் பல்வேறு முறைகள் உள்ளன.

இந்த அனைத்து வழிமுறைகள் மற்றும் யோகா முறைகள், நமது மூச்சுவிடுதல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பெருமளவில் உதவுகின்றன. எனவே, உங்களது தினசரி பயிற்சியில் பிராணாயாமத்தைச் சேர்க்குமாறு உங்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மாற்று மூக்குத்துவாரம் வழியாக மூச்சுவிடுதலுடன் பல்வேறு வகையான பிராணாயாம வழிமுறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள், இந்த யோகா முறைகளை இன்று கற்றுக் கொள்கின்றனர். இந்த நோயை வீழ்த்துவதற்கு அவர்களுக்கு உதவுவதே யோகாவின் சக்தி.

நண்பர்களே,

நமது தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியை அதிகரிக்கவும் யோகா உதவுகிறது. எனவே, இந்த நெருக்கடியிலிருந்து நம்மால் மீண்டுவருவதுடன், வெற்றிபெறவும் முடியும். யோகா, நமக்கு மனஅமைதியை அளிக்கிறது. கட்டுப்பாடு மற்றும் உடல் திறனை வளர்க்கவும் உதவுகிறது. “முற்றிலும் அமைதியான இடத்திலும் கூட சிறப்பாக செயல்படுபவர் மற்றும் மிகவும் நெருக்கடியான கட்டத்திலும் முற்றிலும் அமைதியாக இருப்பவரே சிறந்த நபர்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

இதுவே, எந்தவொரு நபரின் மிகச் சிறந்த திறனாகும், அதாவது, நெருக்கடியான தருணத்திலும் விட்டுக் கொடுக்காமல், சரிசமமான மனநிலையில் இருப்பது; இந்த காலகட்டத்தில் யோகா பலத்தை அளிக்கிறது. எனவே, யோகா பயிற்சி மேற்கொள்பவர்கள்,  நெருக்கடியின்போது அமைதியை இழக்காதவர்களாக திகழ்வார்கள் என்பதை உங்களால் கண்டு உணர முடியும்.

யோகா என்பது – “சமநிலை யோகா என்று கூறப்படுகிறது” (समत्वम् योग उच्यते’). அதாவது, சாதகமானது- பாதகமானது, வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – வருத்தம் என எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரே மாதிரியாக இருப்பது.

நண்பர்களே,

ஆரோக்கியமான உலகம் என்ற நமது எதிர்பார்ப்பை யோகா வலுப்படுத்துகிறது. இது ஒற்றுமையின் சக்தியாக மாறியுள்ளது மற்றும் மனித பந்தத்தை வலுப்படுத்துகிறது. இது பாகுபாடு காட்டுவதில்லை. இனம், நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் நாடு என எந்த வேறுபாடும் கிடையாது. 

யோகா-வை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு உங்களது சிறிய நேரமும், காலியான இடமும் மட்டுமே தேவை. யோகப் பயிற்சிகள், உடலுக்கு வலிமை அளிப்பதோடு மட்டுமன்றி, நமக்கு முன்னால் உள்ள சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையையும், உணர்வுப்பூர்வமான திறனையும் அளிக்கிறது.

நண்பர்களே,

நமது ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையின் அமைப்பை மாற்றியமைக்கும்போது, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான மனிதசமூகத்தை உலகம் பெறுவதற்கான நாட்கள் தொலைவில் இல்லை. இதனைப் பெறுவதற்கு யோகா நிச்சயமாக நமக்கு உதவும்.

நண்பர்களே,

யோகா-வின் மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் உலகம் நலம் பெறுவது குறித்து நாம் பேசிவரும் நிலையில், கிருஷ்ணரின் கர்மயோகத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பகவத் கீதையில் யோகா குறித்து விளக்கியுள்ள கடவுள் கிருஷ்ணர், योगः कर्मसु कौशलम्' என்று தெரிவித்துள்ளார். அதாவது, திறமையான செயல்பாடுகளே யோகா. வாழ்க்கையில் அதிக தகுதிவாய்ந்தவராக மாறுவதற்கான திறனை யோகா வழங்குகிறது என்பதை இந்த மந்திரம் நமக்கு எப்போதும் போதிக்கிறது. நமது பணிகளை ஒழுங்குடன் மேற்கொள்வதுடன், நமது கடமைகளை நிறைவேற்றுவதும் ஒரு வகையான யோகாதான்.

 

 

நண்பர்களே,

கர்மயோகம் நமக்கு மேலும் விளக்குகிறது. அதில், युक्त आहार विहारस्य, युक्त चेष्टस्य कर्मसु।

युक्त स्वप्ना--बोधस्य, योगो भवति दु:खहा।। என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, யோகா என்பது, சரியான உணவை உண்பது, சரியான விளையாட்டை விளையாடுவது, தூங்குவது மற்றும் எழுந்துகொள்வதில் சரியான பழக்கத்தைக் கொண்டிருப்பது, நமது பணி மற்றும் கடமைகளை சரியாக செய்வது ஆகியவையே ஆகும். இந்த கர்மயோகத்தின் மூலம், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மால் தீர்வுகாண முடியும். அதற்கும் மேலாக, சுயநலமின்றி பணியாற்றுவது, எந்தவொரு சுயநலமும் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் சேவையாற்றுவதும் கூட கர்மயோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்மயோக உணர்வுகள், இந்தியாவின் அடிப்படையிலேயே பின்னிப் பிணைந்துள்ளன. இந்தியாவில் இந்த சுயநலமற்ற உணர்வு இருப்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது.

நண்பர்களே,

யோகா பயிற்சிகள் மற்றும் கர்மயோக உணர்வுகளுடன் நாம் முன்னோக்கிச் செல்லும்போது, தனிநபர்கள், சமூகம் மற்றும் நாடு என்ற அடிப்படையில் நமது சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. இன்று, நாம் அனைவரும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நமது ஆரோக்கியம் மற்றும் நாம் விரும்புபவர்களின் ஆரோக்கியத்துக்காக முடிந்தவரை அனைத்தையும் செய்வோம் என்ற உறுதியை ஏற்க வேண்டும். தெளிவுபெற்ற குடிமகனாக, நாம் குடும்பம் மற்றும் சமூகமாக ஒருங்கிணைந்து முன்னோக்கிச் செல்வோம்.

யோகாவை வீடுகளிலும், குடும்பத்தினருடனும் செய்வதை நமது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு நாம் முயற்சி மேற்கொள்வோம். நாம் இதனை செய்தால், நிச்சயமாக நம்மால் சாதிக்க முடிவதோடு, வெற்றியாளராக வர முடியும். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான யோகா தின வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!

लोकाः समस्ताः सुखिनो भवन्तु॥

ஓம்!



(Release ID: 1634448) Visitor Counter : 293