பிரதமர் அலுவலகம்

மாநில முதல்வர்கள் உடனான மெய்நிகர் மாநாட்டில் பிரதமரின் தொடக்கவுரை

Posted On: 17 JUN 2020 3:58PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

திறப்பின் முதல் கட்டத்திற்குப் பிறகு நாம் முதல் முறையாக இப்போதுதான் சந்திக்கிறோம். நேற்று திறப்பின் முதல் கட்டத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து நாட்டிலுள்ள 21 மாநிலங்கள், துணைநிலை மாநிலங்களுடன் நான் விரிவாக விவாதித்தேன். உண்மையில், ஒரு சில பெரிய மாநிலங்கள், பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமான அளவில் பரவியுள்ளது. ஒரு சில நகரங்களில் அதிகமான மக்கள் கூட்டம், சிறிய வீடுகள், வீதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை, அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் புழக்கம் ஆகியவற்றின் விளைவாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் என்பது மேலும் அதிகமான சவால் மிக்கதாக இருந்தது.

இருந்தபோதிலும்கூட, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கடைபிடித்த ஒழுங்கு, நிர்வாகத்தின் தயார்நிலை, கொரோனாவிற்கு எதிரான போர்வீரர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாக நிலைமை நமது கையை விட்டுச் சென்று விடவில்லை. சரியான நேரத்தில் தொற்றை கண்டறிவது, சிகிச்சை, தகவல் தெரிவிப்பது ஆகியவற்றின் விளைவாக இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு சில நோயாளிகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவு, சுவாசக் கருவிகள் ஆகியவை தேவைப்பட்டன.

சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டதன்  விளைவாக இந்த மாபெரும் அபாயத்தை நம் அனைவராலும் எதிர்த்துப் போராட முடிந்தது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பின்பற்றிய ஒழுங்கின் விளைவாக இந்த வைரஸ் பல மடங்கு பெருகுவதைத் தடுத்து நிறுத்த முடிந்தது. சிகிச்சை, சுகாதாரக் கட்டமைப்பு, பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நாம் இன்று மிகவும் நிலையான நிலையில் உள்ளோம்.

உங்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்திருக்கும். மூன்றே மாதங்களுக்கு முன்னால் மருத்துவ ஊழியர்களுக்கான முழு உடல் கவசங்கள், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை கோரி இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் பெரும் கூச்சல் எழுந்தது. இந்தப் பொருட்களைப் பொறுத்தவரையில் நாம் இறக்குமதியையே முழுமையாக நம்பியிருந்த நிலையில் இந்தியாவிலும் கூட மிகக் குறைவான அளவிற்கே நம்மிடம் இருப்பு இருந்தது. ஆனால் இன்று ஒரு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் முழு உடல் கவசங்களும், அதே அளவிற்கு என் 95 தரமிக்க முக கவசங்களும் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பரிசோதனைக் கருவிகளும் கூட போதுமான அளவிற்கு நம்மிடம் இருப்பு உள்ளன. மேலும் அவற்றை உற்பத்தி செய்யும் திறனும் கூட பெருமளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுவாசக் கருவிகளை வழங்குவது கூட இப்போது பிஎம் கேர் நிதியின் கீழ் தொடங்கியுள்ளது.

இன்று நாடு முழுவதிலும் கொரோனா வைரஸை கண்டுபிடிப்பதற்கென 900க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள், கொரோனா நோயாளிகளுக்கான லட்சக்கணக்கான படுக்கைகள், ஆயிரக்கணக்கில் தனிமைக் கூடங்கள் மற்றும் தனிமை மையங்கள், நோயாளிகளுக்கு வழங்குவதற்கென போதுமான அளவிற்கு பிராணவாயுக் குழாய் ஆகியவை இருப்பில் உள்ளன. இந்த ஊரடங்கின்போது லட்சக்கணக்கான பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட முக்கியமாக, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த வைரஸ் குறித்து முன்பை விட நன்கு அறிந்தவர்களாக மாறியுள்ளனர். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு உள்ளாட்சி நிர்வாகங்கள் இரவு பகலாக பணியாற்றியதன் விளைவாகவே இவை அனைத்தும் சாத்தியமாயின.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை உத்திரவாதப் படுத்துவதாக இந்த அம்சங்கள் இருந்தபோதிலும், அதே அளவிற்கு சுகாதார கட்டமைப்பு, தகவல் அமைப்புகள், மனப்பூர்வமான ஆதரவு, பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே,

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதை கவனத்தில் கொள்கையில், ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்த மிக அதிகமான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் முறையான சிகிச்சை கிடைக்கும்போது மட்டுமே இது நடைமுறைக்கு வர முடியும். இதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நோயாளிகளை சோதிப்பது, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதை நம்மால் செய்ய முடியும். தற்போது நம்மிடமுள்ள சோதனை திறன் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, தொடர்ந்து அது மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டும் வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

கடந்த இரண்டு மூன்று மாத காலத்தில் மட்டுமே பெரும் எண்ணிக்கையில் நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான கூடங்கள், தனிமை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இதன் வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொலைபேசி மூலமான மருத்துவ ஆலோசனை முறையின் முக்கியத்துவமும் அதிகமான அளவிற்கு வளர்ந்துள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வேறு ஏதாவதொரு நோயினால் பாதிக்கப்பட்டவர் என ஒவ்வொரு நோயாளியும் இந்த தொலைபேசி மூலமான மருத்துவ ஆலோசனை முறையின் மூலம் பயனடைவதை உறுதிப்படுத்த, நமது முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

நண்பர்களே,

எந்தவொரு பெருந்தொற்றையும் சமாளிப்பதற்கு  சரியான நேரத்தில் சரியான தகவலைப் பகிர்ந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும் என்பதை நீங்கள் அனைவருமே நன்கு அறிவீர்கள். எனவே உதவி கோரி அழைப்பதற்காக நாம் உருவாக்கியுள்ள உதவி மையங்கள் உதவி செய்ய இயலாதவையாக இருப்பதற்குப் பதிலாக உண்மையிலேயே உதவி செய்யும் திறன்மிக்கவையாக இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் நமது மருத்துவர்களும், துணை ஊழியர்களும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருவதைப் போலவே  தொலைபேசி மூலமான மருத்துவ ஆலோசனை முறையின் மூலம் மூத்த மருத்துவர்கள் வழிகாட்டும் வகையில் அவர்களுக்கு, சரியான தகவல்களை வழங்கி அவர்கள் நோயாளிகளுக்கு வழிகாட்ட இந்த மூத்த மருத்துவர்களின் பெரும் குழுக்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. மேலும் மக்களுக்கான உதவி மையங்களை நடத்தும் வகையில் இளம் தன்னார்வலர்களின் படையையும் நாம் உருவாக்க வேண்டியுள்ளது.

ஆரோக்ய சேது செயலியை அதிகமான அளவில் தரவிறக்கியுள்ள மாநிலங்கள் பெருமளவிற்கு சாதகமான விளைவுகளை எடுத்துக் காட்டுகின்றன. இந்த செயலியின் வீச்சை அதிகரிக்க நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் மேலும் மேலும் அதிகமானோர் இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ள முடியும். நாட்டின் தற்போது பருவ மழை படிப்படியாக வரத் தொடங்கியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பருவ காலத்தோடு கூடவே வரும் சுகாதாரப் பிரச்சனைகளை சமாளிப்பதும் முக்கியமானதாகும். இல்லையெனில் அதுவும் கூட நமக்கு மிகப்பெரும் சவாலாக மாற வாய்ப்புண்டு.

நண்பர்களே,

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் உணர்வு பூர்வமான ஓர் அம்சமும் அடங்கியுள்ளது. இந்த வைரஸ் குறித்த அச்சத்தினால் எழுந்துள்ள அவப்பெயரில் இருந்தும் நமது மக்களை மீட்டெடுப்பதற்கான வழிகளையும் நாம் கண்டெடுக்க வேண்டும். கொரோனாவை தோற்கடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது என்பது மட்டுமின்றி அந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது  என்ற விஷயத்தையும் நாம் மக்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர் அச்சமடைந்துவிடலாகாது.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதே நமது முன்னுரிமை ஆகும். அதே நேரத்தில் நமது மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் போன்ற கொரோனாவிற்கு எதிரான நமது போர்வீரர்களுக்குத் தேவையான வசதிகளையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும் அவர்களின் நலனை கவனித்துக் கொள்வதென்பது நம் நாடு முழுவதின், நம் அனைவரின் பொறுப்பும் ஆகும்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் மக்கள் சமூகத்திலிருந்து வருகின்ற, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மக்களை தொடர்ந்து நாம் உற்சாகமூட்ட வேண்டும். இந்தப் போராட்டம் முழுவதிலுமே அவர்கள் மிகவும் பாராட்டத்தக்க பங்கினை வகித்துள்ளனர். பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் முக கவசம், சமூக இடைவெளி, தனிமனித தூய்மை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது குறித்து நாம் தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டியதும் அவசியமாகும். இந்த விஷயத்தில் எவரொருவரும் அசிரத்தையாக இருக்க நாம் அனுமதிக்கலாகாது.

நண்பர்களே,

இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் மாநிலங்கள் பலவும் மிகச் சிறப்பான பங்கினை வகித்துள்ளன. இந்த மாநிலங்களின் சிறப்பான செயல்முறைகளை நமக்கிடையே பகிர்ந்து கொள்வதும் மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு மாநிலமும் தங்களது அனுபவங்களை இங்கு முன்வைக்கும் என்றும், திறந்த மனதுடன் ஆலோசனைகளை முன்வைக்கும் என்றும் நான் நம்புகிறேன். வரும் நாட்களில் மேலும் சிறப்பான ஒரு செயல் உத்தியை உருவாக்க அது உதவி செய்யும். இப்போது இந்த விவாதத்தை மேலும் முன்னெடுத்து செல்லுமாறு நான் மத்திய உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

*****



(Release ID: 1632297) Visitor Counter : 171