பிரதமர் அலுவலகம்
41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தகரீதியான சுரங்கப் பணிகளுக்காக, 18 ஜூன் 2020 அன்று, நடக்கவிருக்கும் ஏல வழிமுறை துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு மோடி உரையாற்றுகிறார்
Posted On:
17 JUN 2020 7:16PM by PIB Chennai
1. நிலக்கரித் துறையில் ஆத்ம நிர்பார் பாரத்-சுயசார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகம் ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து CM (SP) - நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் MMDR சட்டம் ஆகிய சட்டங்களின்படி 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறையைத் தொடங்க உள்ளது. இந்திய நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக ரீதியிலான சுரங்கப் பணிகளுக்குத் திறந்து விடுவதன் துவக்கமாக இந்த ஏல வழிமுறை அமையும். நாட்டுக்குத் தேவையான எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து, தன்னிறைவை அடைவதற்கும், நாட்டில் தொழில் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் இது உதவும். நிலக்கரியை விற்பதற்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான பணிகளைத் தொடங்குவது என்பது ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பல தொடர் அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்ச்சி 18 ஜூன் 2020 அன்று காலை 11 மணிக்கு மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெறும். NIC, NeGD of MEiTY மற்றும் FICCI மூலமாக பல்வேறு மின்னணு நெட்வொர்க்குகள் மூலமாக இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்
ஏல முறை துவக்கம்
2. மின்துறை ,எஃகு, அலுமினியம், புரைம இரும்பு (ஸ்பான்ஜ் இரும்பு) போன்ற பல்வேறு அடிப்படை தொழில்துறைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலக்கரித் துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவது குறித்த தமது தொலைநோக்கு பார்வை குறித்து மாண்புமிகு பிரதமர் இந்த ஏல நிகழ்ச்சியில் உரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பிப்பார். இந்நிகழ்ச்சியின் போது நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரம் ஆகிய துறைகளுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி உடனிருப்பார்
3. இந்த மிகச் சிறப்பான நடவடிக்கை, தனியார் பங்கை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள், சேவைகள் ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலமாக உற்பத்தி அதிகரிக்கும்; போட்டி உருவாகும்; உற்பத்தித் திறன் உயரும். நிலக்கரி சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற வகைசெய்யும். நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாக வழி வகுக்கும். வர்த்தக ரீதியில் சுரங்கப் பணிகளைத் துவக்குவதன் மூலம், இந்தியா, முதலீட்டாளர்களுக்கு சுரங்கத் துறையில் சுரங்கம், மின் துறை, தூய நிலக்கரி ஆகிய அனைத்து பிரிவுகளையும் முழுமையாகத் திறந்து வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
4. இந்நிகழ்ச்சியின் போது ஃபிக்கி-யின் தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி, வேதாந்தா குழுமத்தின் தலைவர் திரு.அனில் அகர்வால், டாட்டா சன்ஸ் தலைவர் திரு என் சந்திரசேகரன் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.
5. இந்நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பிரபல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், வங்கித்துறை நிபுணர்கள், சுரங்கத் தொழில் முனைவோர்கள், தூதர்கள், அயல் நாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏல முறையின் முக்கிய விதிகள்
6. நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இரண்டு கட்ட மின்னணு ஏல முறை பின்பற்றப்படுகிறது. ஏலம் எடுக்கும் முறை பற்றிய விரிவான விவரங்கள், ஆவணங்கள், மாதிரி ஒப்பந்தங்கள், விரிவான காலக் கெடு, ஏலம் விடப்பட உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
http://cma.mstcauction.com/auctionhome/coalblock/index.jsp இந்த இணைப்பு ஏலம் நடத்துவதற்கான தளத்தை வழங்கும் எம்எஸ்டிசி லிமிடெட் என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
7. நாட்டிற்குக் கிடைக்கும் நன்மைகள்:
- உச்சகட்ட உற்பத்தித்திறன் 225 மெட்ரிக் டன் என்ற திறனை அடைந்தவுடன், இந்த சுரங்கங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான மொத்த நிலக்கரி உற்பத்தி மதிப்பீட்டில் 15 சதவிகிதத்தை அளிக்கும்.
- 2.8 லட்சம் லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். சுமார் 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 33000 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த நிலக்கரி சுரங்கங்கள், மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் அளிக்கும்.
- நூறு சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு, சுரங்கத் துறை செயல்பாடுகளில் சர்வதேச நடைமுறைகளைக் கொண்டுவரும். நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரமயமாக்குதல் நடைபெறும்.
- அனல்மின் உற்பத்தி நிலையம் மற்றும் கேப்டிவ் பவர் பிளான்ட் ஆகியவற்றுக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாக இவை இருக்கும். இதனால் தன்னிறைவை அடைய முடியும். அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும்.
- தொடர்ந்து, நிலக்கரி இருப்பு, தொழில்துறைக்கு அதிக நம்பிக்கையுடன் கிடைக்கும் என்பதை உறுதி செய்வதன் மூலம்: முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா பிரிவு தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் அளிக்க முடியும்.
- தேசிய நிலக்கரி குறியீடு நடைமுறைப்படுத்தப்படுவதால் திறந்த சந்தை கட்டமைப்பு நோக்கி முன்னேற முடியும்.
- தூய்மையான சக்தியை திறமையாகப் பயன்படுத்தும் நடைமுறையை மேம்படுத்துவதன் மூலம், நிலக்கரியை வாயு மயமாக்குதல், திரவ மயமாக்குதல் ஆகியவற்றுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க முடியும்.
----
(Release ID: 1632278)
Visitor Counter : 591
Read this release in:
Bengali
,
Assamese
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam