பிரதமர் அலுவலகம்

முடக்கநிலை நீக்கம் 1.0 அமலுக்குப் பிந்தைய நிலை குறித்து முதலமைச்சர்களுடன் இரண்டாவது கட்டமாக பிரதமர் கலந்துரையாடல்

இப்போதைய பரிசோதனைத் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இதை அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்க வேண்டும்: பிரதமர்
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை கூறுவதன் மூலம் அச்சம், சமூக விலகலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்: பிரதமர்
முடக்க நிலை அமல் காலத்தில் மக்கள் காட்டிய ஒழுங்கு காரணமாக கோவிட்-19 அபரிமிதமாக அதிகரிப்பதைத் தடுத்துள்ளது: பிரதமர்
முடக்கநிலை குறித்த வதந்திகளுக்கு எதிராகப் போராடுவதுடன் முடக்கநிலை நீக்கம் 2.0 அமல் செய்ய திட்டமிட வேண்டும்: பிரதமர்
முதலமைச்சர்கள் கருத்துகளை தெரிவித்தனர், சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும், விழிப்புணர்வு பரப்புதலுக்கு எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்

Posted On: 17 JUN 2020 5:57PM by PIB Chennai

முடக்கநிலை நீக்கம் 1.0 அமலுக்குப் பிந்தைய சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், கோவிட்-19 நோய்த் தொற்றை கையாள்வதற்கான திட்டமிடல் குறித்து விவாதிக்கவும் முதலமைச்சர்களுடனான இரண்டு நாள் கலந்துரையாடலில் இரண்டாவது கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார்.

     பெரிய மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வைரஸ் பரவலின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பது, தனி நபர் இடைவெளி பராமரிப்பதற்கு சிரமம் இருப்பது, பெருமளவில் மக்கள் அன்றாட வாழ்வில் பயணிப்பது ஆகிய காரணங்களால் சவால்கள் அதிகரித்துள்ளன. இருந்தாலும் குடிமக்களின் பொறுமை, நிர்வாகத்தின் ஆயத்த நிலை, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்கள வீரர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, நோய் பரவும் நிலை கட்டுக்குள் இருந்து வருகிறது. உரிய நேரத்தில் தடமறிதல், சிகிச்சை அளித்தல், தகவல் பதிவு செய்தல் காரணமாக, நோய் பாதித்தவர்களில் குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.  முடக்கநிலை காலத்தில் மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்ததால், வைரஸ் பல்கிப் பெருகும் நிலை தடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்துதல்

இப்போது ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க நல்ல சுகாதாரக் கட்டமைப்பும், பயிற்சி பெற்ற அலுவலர்களும் தேவைப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் பேசினார்.  தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் (PPE), முகக் கவச உறைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன்கள் வளர்ச்சி, நோய் கண்டறியும் உபகரணத் தொகுப்புகளைப் போதிய அளவுக்கு பெற்றிருப்பது, இந்தியாவில் தயாரித்த வென்டிலேட்டர்களை PM CARES நிதி மூலம்  வழங்கியிருப்பது,, பரிசோதனை ஆய்வகங்கள் வசதி, லட்சக்கணக்கான கோவிட் சிறப்புப் படுக்கைகள், ஆயிரக்கணக்கான தனிமைப்படுத்தல் மையங்கள், பயிற்சியின் மூலம் போதிய அளவுக்கு மனித வளம் உருவாக்கம் பற்றி பிரதமர் விவரித்தார். சுகாதாரக் கட்டமைப்பு, தகவல் அளிப்பு நடைமுறைகள், உணர்வு ரீதியிலான ஆதரவு மற்றும் பொது மக்கள் பங்கெடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

     மருத்துவப் பரிசோதனை நடத்துவது முதல், வேகமாகத் தடமறிதல், தொடர் கண்காணிப்பு, நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இப்போதுள்ள மருத்துவப் பரிசோதனை வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வசதிகளை அதிகப்படுத்த தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். டெலி மெடிசின் எனப்படும் தொலை மருத்துவத்தின் பயன்கள் பற்றியும், நோயுற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு மூத்த டாக்டர்களைக் கொண்ட பெரிய குழுவை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசினார். உரிய நேரத்தில், சரியான தகவல்களை உதவி மையங்கள் மூலமாக அளிப்பது, உதவி மையங்களை சிறப்பாகக் கையாள்வதற்கு இளம் தன்னார்வலர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

பயம் மற்றும் சமூக விலகலுக்கு எதிராகப் போரிடுதல்

பெருமளவில் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்த மாநிலங்களில், ஆக்கபூர்வமான பலன்கள் கிடைத்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தச் செயலி இன்னும் அதிக அளவில் மக்களைச் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பருவமழை காலங்களில் ஏற்படக் கூடிய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் பேசினார். இந்த வைரஸ் தாக்குதல் குறித்த உணர்வு ரீதியிலான அம்சங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். நோய்த் தாக்கம் ஏற்படுமோ என்ற அச்சம், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி அதிக அளவில் குணம் அடைந்தவர்களை புறக்கணிக்கும் நிலை பற்றி அவர் பேசினார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் முன்கள வீரர்களாக இருப்பவர்களுக்கு, டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டியது தான் நம்முடைய உயர் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றார் அவர். இந்தப் போரில் Jan Bhaagidaari  முக்கியம் என்றும், முகக் கவச உறைகள் பயன்படுத்துவது, தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் குறித்து தொடர்ச்சியாக மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர்கள் பேச்சு

இரண்டு நாள் கலந்துரையாடலில் இரண்டாவது நாளாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, பிகார், ஆந்திரப்பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச்  சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

முடக்கநிலை நீக்கம் 2.0

தங்கள் கருத்துகளைத் தெரிவித்த முதலமைச்சர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் கூட்டாக மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகள் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்று அவர் கூறினார். உரிய முன்னெச்சரிக்கை அம்சங்களுடன், பொருளாதாரச் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி அவர் பேசினார். முடக்கநிலை பற்றிய வதந்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய அவர், நாடு இப்போது முடக்கநிலை நீ்க்கக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். முடக்க நிலை நீக்கத்தின் 2வது கட்டம் பற்றி இப்போது நாம் சிந்திக்க வேண்டும். நமது மக்களின் சிரமங்களைக் குறைந்தபட்ச அளவிற்கு எப்படி குறைக்கலாம் என சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

     கட்டுப்பாடுகள் குறைப்பைத் தொடர்ந்து, பொருளாதார செயல்பாடுகளுக்கான குறியீடுகள் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் தெரிவித்தார். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் கூறினார். கட்டமைப்புகளை ஊக்குவிக்க, கட்டுமானம் தொடர்பான பணிகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சந்தை துறைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர் பட்டியலிட்டார். வரக் கூடிய மாதங்களில், குடிபெயர்ந்த தொழிலாளர்களால் ஏற்படக் கூடிய சவால்களை சிறப்பாகக் கையாள ஆயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பிரதமர் தலைமையில், வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் இதுவரை நாம் வெற்றி பெற்று வந்துள்ளோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றார் அவர். முடக்க நிலையை நீக்கும் போது, நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பாதுகாப்புக்கான சுயக் கவசமாக இருக்கும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து முதலமைச்சர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.

முடக்கநிலை காலத்திலும், அதன் தொடர்ச்சியாக முடக்க நிலை நீக்கம் 1.0 காலத்திலும், நோய்த் தாக்குதல் அதிகரிப்பு வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்தார். முடக்க நிலை காரணமாகக் கிடைத்த ஆக்கபூர்வப் பலன்களை அவர் விவரித்தார். பெருமளவிலான நோய்த் தாக்கம் தவிர்க்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்பட்டது, விழிப்புணர்வு ஏற்படுத்தியது, சுகாதாரக் கட்டமைப்புகளை அதிகரித்தது பற்றி அவர் விளக்கினார். ஒரு லட்சம் பேரில் எவ்வளவு பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது, எவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்த்தால், உலகில் மிகக் குறைந்த பாதிப்பு வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

-----


(Release ID: 1632271) Visitor Counter : 290