பிரதமர் அலுவலகம்

கனடா பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடேயு உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்

Posted On: 16 JUN 2020 10:27PM by PIB Chennai

கனடா நாட்டுப் பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடேயுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று  தொலைபேசியில் உரையாடினார்.

இருநாடுகளிலும் கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இரண்டு தலைவர்களும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சர்வதேச அளவில் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

உலகளவில் மேம்பட்டு வரும் மனிதகுல விழுமியங்கள் உட்பட, கொவிட்டுக்குப் பிந்தைய உலகத்தின் நலனுக்காக இந்தியாவும், கனடாவும் கூட்டுறவுடன் செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டனர்.

உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பன்னோக்கு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய இருவரும், சுகாதார, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் பல்வேறு சர்வதேச தளங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர்.

கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு அனைத்து உதவிகளையும் அளித்து, அவர்கள் இந்தியா திரும்புவதற்கு உதவி செய்த கனடா நாட்டு அதிகாரிகளின் பணியினைப் பிரதமர் திரு மோடி,  மனம் நெகிழ்ந்து பாராட்டினார். இந்தியாவில் உள்ள கனடா நாட்டு குடிமக்கள், அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதற்காக உதவி செய்த இந்திய அரசை பிரதமர் ட்ரூடேயு பாராட்டினார்.

வரும் நாட்களி்ல் இருதரப்பு ஆலோசனைகளைத் தொடர ஒப்புக்கொண்ட இரண்டு தலைவர்களும், குடியாட்சிப் பண்புகளை உடைய மிகப்பெரிய பொருளாதாரங்களான இந்தியாவும், கனடாவும் பல சர்வதேச பிரச்சினைகளில் இயல்பாகவே ஒத்த கருத்துடன் இருப்பதை ஒப்புக்கொண்டனர்.

-----



(Release ID: 1632033) Visitor Counter : 229