உள்துறை அமைச்சகம்

தலைநகரில் கோவிட்-19 நிலவரத்தை முன்னிட்டு, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம்.

Posted On: 15 JUN 2020 4:08PM by PIB Chennai

டெல்லியில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கூறினார். கோவிட்-19 நிலவரம் குறித்து டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய திரு.அமித்ஷா கூறுகையில், பெருந்தொற்றை எதிர்த்துப் போராட நாம் பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.    

நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை, மத்திய உள்துறை அமைச்சர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முடிவுகளை அடிமட்ட அளவில் நேர்மையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். டெல்லி மக்களின் நலனுக்காக, மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த தங்கள் கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்த வேண்டும் என திரு.அமித்ஷா கேட்டுக் கொண்டார். மக்கள் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்துஅனைத்துக் கட்சிகளும் செயல்பட வேண்டும் என திரு.அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். அரசியல் ஒற்றுமை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி தலைநகரில் தொற்று நிலைமை மேம்பட வழிவகுக்கும் என அவர் கூறினார். புதிய தொழில் நுட்பங்களுடன் கோவிட்-19 பரிசோதனையை நாம் மேம்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் கூறினார். ஒன்றாக இருந்து, தொற்றுக்கு எதிரான போரட்டத்தில் வெல்வோம் என திரு.அமித்ஷா வலியுறுத்தினார். 

இந்தக் கூட்டத்தில், ஆம்ஆத்மி கட்சியின் திரு.சஞ்சய்சிங், பா.ஜ.க டெல்லி மாநிலத் தலைவர் திரு.அதேஷ்குப்தா, மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள், கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் திட்டங்களைத் தெரிவித்தனர். மத்திய அரசு, புதுதில்லி அரசு மற்றும் தில்லியின் 3 மாநகராட்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில், புதுதில்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிளுடன் நேற்று நடந்த கூட்டத்தில், தொற்றுக்கு எதிராக டெல்லி மக்களின் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 8,000 படுக்கைகள் வழங்கும் வகையில் தில்லி அரசுக்கு 500 மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் உடனடியாக வழங்குவது, கட்டுப்பாட்டுப் பகுதியில் வீட்டுக்கு வீடு சுகாதாரக் கணக்கெடுப்பு நடத்துவது, கோவிட்-19 பரிசோதனையை அடுத்த 2 நாட்களுக்குள் இரட்டிப்பாக்குவது, 6 நாட்களில் 3 மடங்கு ஆக்குவது ஆகியவை இதில் அடங்கும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் 60 சதவீதப் படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்வது, தனியார் மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்களைக் கண்காணிக்க நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர்.வி.கே.பால் தலைமையில் குழு அமைப்பது, தொலைபேசி வழிகாட்டுதலுக்கு தில்லி எய்ம்ஸ்-ன் கீழ் கோவிட்-19 உதவி எண் ஏற்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.(Release ID: 1631738) Visitor Counter : 196