மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

’கொவிட்-19 சூழலில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் விழிப்புணர்வை அதிகரிக்கும் தகவல் கையேட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.

Posted On: 05 JUN 2020 3:51PM by PIB Chennai

ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே அதிகரிக்கும் வகையில், ‘’ கொவிட்-19 காலகட்டத்தில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் தலைப்பிலான தகவல் கையேட்டை புதுதில்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.  இந்தக் கையேட்டை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) மற்றும் யுனெஸ்கோவின் புதுதில்லி அலுவலகம் உருவாக்கியுள்ளன. இந்தக் கையேடு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஆன்லைன் அடிப்படையான எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைப் போதிக்கும். இது பெற்றோருக்கும், கல்வி கற்பிப்பவர்களுக்கும் குழந்தைகள் எவ்வாறு இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதைக் கற்பிக்க உதவும்.

 

கையேட்டை வெளியிட்டுப் பேசிய திரு. ரமேஷ் பொக்ரியால், ‘’ கொவிட்-19 சூழலில், ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வியில் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தும் பல குழந்தைகளும், ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர்  ஊக்கமூட்டிக் கொள்கின்றனர். இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்  குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளன. வீடுகளில் இருந்தவாறே, ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வியை கற்க  இது வகை செய்கிறது. இணையவெளித் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் தெரிவித்து ,ஆதரவைப் பெறுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும், யுனெஸ்கோவும் கூட்டாக இந்தக் கையேட்டைத் தயாரித்திருப்பது குறித்து அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வை அதிகரிக்கவும், இணையவெளி குற்றங்களுக்கு உரிய நேர நடவடிக்கையை உறுதி செய்யவும் உதவும்’’.


(Release ID: 1629729) Visitor Counter : 275