சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 “நகர வனங்கள்” நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்
நகரங்களில் பழங்கால பாரம்பரியமிக்க கிராமக் காடுகளை நகர்ப்புறக் காடுவளர்ப்புத் திட்டம் மீட்டுருவாக்கம் செய்யும்: திரு பிரகாஷ் ஜவடேகர்.
Posted On:
05 JUN 2020 1:27PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 நகர்ப்புறக் காடுகளை உருவாக்குவதற்கான நகர வனத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. வனத்துறை, நகராட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் ஆகியோரின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பை புதுப்பித்து இந்தத் திட்டமானது செயல்படுத்தப்படும். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை அமைச்சகமானது ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் (UNEP) அறிவிக்கும் மையக்கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும். இந்த ஆண்டின் மையக்கருத்து ”பல்லுயிர்ப்பெருக்கம்” என்பதாகும். தற்போது நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்று காலச்சூழலைக் கருத்தில் கொண்டு அமைச்சகம் இந்த ஆண்டின் மையக்கருத்தோடு கூடுதலாக நகர வனங்கள் என்பதையும் வலியுறுத்தி சுற்றுச்சூழல் தினத்தை மெய்நிகர் முறையில் கொண்டாடுகிறது.
நகரக்காடுகள் குறித்த சிறந்த நடைமுறைகள் என்ற விளக்கப்பிரசுரத்தை வெளியிட்டும் நகர வனங்கள் திட்டத்தை அறிவித்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் உரையாற்றினார். இந்த நகர வனங்கள் நகரங்களின் நுரையீரல் போன்று செயல்படும். நகரத்தில் உள்ள வனப்பகுதிகள் அல்லது உள்ளூர் நகராட்சி அமைப்புகள் ஒப்படைக்கும் காலி நிலத்தில் இந்த நகர வனங்கள் முதன்மையாக அமைக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் என்பதை சிறப்பு கவனத்தில் கொண்ட இந்த ஆண்டின் மையக்கருத்தான இயற்கைக்கான நேரம் என்பதை வலியுறுத்திப் பேசிய திரு ஜவடேகர் “நாம் இயற்கையைப் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்” என்பதே அடிப்படைக் கொள்கை ஆகும் என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் மையக்கருத்தான பல்லுயிர்ப் பெருக்கம் என்பதை வலியுறுத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் “உலக நிலப்பரப்பில் 2.5 சதவிகிதம் நிலப்பரப்பை மட்டுமே கொண்டு அதிலும் பல தடைகளைக் கொண்டிருந்தாலும் இந்தியா உலகின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 8 சதவிகித பங்கை வகிக்கின்றது. உலக மக்கள் தொகையில் 16 சதவிகிதத்தையும், அதே போன்று கால்நடை எண்ணிக்கையையும் பெற்றிருக்கின்ற நாடு நன்னீர் ஆதாரங்களில் 4 சதவிகிதம் அளவை மட்டுமே கொண்டுள்ளது. இவற்றையும் தாண்டி நாம் பெற்றிருக்கின்ற இந்தப் மிகப்பெரும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு, இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்தல் என்ற இந்தியாவின் சிறப்புப் பண்பே காரணம் ஆகும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இணையமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ நாட்டில் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான இன்றியமையாத செயல் உத்தியாக மரம் வளர்ப்பும், மண்ணின் ஈரப்பதமும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மண்வளம் கெடுதல், நீர் மாசுபடுதல், ஆற்றுப்படுகைகளில் நீரின் அளவு குறைதல் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியதோடு இதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையின் (UNCCD), செயல் இயக்குநரான திரு. இப்ராஹிம் தியாவ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNEP), செயல் இயக்குநர் திருமிகு இங்கர் ஆன்டர்சன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் மெய்நிகர் பங்கேற்பாளர்களாகப் பங்கேற்று இருந்தனர்.
(Release ID: 1629706)
Visitor Counter : 425
Read this release in:
Marathi
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam