பிரதமர் அலுவலகம்

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

Posted On: 02 JUN 2020 6:35PM by PIB Chennai

வணக்கம்! 125 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். 125 ஆண்டு காலப்பயணம் மிக நீண்டது. அதில் பல மைல் கற்கள் இருந்திருக்கும்; நீங்கள் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால், 125 ஆண்டுகள் ஒரு அமைப்பை இயக்கிச் செல்வதிலேயே, மிகப்பெரிய விஷயம் அடங்கியுள்ளது. இதிலேயே, மிகப் பெரிய  முன்னுதாரணம் உள்ளது. தற்போது முறைகள் மாறியுள்ளன. 125 ஆண்டுகளாக இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ-யை வலுப்படுத்தியதில் பங்கு பெற்ற முன்னாள் நிர்வாகிகள் உள்பட அனைத்து முன்னோடிகளையும் நான் முதலில் வாழ்த்துகிறேன். நம்மிடம் தற்போது இல்லாதவர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். எதிர்காலத்தில் பொறுப்பு வகிக்க இருப்பவர்களுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் , இது போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் தற்போது புதிய வழக்கமாக  மாறிவிட்டன. ஒவ்வொரு சிரமத்திலும் இருந்து வெளியேற வழி கண்டுபிடிக்கும் மனிதனுக்கு இதுவும் மிகப்பெரிய வலிமையாகும். இந்த நிலையிலும், நாம் ஒரு பக்கம் தொற்றை எதிர்த்துப் போராட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. மறுபுறம், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பக்கம், நாட்டு மக்களின் உயிர்களை நாம் காப்பாற்ற வேண்டியுள்ளது, மறுபுறம், நாட்டின் பொருளாதாரத்தை நிலைபெறச் செய்து வேகப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், நீங்கள் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவது பற்றி பேசத் தொடங்கியுள்ளீர்கள். இது மிகவும் பாராட்டத்தக்கது. நான் ஒரு படி முன்னால் சென்று, நமது வளர்ச்சியை நாம் நிச்சயம் மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூற விரும்புகிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், நான் எவ்வாறு மிகுந்த நம்பிக்கையுடன் இதைக் கூறுகிறேன் என்று உங்களில் சிலர் வியப்படையக்கூடும்.

எனது நம்பிக்கைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நான் இந்தியாவின் திறமையிலும், நெருக்கடி மேலாண்மையிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்இந்தியாவின் திறமையையும், தொழில்நுட்பத்தையும் நான் நம்புகிறேன். நான் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவாற்றலில் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியாவின் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோரை நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அனைத்து தொழில்துறை தலைவர்களையும் நான் நம்புகிறேன். அதனால் தான் நான் சொல்கிறேன் - ஆம்! நாம் நமது வளர்ச்சியை மீண்டும் பெறுவோம். இந்தியா அதன் வளர்ச்சியை மீண்டும் பெறும்.

நண்பர்களே,

நமது வளர்ச்சி வேகத்தை கொரோனா குறைத்திருக்கலாம். ஆனால், இன்று இந்தியா பொது முடக்கத்தைப் புறம் கண்டு, முதல் கட்டத் தளர்வு நிலையில் நுழைந்திருப்பது, நாட்டின் மிகப்பெரிய உண்மையாகும். இந்த முதல் கட்டத் தளர்வில், பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதி திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதிக்குப் பின்னர் மேலும் பல வகையான அமைப்புகள் திறக்கப்படவுள்ளன. வளர்ச்சியைத் திரும்பப் பெறும் நடவடிக்கை இவ்வாறு தொடங்கி விட்டது.

இன்று இத்தகைய நடவடிக்கைகளை, நம்மால் செய்ய முடிந்துள்ளதற்கு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று தனது கூடாரங்களைப் பரப்பி வரும் நிலையில், இந்தியா சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தது தான் காரணமாகும். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் நிலையை, நம்முடைய நிலையுடன் ஒப்பிடும் போதுஇந்தியாவில் பரவலான ஊரடங்கைத் எப்படித் தீவிரமாகக் கடைப்பிடிக்க முடிந்தது என்பதை நாம் காணலாம். கொரோனாவை எதிர்க்க இந்தியா தனது ஆதாரங்களைத் தயார்ப்படுத்தியதுடன்அதன் மக்கள் வளத்தையும் காப்பாற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அடுத்து என்ன என்பதே இப்போதைய கேள்வி. தொழில்துறை தலைவர்களான உங்கள் மனதில் ஒரு கேள்வி நிச்சயம் எழக்கூடும். அரசு இப்போது என்ன செய்யப்போகிறது என்பதுதான் அது. சுயசார்பு இந்தியா இயக்கம் பற்றியும் உங்களுக்கு சில வினாக்கள் இருக்கக்கூடும். இது மிகவும் இயல்பானது மட்டுமல்லாமல் வெளிப்படையானதும் தான்.

நண்பர்களே,

கொரோனாவுக்கு எதிராக, பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஏற்படுத்துதல் நமது மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இதற்காக, உடனடியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. நாட்டுக்கு தொலைநோக்கில் பயன்தரும் வக்கையில், இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே!

 

பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழை மக்களுக்கு உடனடி நன்மைகளை அளிக்கும் வகையில் உதவி புரிந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 74 கோடி பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, இதுவரை, ஏழைக் குடும்பங்களுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், தொழிலாளர்கள் என அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். பொதுமுடக்கக் காலத்தின் போது அரசு ஏழை மக்களுக்கு 8 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியது - அதுவும் இலவசமாக வழங்கியது. மேலும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்களின் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் 24 சதவீதப் பங்கை அரசு ஏற்கனவே செலுத்தியுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் அவர்களது கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன.

 

நண்பர்களே!

சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ஐந்து விஷயங்கள் தேவை: நோக்கம், அனைவரையும் உட்படுத்துதல், முதலீடு, கட்டமைப்பு, புதுமையான கண்டுபிடிப்புகள். சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இவை அனைத்தும் மிளிர்வதை நீங்கள் பார்க்க முடியும். இந்த முடிவுகளை அடுத்து அனைத்துத் துறைகளும் எதிர்காலத்தை சந்திக்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். புதிய வளர்ச்சியை நோக்கிய எதிர்காலத்தில், மிகப்பெரும் அடி எடுத்து வைக்க இன்று இந்தியா தயாராக உள்ளது.

 

நண்பர்களே!

சீர்திருத்தங்கள் என்பது சீரற்ற முறையில் சிதறுண்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. நம்மைப் பொறுத்தவரை சீர்திருத்தங்கள் என்பது முறையாக திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைந்த, ஒன்றோடொன்று தொடர்புடைய, எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு வகுக்கப்பட்டவைகளாகும். நம்மைப் பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது துணிச்சலாக எடுக்கப்படும் முடிவுகள்; அவற்றை தர்க்கரீதியான முடிவுகளுக்கு எடுத்துச் செல்வதும் ஆகும்.

 

IBC, வங்கிகள் இணைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, முகமறியா வருமானவரி மதிப்பீடு போன்ற எதுவானாலும் எந்தவிதமான அமைப்புகளிலும், முறைகளிலும் அரசின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்பதை நாம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளோம். தனியார் நிறுவனங்களுக்கான சூழலை ஊக்குவித்து வந்துள்ளோம். இந்த காரணத்துக்காக நாட்டில் நம்பிக்கை இழந்து விடப்பட்ட பல துறைகளிலும் கொள்கை அளவிலான பல சீர்திருத்தங்களை அரசு செய்து வருகிறது.

 

விவசாயத் துறையைப் பற்றிக் கூற வேண்டுமானால், விடுதலைக்குப் பின்னர் நமது நாட்டில் வகுக்கப்பட்ட சட்டங்களும், விதிமுறைகளும், விவசாயிகளை இடைத்தரகர்களின் இரக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே வைத்திருந்திருக்கின்றன. விவசாயிகள் பயிர்களை எங்கே விற்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களிலும் விதிமுறைகள் மிகக் கண்டிப்பானவையாக இருந்தன. பல காலங்களாக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியை அகற்றவே நாம் விரும்புகிறோம் என்பதை நமது அரசு காண்பித்துள்ளது. விவசாய விளைபொருள் சந்தைக் குழு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதையடுத்து, விவசாயிகளுக்கும் அவர்களது உரிமைகள் கிடைத்துள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்; எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நாட்டின் எந்த மாநிலத்திற்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியும். கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள தானியங்களும், வேளாண் விளைபொருள்களும் மின்னணு வர்த்தகம் மூலமாக தற்போது விற்பனை செய்யப்பட முடியும். விவசாய வர்த்தகத்திற்கு எத்தனை விதமான புதிய வாய்ப்புகள் திறக்கப்பட உள்ளன என்று கற்பனை செய்து பாருங்கள்!

 

நண்பர்களே!

நமது பணியாளர்களை மனதில் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பணி சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார்துறை இதுவரை அனுமதிக்கப்படாத பிரிவுகளும் தற்போது தனியார் துறைக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டே நமது முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சப்கா சாத்; சப்கா விகாஸ்; சப்கா விஸ்வாஸ் என்று அனைவருடனும்; அனைவரது மேம்பாட்டுக்காகவும்; அனைவரது நம்பிக்கையுடனும் என்ற பாதையில் நாம் நடக்கிறோம்.

 

நண்பர்களே!

உலகத்திலேயே மிகப்பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ள மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உங்களைப் போன்ற துணிச்சலான, கடினமாக உழைக்கக் கூடிய வர்த்தகத் தலைவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால் நிலக்கரி எதற்காக வெளியில் இருந்து வரவேண்டும்? எதற்காக நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்? சில சமயங்களில் அரசு குறுக்கே நின்றது; சில சமயங்களில் கொள்கைகள் குறுக்கிட்டன. ஆனால் இப்போது நிலக்கரித்துறையை இந்தத் தடைகளில் இருந்து விடுவிக்கும் பணி தொடங்கிவிட்டது.

 

தற்போது நிலக்கரித் துறையில் வர்த்தக ரீதியில் சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஓரளவு கண்டறியப்பட்ட இடங்களை ஒதுக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. அதே போல் தாதுப் பொருள்களுக்கான சுரங்கங்கள் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து, இந்தத் துறையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

 

நண்பர்களே!

சுரங்கத்துறை, எரிசக்தித் துறை, ஆராய்ச்சி தொழில்நுட்பம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் நமது அரசு பயணிக்கும் திசை -  அனைத்து துறைகளிலும், தொழில் துறையினருக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவதாகவே அமையும்.

 

நாட்டில் பல முக்கிய துறைகளில் தனியார் பங்கேற்பு என்பது உண்மையாகியுள்ளது. விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், அணுசக்தித் துறையில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டுமானாலும், உங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் முழுமையாகத் திறந்து விடப்பட்டுள்ளன.

 

நண்பர்களே!

 

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறையின் லட்சக்கணக்கான நிறுவனங்கள் நமது நாட்டின் பொருளாதார உந்து இயந்திரங்கள் போன்றவை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவை அதிக அளவு பங்காற்றுகின்றன. இந்த பங்கானது சுமார் 30 சதவீதம் ஆகும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் விளக்கத்தைத் தெளிவுபடுத்துமாறு தொழில் துறை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தக் கவலையும் இல்லாமல் வளர்வதற்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு இது வழி வகுக்கும். மேலும்சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் என்னும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவை இனி வேறு பாதைகளில் போக வேண்டியதில்லை. நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கானோரின் நலனுக்காக, ரூ 200 கோடி வரையிலான அரசுக் கொள்முதல்களுக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவில் வாய்ப்புகளை நமது சிறு தொழில்களுக்கு இது வழங்கும். ஒரு வகையில்சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையின் உந்து இயந்திரத்துக்கு சுய-சார்பு இந்தியா தொகுப்பு ஒரு எரிபொருளைப் போன்றதாகும்.

 

நண்பர்களே!

 

இந்த முடிவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு, தற்போதைய உலகின் நிலைமையைப் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிக அவசியமாகும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இதர தேசங்களின் ஆதரவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தற்போது கோருகின்றன. ஒருவருக்கொருவர் இடையேயான தேவை தற்போது உலகத்தில் அதிகரித்துள்ளது. அதே சமயம், எந்த அளவுக்கு பழைய சிந்தனைகள், பழைய பழக்கங்கள் மற்றும் பழைய கொள்கைகள் செயல்திறன் வாய்ந்ததாக இருக்க முடியும் என்று தற்போது எண்ணப்படுகிறது. ஒரு புதிய சிந்தனை தற்சமயம் உருவாவது இயற்கையானதே. இப்படிப்பட்ட நேரங்களில், இந்தியாவின் மீதான உலகத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது மற்றும் ஒரு புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. இந்த கொரோனா நெருக்கடிக்கு நடுவே ஒரு நாடு இன்னொன்றுக்கு உதவுவது கடினமாக இருந்த நேரத்தில், 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இந்தியா உதவியதை நீங்கள் கவனித்தீர்கள்.

 

நண்பர்களே!

 

இந்தியாவை ஒரு நம்பிக்கையான, நாணயமான பங்குதாரராக உலகம் பார்க்கிறது. ஆற்றல் வளம், வலிமை மற்றும் திறன் நமக்கு உள்ளது.

 

இன்று இந்தியாவின் மீது உலகத்துக்கு அதிகரித்துள்ள நம்பிக்கையை, இந்தியாவின் தொழில் துறையினராகிய நீங்கள் அனைவரும் முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது உங்கள் அனைவரின் கடமையாகும். 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையுடன்' நம்பிக்கை, தரம் மற்றும் போட்டித் திறன் இணைந்திருப்பதை உறுதி செய்வது இந்தியத் தொழில் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் கடமையாகும். நீங்கள் இரண்டு அடிகள் முன்னே வைத்தால், அரசு நான்கு அடிகளை முன்னே வைத்து உங்களை ஆதரிக்கும். ஒரு பிரதமராக, நான் உங்களுடன் நிற்பேன் என உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இந்திய தொழில் துறைக்கு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எழுந்து நிற்கும் நேரமிது. என்னை நம்புங்கள்: 'வளர்ச்சியை மீண்டும் பெறுவது' அத்தனை கடினமானது அல்ல. இந்தியத் தொழில் துறையினராகிய உங்களுக்கு ஒரு தெளிவான வழி, அதாவது சுய-சார்பு இந்தியாவுக்கான வழி; தன்னிறைவு இந்தியாவுக்கான வழி தற்போது உள்ளது தான் மிகப்பெரிய விஷயமாகும். நாம் அதிக வலிமையைப் பெற்று உலகை அரவணைப்போம்.

தன்னிறைவு பெற்ற இந்தியா உலகப் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டு, அதற்கு ஆதரவளிக்கும். அதே சமயம், தற்சார்பு இந்தியா என்பது முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் நாம் யாரையும் சார்ந்திருக்க மாட்டோம் என்பதையும் குறிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உலகளாவிய சக்திகளாக மாறக்கூடிய நிறுவனங்களை இந்தியாவில் கட்டமைப்பது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தீர்வுகளைக் கண்டுபிடிக்க மக்களுக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவையே அதன் பொருள்களாகும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும் விதத்தில், சக்தி வாய்ந்த உள்நாட்டு விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கு நாம் தற்போது முதலீடு செய்ய வேண்டும். இந்தப் பிரச்சாரத்தில், இந்தியத் தொழில் கூட்டமைப்பு போன்ற பெரிய அமைப்புகளும் புதிய பங்களிப்போடு முன்வர வேண்டும். உள்நாட்டு உத்வேகத்தின் முதன்மை வீரர்களாய் நீங்கள் தற்போது முன்வர வேண்டும். உள்நாட்டுத் தொழில்கள் மீண்டு எழுவதற்கு நீங்கள் உதவி செய்து, அவற்றின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தொழில்துறை அதன் சந்தையை உலகளாவிய அளவில் விரிவுப்படுத்துவதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

 

நண்பர்களே,

`இந்தியாவில் தயாரித்தது' மற்றும் `உலகிற்காக தயாரித்தது' என்ற வகையில் பொருள்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இப்போது உள்ளது. நாட்டின் இறக்குமதிகளை எப்படிக் குறைப்பது? புதிதாக எந்த இலக்குகளை நிர்ணயிப்பது? அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியை அதிகரிக்க நமக்கான இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். தொழில் துறைக்கு இன்றைய நாளில் நான் இந்தத் தகவலைத் தெரிவிக்க விரும்புகிறேன். நாடும் உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறது.

நண்பர்களே,

இந்தியாவில் உற்பத்திகள் நடப்பதற்கு, மேக் இன் இந்தியா திட்டம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அளிப்பதாக இருக்கும். உங்களைப் போன்ற பல்வேறு தொழில் துறையினரின் அமைப்புகளுடன் ஆலோசித்து பல முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேசை நாற்காலி உள்ளிட்ட பொருள்கள், குளிர்ப்பதனப்பெட்டிகள், தோல் மற்றும் காலணித் துறைகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான குளிர்ப்பதனப்பெட்டிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் நாம் இறக்குமதி செய்கிறோம். கூடிய சீக்கிரத்தில் இதை நாம் குறைத்தாக வேண்டும். அதேபோல, உலகில் அதிக தோல் உற்பத்தியில் நாம் இரண்டாவது நாடாக உள்ளபோதிலும், உலக ஏற்றுமதியில் நமது பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

நண்பர்களே,

நாம் மிக நன்றாக செயல்படுவதற்கு ஏராளமான துறைகள் உள்ளன. கடந்த காலங்களில், வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் உங்களைப் போன்றவர்களின் உதவியுடன் தான் நாட்டில் உருவாக்கப்பட்டன. இப்போது மெட்ரோ ரயில் பெட்டிகளை நமது நாடு ஏற்றுமதி செய்கிறது. அதேபோல, செல்போன்கள் தயாரிப்பு அல்லது பாதுகாப்புத் துறை உற்பத்தி என பல துறைகளில், ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. 3 மாத காலத்துக்குள் நீங்கள் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) பல நூறு கோடி ரூபாய் மதிப்புக்குத் தயாரித்திருக்கிறீர்கள் என்பதை நான் மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது இந்தியாவில் தினமும் 3 லட்சம் பிபிஇ தொகுப்புகள் தயாரிக்கப் படுகின்றன. ஆகவே, இதுதான் நமது நாட்டின் பலம். இந்தத் திறமையை நீங்கள் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். கிராமப்புறப் பொருளாதாரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை முழுமையாக சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சி.ஐ.ஐ. நண்பர்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இப்போது கிராமங்களுக்கு அருகில் உள்ளூர் வேளாண் பொருள்கள் தொகுப்பு உருவாக்கத் தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படுகின்றன. சி.ஐ.ஐ.யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பல வாய்ப்புகள் உள்ளன.

நண்பர்களே,

வேளாண்மை, மீன்வளம், உணவு பதப்படுத்தல், காலணி தயாரிப்பு அல்லது மருந்து உற்பத்தி என எந்தத் துறையாக இருந்தாலும், பல துறைகளில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு நகரங்களில் வாடகை வீடு அளிக்கும் வசதியில் நீங்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் தனியார் துறையினரை பங்குதாரராக நமது அரசு கருதுகிறது. தற்சார்பு இந்தியா இயக்கம் தொடர்பாக உங்களுடைய அனைத்து தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படும். உங்களுடனும், இது தொடர்பான மற்றவர்களுடனும் நான் தொடர்ந்து தொடர்பில்  இருக்கிறேன், இதே நிலை தொடரும். ஒவ்வொரு துறையிலும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். ஒருமித்தக் கருத்தை உருவாக்குங்கள். சிந்தனைகளை உருவாக்குங்கள், பெரிதாகத் திட்டமிடுங்கள். நமது நாட்டின் போக்கை மாற்றக் கூடிய வகையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அதிக அளவில் நாம் மேற்கொள்வோம்.

நாம் ஒன்று சேர்ந்து தற்சார்பான இந்தியாவை உருவாக்குவோம். நண்பர்களே, நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உறுதிமொழி எடுத்துக் கொள்வோம், வாருங்கள். இந்த உறுதியை நிறைவேற்ற உங்களின் முழு ஆற்றலையும் செலவிடுங்கள். உங்களுடன் அரசு இருக்கிறது. நாட்டின் இலக்குகளை எட்ட நீங்கள் துணை நிற்க வேண்டும். நீங்கள் வெல்வீர்கள், நாம் வெல்வோம், இந்த நாடு புதிய உச்சங்களை எட்டும், தற்சார்புள்ளதாக மாறும். 125 ஆண்டுகள் பூர்த்தி செய்தமைக்காக நான் மீண்டும் ஒரு முறை சி.ஐ.ஐ. க்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!!


(Release ID: 1628805) Visitor Counter : 671